ரஷ்யா நேற்று ஒரே நாள் இரவில் உக்ரைன் மீது அடுத்தடுத்து 40க்கும் மேற்பட்ட ஏவுகணை, ட்ரோன் தாக்குதல்களை நிகழ்த்தியுள்ளது.
உக்ரைன் மீது கடந்த 2022 பிப்ரவரி 24ம் தேதி முதல் ரஷ்யா போர் தொடுத்துள்ளது. சுமார் 2 ஆண்டுகளை நெருங்கியுள்ள நிலையில் போர் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. நேற்று இரவு, திடீரென 40க்கும் மேற்பட்ட ஏவுகணைகள் மற்றும் ட்ரோன் தாக்குதல்களில் ரஷ்யா ஈடுபட்டுள்ளதாக உக்ரைனில் இருந்து தகவல் வெளியாகியுள்ளது.
இதுகுறித்து உக்ரேனிய விமானப்படை இன்று வெளியிட்டுள்ள தகவலில், “உக்ரைனின் கீவ் நகரம் அதிக தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளது. ரஷ்ய ஏவுகணை தாக்குதலை இடைமறித்து அழிக்கும் நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. நேற்று இரவிலிருந்து இதுவரை மொத்தம் 40க்கும் மேற்பட்ட ஏவுகணை தாக்குதல்கள் தொடுக்கப்பட்டுள்ளன. அவற்றில் 8 ஏவுகணைகள் அழிக்கப்பட்டுள்ளன.
கப்பல், பாலிஸ்டிக் ஏவுகணை, விமான எதிர்ப்பு ஏவுகணைகள், ட்ரோன்கள் உள்ளிட்ட பல்வேறு வகையான ஆயுதங்களைக் கொண்டு ரஷ்யா தாக்குதலை தீவிரப்படுத்தியுள்ளது. உக்ரைனின் நவீன போர் முறைகள் மூலம் 20க்கும் மேற்பட்ட தாக்குதல்கள் அதன் இலக்கை அடைய தவறின” என தெரிவித்துள்ளது. வடகிழக்கு சுமி பிராந்தியத்தில் ஏவுகணைத் தாக்குதலில் ஒருவர் படுகாயமடைந்தார். அங்கு 26 கட்டிடங்கள் சேதமடைந்தன என உக்ரைனின் அரசு தெரிவித்துள்ளது.
செர்னிகிவ் வடக்கு பிராந்தியத்தில் சேதம் ஏற்பட்டுள்ளதாக அதன் ஆளுநர் வியாசெஸ்லாவ் சௌஸ் கூறியுள்ளார். பாதிப்பு நிலவரத்தின் முழு விவரங்களை அதிகாரிகள் இன்னும் வெளியிடவில்லை.
மத்திய போல்டாவா பிராந்தியத்தில் வெடிக்காத ஏவுகணை ஒன்று குடியிருப்பு கட்டடத்தின் மீது விழுந்தது என்று ஆளுநர் பிலிப் ப்ரோனின் தெரிவித்துள்ளார். ரஷ்யா, உக்ரைன் மீது மீண்டும் தாக்குதலை தீவிரப்படுத்தியுள்ளதால், உக்ரைனின் அண்டை நாடான போலந்து, தனது வான் பாதுகாப்பை ஆய்வு செய்தது.
+ There are no comments
Add yours