ஹமாஸின் திடீர் தாக்குதல் பயங்கரமானதாகும். அதற்காக பாலஸ்தீன மக்களுக்குத் தண்டனை வழங்குவதை நியாயப்படுத்த முடியாது என ஐ.நா பொதுச்செயலாளர் கண்டித்துள்ளார். இதனைத் தொடர்ந்து அவர் பதவி விலகவேண்டும் என இஸ்ரேல் வலியுறுத்தியுள்ளது.
கடந்த 7-ம் தேதி முதல் இஸ்ரேல் – ஹமாஸ் அமைக்கு இடையே நடந்துவரும் போரில் 1,400 இஸ்ரேலியர்களும், 5,000-க்கும் மேற்பட்ட பாலஸ்தீனர்களும் இதுவரை கொல்லப்பட்டிருக்கிறார்கள். காசா நகரின் மீது இஸ்ரேல் தீவிர தாக்குதல் நடத்திவருகிறது.
இந்த நிலையில் இஸ்ரேல், பாலஸ்தீனம், பிரேசில், பிரான்ஸ் ஆகிய நாடுகளின் வெளியுறவு அமைச்சர்கள் பங்கேற்றிருந்த மத்திய கிழக்கு நாடுகளின் பாதுகாப்பு தொடர்பான ஐ.நா பாதுகாப்பு கவுன்சில் கூட்டம் நடந்தது. இதில் பேசிய ஐ.நா பாதுகாப்பு கவுன்சிலின் பொதுச்செயலாளர் ஆன்டோனியோ குட்டெரெஸ், “இஸ்ரேலின் தொடர் குண்டு வீச்சு பெரும் அபாய ஒலியை ஏற்படுத்துகிறது. சர்வதேச மனித உரிமைச் சட்டம் இந்தப் போரில் மீறப்படுவது மிகுந்த வருத்தத்தை அளிக்கிறது. இந்தச் சட்டத்துக்கு அப்பாற்பட்டவர்கள் யாரும் இல்லை. சர்வதேச சமூகம் இதற்கு உட்பட்டு செயல்பட வேண்டும். உடனடியாக மனிதாபிமான அடிப்படையில் போரை நிறுத்த வேண்டும்.
ஐ.நா முகாம்களில் தஞ்சமடைந்திருக்கும் 6 லட்சம் பாலஸ்தீனர்களை, மனிதக் கேடயங்களாகப் பயன்படுத்தவே பாதுகாக்கப்படுவதாகக் கூறுவது தவறு. 10 லட்சத்துக்கும் அதிகமானோரை தெற்கு காசாவுக்கு பாதுகாப்பாக இடம்பெயரக் கூறிவிட்டு அங்கேயும் இஸ்ரேல் குண்டுகளை வீசுகிறது. கடந்த 56 ஆண்டுகளாகக் குடியேற்றங்களால் அவர்களின் நிலம் தொடர்ந்து ஆக்கிரமிக்கப்படுவதையும், வன்முறையால் பாதிக்கப்படுவதையும் கண்டுவரும் பாலஸ்தீன மக்கள், பொருளாதார நெருக்கடியாலும், வீடுகளை இழந்தும் பாதிக்கப்பட்டுவருகிறார்கள். காரணங்களின்றி ஹமாஸ் இஸ்ரேலைத் தாக்கவில்லை.
ஹமாஸின் திடீர்த் தாக்குதல் பயங்கரமானதாகும். அதற்காகப் பாலஸ்தீன மக்களுக்குத் தண்டனை வழங்குவதை நியாயப்படுத்த முடியாது. அவர்களின் அவலநிலைக்கு அரசியல் தீர்வு கிடைக்கும் என்ற அவர்களின் நம்பிக்கைகள் மறைந்துவருகின்றன. ஆனால், பாலஸ்தீன மக்களின் மனக்குறைகள் ஹமாஸின் பயங்கரமான தாக்குதல்களை நியாயப்படுத்த முடியாது. அதேநேரம் இஸ்ரேலின் தாக்குதல் பாலஸ்தீன மக்கள் பலியாவதை, தண்டனை அனுபவிப்பதை நியாயப்படுத்த முடியாது. பாதுகாப்பான இஸ்ரேலும், ஐ.நா தீர்மானங்கள் மற்றும் முந்தைய ஒப்பந்தங்களின்படி சுதந்திரமான நாட்டை பாலஸ்தீனர்களும் காண வேண்டும்” என்றார்.
ஐ.நா பாதுகாப்பு கவுன்சில் பொதுச்செயலாளரின் இந்தப் பேச்சுக்கு, இஸ்ரேலின் வெளியுறவு அமைச்சர் எலி கோஹன், “நாங்கள் இஸ்ரேலுக்காகவும், முழு சுதந்திர உலகத்துக்காகவும் போராடுகிறோம். ஆனால், ஹமாஸை முற்றிலும் ஒழிக்க அனைத்தையும் செய்ய நாங்கள் உறுதியாக இருக்கிறோம்” எனத் தனது கண்டனங்களைத் தெரிவித்தார்.
அதைத் தொடர்ந்து ஐ.நா-வுக்கான இஸ்ரேல் தூதர் கிலாட் எர்டன் செய்தியாளர்களிடம், “சபையில் பாதுகாப்பு கவுன்சிலின் பொதுச்செயலாளர் கூறிய கருத்துகள் புரிந்துகொள்ள முடியாதவை. அவர் எல்லா அறநெறிகளையும், பாரபட்சமற்ற தன்மையையும் இழந்துவிட்டார். ஏனென்றால், நீங்கள் பயங்கரவாதத்தைச் சகித்துக்கொள்கிறீர்கள்… பயங்கரவாதத்தைப் பொறுத்துக்கொள்வதன் மூலம், நீங்கள் பயங்கரவாதத்தை நியாயப்படுத்துகிறீர்கள். ஹமாஸ், குழந்தைகளின் தலைகளைத் துண்டித்தது, குடும்பங்களை எரித்தது, பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட பெண்கள், கடத்தப்பட்ட குழந்தைகள் எனக் குற்றச்செயல்கள் நீண்டு செல்கின்றன. ஆனால், பொதுச்செயலாளர் இஸ்ரேலையும் பாதிக்கப்பட்டவர்களையும் ஒன்றாகக் குற்றம்சாட்டுகிறார்.
இது வெளிப்படையான அவதூறு. எனவே, அவர் பொதுச்செயலாளர் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என்று நான் நினைக்கிறேன். அவர் உடனடியாக மன்னிப்புக் கேட்காவிட்டால், நாங்கள் அவரை மன்னிப்புக் கேட்க வலியுறுத்துவோம். எங்கள் மக்களுக்கு நடந்த கொடூரமான அட்டூழியங்களைப் பொதுச்செயலாளர் தனது வார்த்தைகளால் எப்படி நியாயப்படுத்த முடியும். கடந்த மூன்று ஆண்டுகளாக நான் இங்கு பணியாற்றிவருவதால், பொதுச்செயலாளரின் பாரபட்சமற்ற தன்மையை நான் பார்த்து உணர்ந்ததில்லை. ஆனால், இன்று அவர் வெளிப்படுத்திவிட்டார்” என தெரிவித்திருக்கிறார்.
இந்த விவகாரத்தில் தற்போது இஸ்ரேல், ஐ.நா பொதுச்செயலாளரையே கடுமையான வார்த்தைகளால் விமர்சித்திருப்பது உலகளவில் பெரும் அதிர்வலைகளை உருவாக்கியுள்ளது.
+ There are no comments
Add yours