சவுதி அரேபியாவிலிருந்து இந்தியாவின் மங்களூருவுக்கு கச்சா எண்ணெய் ஏற்றி வந்த கப்பல் குஜராத் கடல் பகுதியில் வந்துகொண்டிருந்தது. இந்நிலையில் அக்கப்பல் மீது சனிக்கிழமை ட்ரோன் தாக்குதல் நடத்தப்பட்டது. உள்ளூர் நேரப்படி காலை 10 மணியளவில் நடந்த இந்த தாக்குதலினால் கப்பலில் தீப்பற்றியதைத் தொடர்ந்து உடனே அது அணைக்கப்பட்டுவிட்டதாகவும் இங்கிலாந்தை சேர்ந்த UKMTO தெரிவித்தது.
UKMTO என்பது பிரிட்டிஷ் ராணுவ அமைப்பாகவும், கடல்சார் பாதுகாப்பு மற்றும் வணிகக் கப்பல்களின் மிகமுதன்மையான தொடர்புப் புள்ளியாகவும் செயல்படுகிறது. இந்திய கடற்பரப்பில் இருந்து 217 நாட்டிக்கல் மைல் தொலைவில் இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தாக்குதலுக்கு உள்ளான எம்வி சென் புளூட்டோ என்ற கப்பல், லைபீரியா கொடியுடன் காணப்பட்ட நிலையில் ஜப்பானுக்கு சொந்தமான கப்பல் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. அத்துடன் அக்கப்பல் நெதர்லாந்துக்கு சொந்தமான டேங்கர் கொண்டது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இக்கப்பலில் 20 இந்திய பணியாளர்கள் இருப்பதாகவும் கூறப்பட்டது. தகவல் அறிந்ததும் இந்திய கடற்படை மற்றும் கடலோர காவல்படை கப்பல்கள் விரைந்து சென்று எம்வி சென் புளூட்டோ கப்பலுக்கு பாதுகாப்பு அளித்தன.
இந்திய கடலோர காவல்படை வெளியிட்டுள்ள அறிக்கையில், தாக்குதலுக்கு உள்ளான கப்பல் தற்போது சேத மதிப்பீடு மற்றும் பழுதுகளை சரிசெய்வதற்காக மும்பை போஸ்ட் நோக்கி பயணிக்கத் தொடங்கியுள்ளது. கடற்படையைச் சேர்ந்த டோர்னியர் விமானம் கப்பலுடன் தொடர்பை ஏற்படுத்திக் கொண்டு அப்பகுதியை கண்காணித்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்திய கடலோட காவல்படையின் கப்பலான விக்ரம் பாதிக்கப்பட்ட கப்பலை அழைத்துச் செல்லும் என்றும் கடலோர காவல்படை செயல்பாட்டு மையம் நிலைமையை கண்காணித்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தத் தாக்குதலின் பின்னணியில் யார் உள்ளனர் என்பது உள்ளிட்ட விவரங்கள் குறித்து இந்திய கடற்படை விசாரணையை தொடங்கியுள்ளது. இதற்கிடையே இத்தாக்குதல் ஈரானிலிருந்து நடத்தப்பட்டதாக அமெரிக்க கடற்படை தெரிவித்துள்ளது. ஈரான் மீது அமெரிக்கா நேரடியாக குற்றம்சாட்டுவது இதுவே முதல்முறை எனக் கூறப்படுகிறது.
எம்வி சாய்பாபா என்ற இந்திய கப்பல் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டதாக அமெரிக்கா தெரிவித்த நிலையில் அது இந்திய கப்பல் அல்ல என்றும் கபோன் நாட்டுக்கு சொந்தமானது என்றும் இந்தியா கூறியுள்ளது. ஈரான் ஆதரவுடன் ஏமன் நாட்டிலிருந்து செயல்பட்டு வரும் கிளர்ச்சிக்குழுவான ஹவுத்தி அண்மைக்காலமாக செங்கடல் பகுதியில் தாக்குதல் நடத்தி வரும் நிலையில் இதன் காரணமாக உலக சரக்கு கப்பல் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
+ There are no comments
Add yours