இஸ்ரேலுக்கும் ஹமாஸுக்கும் இடையிலான போர் தீவிரமடைந்து இன்று 15வது நாள் நீடித்து வரும் நிலையில், 15 நாட்களுக்குப் பின், எகிப்தின் ராஃபா எல்லை வழியாக பெரிய ட்ரக்குகள் மூலமாக நிவாரணப் பொருட்கள் காசாவுக்கு இன்று வந்துசேர்ந்தது.
பாலஸ்தீனத்தின் காசாவில் இருக்கும் ஹமாஸ் அமைப்பு அக்.7 சனிக்கிழமையன்று ஆயிரக்கணக்கான ராக்கெட் குண்டுகளை வீசி இஸ்ரேல் மீது தாக்குதலை நடத்தியது. அன்றைய நாளிலிருந்து இன்று வரை, ஹமாஸ் – இஸ்ரேல் இடையேயான போரால் இருதரப்பில் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர், பலர் காயமடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.
கடந்த சில நாட்களுக்கு முன், காசா நகரில் உணவு, நீர், மின்சாரம் மற்றும் எரிபொருள் விநியோகங்களைத் நிறுத்தியது. இதனால், பாலஸ்தீனத்தின் ஹமாஸுக்கு எதிராக, நடந்து கொண்டிருக்கும் ஸ்ரேலின் பதிலடித் தாக்குதல்கள் காசாவில் மனிதாபிமான நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில், நட்பு நாடான அமெரிக்காவின் கோரிக்கையைத் தொடர்ந்து, இஸ்ரேல் உதவி செய்வதாக ஒப்புக்கொண்டதை அடுத்து, எகிப்தின் ராஃபா எல்லை திறக்கப்பட்டது. காசாவுக்கு செல்ல எகிப்தின் ராஃபா மட்டுமே ஒரு வழி என்பது குறிப்பிடத்தக்கது. முன்னதாக, காசாவில் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்காக உலக சுகாதார அமைப்பின், மருந்து பொருட்கள் ஏற்றப்பட்ட விமானம் கடந்த 15ம் தேதி எகிப்தின் எல் அரிஷ் விமான நிலையம் வந்தடைந்தது.
பின்னர், டன் கணக்கிலான உதவி பொருட்களை ஏற்றப்பட்டிருந்த 100-க்கும் மேற்பட்ட ட்ரக்குகள் காசாவுக்குள் நுழைய, எகிப்தின் ரஃபா எல்லையில் காத்திருந்தன. இதற்கிடையில், எல்லையில் நிறுத்தப்படிருந்த ட்ரக்குகளை பார்வையிட, நேற்று ஐ.நா.வின் துணைப் பொதுச்செயலாளர் மற்றும் அவசரகால நிவாரண ஒருங்கிணைப்பாளர் மார்ட்டின் கிரிஃபித்ஸ் சென்றார்.
அப்போது, உதவி பொருட்களை ஏற்றி வரப்பட்ட ட்ரக்குகளை வரவேற்று, ‘இவை வெறும் லாரிகள் அல்ல, அனைத்தும் உயிர் நாடிகள்’ என்று கவலை தெரிவித்ததோடு, இது கடைசியாக இருக்கக்கூடாது என்று வேண்டிக்கொள் விடுத்துள்ளார்.
இந்நிலையில், போர் பதட்டத்திற்கு மத்தியில் ஒருவழியாக, இன்று (21ம் தேதி) சனிக்கிழமை முதல்முறையாக எகிப்தின் ரஃபா எல்லை திறக்கப்பட்டு, உதவி பொருட்களை கொண்டு வரிசைகட்டி நின்று கொண்டிருந்த ட்ரக்குகள் காசாவிற்குள் நுழைந்தது.
மனிதாபிமான உதவிகளுடன் ட்ரக்குகள் ரஃபா எல்லைக்குள் நுழைந்த பிறகு, இஸ்ரேலால் காசாவுக்குள் செல்ல முடியும் ஒரே ஒரு குறுக்குவழி மீண்டும் மூடப்பட்டது. இன்று காஸாவுக்குள் நுழைந்த அந்த 20 உதவி ட்ரக்குகளில் மருந்து, மருத்துவ உபகரணங்கள் மற்றும் குறைந்த அளவு உணவு ஆகியவை அடங்கும் என்று ஹமாஸ் ஊடக அலுவலகத்தின் அதிகாரி ஒருவர் தகவல் தெரிவித்துள்ளார்.
+ There are no comments
Add yours