நுரையீரல் சளி அகற்ற மருத்துவக் குறிப்புகள்.
சளி பிடித்தால் மனிதனுக்கு மூச்சு விடும் செயலில் ஏற்படும் இடர்பாடுகளால் மிகுந்த அவதிக்கு உள்ளாவர்கள். சாதாரண சளி என்றால் ஒரு வாரத்தில் சரியாகிவிடும். அதுவே “நெஞ்சு சளி” என்றால் அது ஆரம்பிக்கும் அறிகுகள் தெரிவதில்லை. ஒருவாரம் பத்து நாள் என அது உள்ளுக்குள் கோர்த்துக்கொண்டு வெளியில் எந்த ஒரு தொந்தரவையும் கொடுக்காமல் இருக்கும். நாட்பட நாட்பட மூச்சுக்குழல், நுரையீரல் முழுவதும் பரவி சளி கெட்டியாகிவிடும். மூச்சுவிட சிரமாக இருக்கும்.
இருமல் வந்து சளி கெட்டியாக வெளிவரத்தொடங்கும். இரும இரும சளி வெளியேற ஆரம்பித்துவிடும்.எதனால் நெஞ்சு சளி ஏற்பட்டது, என்ன விதமான வைரசால் அது ஏற்பட்டது என்பதை வெளியேறும் சளியை வைத்து ஓரளவுக்கு ஊகிக்கலாம். மஞ்சள், பச்சை நீற வண்ணங்களில் சளி வெளியேறும். சளி பிடித்த பிறகு மூக்கடைப்பு, தலைவலி, உடற்சோர்வும் சேர்ந்தே வந்துவிடும்.
நுரையீரல் சளி அகற்ற வைத்திய குறிப்புகள்:
நுரையீரலில் கோர்த்துக் கொண்டிருக்கும் சளியை போக்க நல்ல சுத்தமான கலப்படமில்லாத செக்கில் ஆட்டப்பட்ட தேங்காய் எண்ணைய் சிறிதளவு எடுத்துக்கொண்டு, அதில் சிறிய துண்டு கற்பூரத்தை போட்டு காய்ச்சி எடுக்க வேண்டும். அந்த கலவையை நெஞ்சில் தடவி வர மார்பு சளி கரைந்து வெளியேறி குணமாகும். மூச்சு விடுதல் எளிதாகும். நெஞ்சு சளி பொருத்தவரை சிறிது குணமானவுடன் விட்டுவிடக்கூடாது. தொடர்ந்து வைத்தியம் செய்தால் மட்டும் முழுவதுமாக அது நுரையீரலை விட்டு வெளியேறி 100% குணம் தெரியும்.
நாட்பட்ட நெஞ்சு சளியை குணமாக்குவதில் சிறிது காலம் ஆகலாம். சற்று கடினமானதும் கூட. ஆனால் முழுமையான வைத்தியம் செய்து கொண்டால் நாட்பட்ட சளி தொந்தரவைக்கூட நம்பிக்கையுடன் எதிர்கொண்டு, சித்த வைத்தியத்தில் நீக்கி நலம் பெறலாம். அதற்கான பத்திய முறைகளை கையாண்டு, குறிப்பிட்ட நாட்களில் குணம் பெறலாம். சிலர் உடல்வாக்கு ஏற்ற வகையில் சில நாட்கள் கூடலாம். குறையலாம். ஆனால் குணம் நிச்சயம் உண்டு.
நுரையீரல் சளி வெளியேற இயற்கை வைத்தியம்
வெந்நீரில் தேன் மற்றும் எலுமிச்சை சாற்றினை கலந்து நன்றாக கலக்கி அதை குடித்து வந்தால் நுரையீரல் சளி கரையும். மஞ்சள் மற்றும் பசும்பால் கலவை மார்பு சளி நீக்கும் அருமருந்து ஆகும். குழந்தைகளுக்கு நெஞ்சு சளி பிடித்திருந்தால், அவர்களுக்கு ஒரு டம்ளர் பாலுடன், ஒரு சிட்டிகை நாட்டு மஞ்சள் பொடி கலந்து கொடுத்து வர நெஞ்சு சளி கரைந்து குணமாகும்.
ஒரு கப் நெல்லிக்காய் சாறு எடுத்து அதில் சிறிதளவு தேன், மற்றும் மிளகுத் தூள் கலந்து அருந்திவர மூக்கடைப்பு, சளி நீங்கி உடல்நலம் பெறலாம். சளியை நீக்குவதில் புதினா இலை மற்றும் மிளகு கலவை பெரும்பங்கு ஆற்றுகிறது. இவ்விரண்டையும் வெறும் வயிற்றில் சேர்த்து மென்று தின்று வர சளி குணமாகும்.
நுரையீரல் சளியை வெளியேற்ற ஆங்கில மருத்துவம்
ஆங்கில மருத்தவத்தைப் பொருத்தவரை சளியை வெளியேற்ற பலவித வைத்திய முறைகள் பயன்படுத்தப்படுகிறது. தொடர்ந்து சளி, இருமல், மூச்சுத் தொந்தரவு இருப்பவர்களுக்கு நுரையீரல் பரிசோதிக்கப்படும். பரிசோதனையின் முடிவுகளின்படி வைத்தியம் செய்யப்படும். ஒரு சிலருக்கு இச்சோதையின்போது சென்சிவிட்டி நியூமோனிடிஸ் என்ற பாதிப்பு இருப்பது கண்டறியப்படும். அது ஒரு நுரையீரலுக்கு ஒவ்வாத காரணிகளால் ஏற்படும் நோய் ஆகும்.
செல்லப்பிராணிகளின் கழிவுகள், புகை, தூசி மற்றும் இன்ன பிற காரணிகளால் இந்த ஒவ்வாமை ஏற்படுகிறது. இந்த ஒவ்வாமை காரணிகள் நுரையீரலைத் தாக்கி “ஹைபர் சென்சிடிவ் நியூமோனிடிஸ்” என்ற கடினமான நுரையீரல் நோய்க்கு காரணமாகிவிடுகின்றன. இதற்கு ஆங்கில மருத்துவத்தில் ஸ்டீராய்டு மருந்துகள் கொடுத்து குணப்படுத்தப்படுகின்றன. இதற்கு 6 முதல் 8 வாரங்கள் ஆகின்றன. தொடர்ந்து இந்நாட்களில் மருத்துவர் கொடுக்கும் இம்மருந்துகளை உட்கொள்ள வேண்டும்.
குறிப்பிட்ட நாட்களில் குணமாகவில்லை என்றால், மேலும் சில பரிசோதனைகள் மேற்கொள்ள வேண்டியிருக்கும்.
நுரையீரல் சளி எடுக்கும் ஆங்கில வைத்திய முறை:
ஒரு சிலருக்கு நுரையீரல் சளியின் தேக்கம் அதிகமாகியிருக்கும்போது அவருக்கு அறுவை சிகிச்சையை மருத்துவர்கள் பரிந்துரைப்பார்கள். அறுவை என்பது நுரையீரல் ஒரு டியூப் போன்ற கருவியை செலுத்தி, அதன் மூலம் அங்கு தேங்கியிருக்கும் சளியை உறிஞ்சுவதாகும். இதற்கு “ப்பராங்கோஸ்கோப்” என்று பெயர். இம்முறையில் நுரையீரலில் உள்ள சளியை முழுவதுமாக அகற்ற முடியாது. எந்த முறையிலும் உள்ளே இருக்கும் சளியை 100% அகற்ற முடியாது. குறிப்பிட்ட அளவு சளியை வெளியேற்றிய பிறகு, அந்த சளி எந்த ஒரு வைரஸ் அல்லது பாக்டீரியாவினால் உருவானது என்பதை பரிசோதித்து, அதற்கு ஏற்ற வகையில் ஆன்டி பயாடிக் மருந்துகள் கொடுத்து குணமாக்கப்படும்.
நுரையீரல் சளியை ஆங்கில மருத்துவத்தில், மருந்து மாத்திரைகள் கொடுத்து மட்டுமே 100% குணப்படுத்த முடியும். எந்த ஒரு அறுவை சிகிச்சையும் மார்பு சளியை முழுவதுமாக எடுக்க உதவாது. இயற்கையிலேயே நுரையீரலின் அமைப்பு அப்படி. உணவு மற்றும் மருந்து மாத்திரைகள் மட்டுமே முழுவதுமாக குணமாக்க உதவக்கூடியவைகள்.
மார்பு சளி நீங்க வைத்திய குறிப்புகள்
மார்பு சளி நீங்குவதற்கு இயற்கை கொடுத்திருக்கும் மருத்துவ உணவுகள் அதிகம். அதில் இஞ்சி மிகச்சிறந்த இயற்கை வைத்தியப் பொருளாக பயன்படுகிறது. இஞ்சியைப் பார்த்தாலே அஞ்சி ஒடுமாம் நெஞ்சு சளி என்ற சொலவடையும் இஞ்சியின் மகத்துவத்தை உணர்த்தும்.
மூச்சிரைப்பு, சளியை நீக்கும் இஞ்சி (வைத்தியமுறை)
இஞ்சிச்சாறு,
வெள்ளை வெங்காயச்சாறு அல்லது எலுமிச்சப் பழச்சாறு (ஏதேனும் ஒன்று)
30 மில்லி சாறு எடுத்து, அதனுடன் 15 மில்லி தேன் கலந்து குலுக்கி, அந்தக் கலவையிலிருந்து 15 மில்லி சாறு எடுத்து குடித்து வர சளியால் வரும் வாந்தி, குமட்டல் போன்றவை குணமாகும்.
இஞ்சிச்சாறு,
மாதுளம் பழச்சாறு,
இவ்விரண்டு சாறுகளையும் 30 மிலி அளவு எடுத்து அதனுடன் 15 மில்லியளவு தேன் கலந்து அந்த கலைவையிலிருந்து 15 மிலி எடுத்து 3 வேளை குடிக்க இருமல், இரைப்பு தீரும்.
ஆஸ்துமா, நுரையீரல், சளி அடைப்பு நீங்க
சளி அடைப்பு நீங்க, ஆஸ்துமா பிரச்னை தீர இஞ்சி அரு மருந்தாக செயல்படுகிறது.
10 கிராம் இஞ்சி,
3 வெள்ளருக்கம் பூ,
6 மிளகு இலைகள்
மிளகு இலைகளை சிதைத்து 1/2 லிட்டர் நீரில் போடவும். அதனுடன் மேற்சொன்ன அளவுகளில் இஞ்சி, வெள்ளருக்கம் பூ போட்டு, அதை 1/4 லிட்டராகக் காய்ச்சி வடிகட்டிகொள்ளவும். அதை காலை , மாலை 2 வேளை குடித்து வந்தால், ஆஸ்துமா, நுரையீரல், சளி அடைப்பு நீங்கும்.
மார்பு சளி நீங்க இஞ்சி வைத்தியம்
இஞ்சியை நன்றாகத் தட்டி, அதை 4 டம்ளர் தண்ணீரில் போட்டு கொதிக்க வைத்து, அதன் பிறகு அந்த நீரை இறக்கி தூய்மையான வெள்ளைத்துணி கொண்டு வடிகட்டி அந்த நீரில் போதுமான அளவு பனங்கற்கண்டு சேர்த்து கலந்து, அந்த நீரை அளவோடு குடித்து வந்தால், மார்பில் சேர்ந்திருக்கும் சளி, அஜீரணம் பிரச்னை குணமாகும்.
நீர்க்கோர்வை, அடுக்குத்தும்மல் நீங்க இஞ்சி
நன்றாக முற்றிய இஞ்சியை தேடி எடுங்கள். அதை முழுவதுமாக தோல் நீக்கி, நன்றாக அரைத்து சாறு எடுக்கவும். அந்த சாற்றினை தெளிய வைத்து அதனுடன் சமஅளவு பசும்பால் கலந்து, அக்கலவையுடன் சம அளவு நல்லெண்ணெய் கலந்து எடுத்துக்கொள்ளவும். அடுப்பை சிம்மில் வைத்து அந்த கலவையை பதமாகக் காய்ச்சி வடிகட்டி ஒரு பாத்திரம் அல்லது கண்ணாடி பாட்டிலில் வைத்துக்கொள்ளவும். அதை எடுத்து தலைக்கு பூசி வாரம் இருமுறை தலை முழுகி வர நீர்க் கோவை நீங்கும். நீர்பீனிசம் போய்விடும். தலைவலி வரவே வராது. கழுத்து நரம்புப் பிசிவு போய்விடும். தலைப்பாரம், அடுக்குத் தும்மல் இருந்த இடம் தெரியாமல் ஓடிவிடும்.
நுரையீரல் சளி அகற்றும் மூலிகை சிற்றரத்தை
பெரிதும் பேசப்படாத சிற்றரசர்கள், எதிர்பாராத நிலையில் வலிமையான பேரரசனுக்கு நெருக்கடி தந்து வீழ்த்துவதைப் போல, மூலிகைகளில் அவ்வளவாகக் கவனிக்கப்படாத சிற்றரத்தை, வலிமைமிக்க கப நோய்களிடம் கடுமையாகப் போராடி அவற்றை வேரோடு அறுத்துத் தள்ளும். மூலிகைகளின் நோய் அகற்றும் தரத்தை, சிரத்தையுடன் உயர்த்திப் பிடிக்கும் அற்புதமான மூலிகை இது.
‘அரத்தை அறுக்காத கபத்தை யார் அறுப்பார்’ என்ற வழக்கு மொழி, கப நோய்களை வெட்டி வீழ்த்தும் அரத்தையின் வீரத்தைச் சொல்கிறது. ‘அரத்தை இம்பூறல் முசுமுசுக்கை கோவை அதிமதுரம் இளக்கும் கோழை’ எனும் கோழையை வெளியேற்றும் மூலிகைத் தொகுப்பில் அரத்தைக்குச் சிறப்பான இடமுண்டு.
ஆரம்ப காலத்தில் மணமூட்டியாகச் சமையலில் இடம்பிடித்த சிற்றரத்தைக்கு மிகப் பெரிய மருத்துவப் பாரம்பரியம் உண்டு.பெயர்க்காரணம்: அரத்தை எனும் பிரிவில், சிற்றரத்தை, பேரரத்தை ஆகிய வகைகள் உள்ளன. ‘சிறிய அரத்தை’ என்றும் ‘அரத்தை’ என்றும் அழைக்கப்படுகிறது. இதன் வேர்க் கிழங்கின் செவ்விய நிறத்தை வைத்து அரத்தை எனும் பெயர் உருவானதாகக் கூறுவார்கள்.
அடையாளம்: பார்வைக்கு இஞ்சிச் செடிபோல் தோற்றமளிக்கும். குறுகிய அகலம் கொண்ட ஈட்டி வடிவ இலைகளை உடையது. வாசனைமிக்க இதன் வேர்,
மருத்துவக் குணங்களுக்குக் காரணமாகிறது. ‘ஜிஞ்சிபெரேசியே’ (Zingiberaceae) குடும்ப உறுப்பினரான சிற்றரத்தைக்கு, ‘அல்பீனியா அஃபிசினாரம்’ (Alpinia officinarum) என்பதே தாவரவியல் பெயர். ‘சினியோல்’ (Cineole), ‘அபிஜெனின்’ (Apigenin), கேம்ஃபெரால் (Kaempferol), ‘ஐஸோராமெடின்’ (Isorhamnetin) போன்ற தாவர வேதிப்பொருட்கள் சிற்றரத்தையில் குடியிருக்கின்றன.
உணவாக: ‘சிற்றரத்தை மூலிகைக் காரக் குழம்பு’, கப நோய்களால் அவதிப்படும்போது எடுத்துக்கொள்ளப்பட வேண்டிய ‘விருந்தாகும் மருந்து’. தனது அடுத்த தலைமுறையினரின் நோய் எதிர்ப்பு ஆற்றலைக் கூட்ட, பாட்டிகளின் சமையல் மெனுவில் அடிக்கடி இடம்பெறும் ரெசிப்பி இந்தக் காரக் குழம்பு!
பாடகர்களின் குரல் வளத்தைப் பொக்கிஷமாகப் பாதுகாக்க, சிற்றரத்தை சேர்த்த மிளகு ரசத்தை அவ்வப்போது உணவில் சேர்த்துக்கொள்ளலாம். சுரம், தலைபாரம் உண்டாகும்போது, ‘சிற்றரத்தை கஷாயம்’ முக்கியமான மருந்தாக அக்காலத்தில் பயன்பாட்டில் இருந்திருக்கிறது. சிற்றரத்தைத் துண்டைக் கஞ்சி வகைகளில் சேர்த்துக் கொதிக்கவைத்துப் பருக, எலும்பு சார்ந்த ரோகங்களின் தீவிரம் குறையும்.
சளி, இருமல் குறிகுணங்கள் குழந்தைகளைத் தாக்காமல் இருக்க, சிற்றரத்தையை நெருப்பில் சுட்டு, தேனில் குழைத்து வழங்கும் வழக்குமுறை, மருத்துவப் பாரம்பரியம் உள்ள கிராமங்களில் இன்றும் பின்பற்றப்படுகிறது. தொண்டை கரகரப்பா! கவலை வேண்டாம், சிறுதுண்டு சிற்றரத்தையை வாயிலிட்டு மெய்மறந்து சுவைத்துப் பாருங்கள், தொண்டைக் குழி மகிழும்!
சிற்றரத்தையை நீரில் ஊறவைத்து வாய் கொப்பளிக்க, வாய், நாக்கில் உண்டாகும் புண்கள் மறைவதோடு சுகாதாரச் சீர்கேட்டால் ஏற்படும் வாய் நாற்றத்துக்கும் தீர்வு கிடைக்கும். கப நோய்களைப் போக்க ‘சிற்றரத்தை மணப்பாகு’ நல்ல பலனைக் கொடுக்கும்.
மருந்தாக: வாந்தியைக் கட்டுப்படுத்தும் வேதிப்பொருட்கள், சிற்றரத்தையில் நிறையவே இருப்பதாக ஆராய்ச்சி முடிவுகள் தெரிவிக்கின்றன. பாக்டீரியாவுக்குள் நுழைந்து உறையைச் சிதைத்து, அவற்றைச் செயலிழக்க வைக்கும் ஆற்றல் இதன் சாரங்களுக்கு இருப்பதாக ஆய்வு பதிவிடுகிறது.
புற்று செல்களின் பரவும் வீரியத்தை இதிலிருக்கும் நுண்கூறுகள் கட்டுப்படுத்துவதாக ஆய்வுகள் உறுதிப்படுத்துகின்றன. எதிர்-ஆக்ஸிகரணி தன்மையுடன் இருப்பதால், பல நோய்களை எதிர்க்கும் ஆற்றலை உடலுக்கு வழங்கும்.
வீட்டு மருந்தாக: அரத்தையைப் பொடி செய்து மூன்று கிராம் அளவு தேனில் குழப்பிக் கொடுக்க, இருமல், சுரம், நுரையீரலில் சேர்ந்திருக்கும் கபம் போன்றவை மாயமாய் மறையும். அரத்தையைத் தண்ணீரில் ஊறவைத்துத் தயாரிக்கப்படும் ஊறல்-பானம், கப நோய்கள் தாக்காமல் பாதுகாக்கும் அரண் போன்றது. பித்த சேர்க்கையுடன் கோழை இறுகும்போது, சிற்றரத்தையுடன் சிறிது கற்கண்டையும் சேர்த்து வழங்கலாம். மூலிகைகளைக் கொண்டு தயாரிக்கப்படும் பற்பொடிகளில் சிற்றரத்தை வேர், நீக்கமற இடம்பிடிக்கிறது.
கார்ப்புச் சுவையுடன் உடலுக்குத் தேவைப்படும் வெப்பத்தைக் கொடுக்கும் சிற்றரத்தை, கபத்தைக் குறைக்கும் பேராயுதம்! குழந்தைகளின் நோய் எதிர்ப்பு ஆற்றலை அதிகரிக்க உதவும் ‘உறை மாத்திரை’, சுர வகைகளுக்கான ‘சன்னிவாத சுரக் குடிநீர்’ போன்ற சித்த மருந்துகளின் செயல்பாடுகளுக்குத் துணை நிற்பது சிற்றரத்தை. கோழையகற்றி, பசித்தூண்டி செய்கைகளைக் கொண்டது.
காய்ச்சல், விடாத இருமல், தலைபாரம் போன்ற குறிகுணங்களுக்கு, சிற்றரத்தை, அதிமதுரம், திப்பிலி, மிளகு ஆகியவற்றை நன்றாக அரைத்து, தண்ணீரிலிட்டு நுரைபொங்கக் கொதிக்கவைத்து, தேனும் பனைவெல்லமும் கலந்து குடிக்க, மாற்றத்தை விரைவில் உணரலாம். சிற்றரத்தை, சுட்ட வசம்பு, சுக்குத் தூள் ஆகியவற்றை வெற்றிலையில் வைத்து, சுண்ணம் தடவுவதுபோல் தேன் தடவிச் சாப்பிட, இறுகிய கோழை குழைந்து வெளியாகும்.
அரிப்பு, நீர்க்கசிவோடு துன்பப்படுத்தும் கரப்பான் நோயின் குறிகுணங்களைக் குறைக்கவும் சிற்றரத்தை சிறந்த மருந்து. ‘கபமுத்தோடஞ் சீதமொடு நேர்ந்தசுரம்… இருமலுந்தீரும் சிற்றரத்தை வன்மருந்தால் தேர்…’ எனும் தேரன் குணவாகடப் பாடல், கபம் தொடர்பான நோய்களுக்கு இதன் பங்கு குறித்து விவரிக்கிறது.
சிற்றரத்தையைப் போல, பேரரத்தைக்கும் (Alpinia galanga) அனைத்து மருத்துவக் குணங்களும் உண்டு. ‘அட்டவகை’ எனும் எட்டு மூலிகைகள் அடங்கிய மூலிகைத் தொகுப்பில் சிற்றரத்தையும் பேரரத்தையும் முதன்மையானவை.
சிற்றரத்தை… அறிந்தவர்களுக்கு அள்ளித்தரும் ஆரோக்கிய வரம்.
+ There are no comments
Add yours