பாகிஸ்தானில் சமீபத்தில் தான் தேர்தல் நடந்து முடிந்தது. அதில் முறைகேடுகள் நடந்தது என்று எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன. இந்த நிலையில் தேர்தலில் முறைகேடுகள் நடந்தது உண்மை தான் என்று தெரிவித்து தேர்தல் அதிகாரி ஒருவர் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
பாகிஸ்தானில் சமீபத்தில் நடந்த பொதுத் தேர்தலில் எந்தவொரு கட்சிக்கும் பெரும்பான்மைக்குத் தேவையான இடங்கள் கிடைக்கவில்லை. முன்னாள் பிரதமர் இம்ரான் கானின் பிடிஐ கட்சியின் சின்னம் முடக்கப்பட்ட நிலையில், அவரது கட்சியினர் சுயேச்சையாக களமிற்கி 93 இடங்களில் வென்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தனர். ஆனால் அடுத்தடுத்த இடங்களைப் பெற்ற 75 இடங்களை பிடித்த நவாஸ் ஷெரீப், 54 இடங்களை பிடித்த பிலாவல் பூட்டோ கட்சிகள் இணைந்து ஆட்சியைப் பிடித்தன.
இந்தத் தேர்தலில் முறைகேடு நடந்ததாக இம்ரான் கான் கட்சியினர் குற்றஞ்சாட்டினர். இது தொடர்பாக அவர்கள் பல்வேறு இடங்களில் போராட்டமும் நடத்தி வருகின்றனர். இந்த சூழலில்தான் பாகிஸ்தானின் தலைமைத் தேர்தல் ஆணையரும், தலைமை நீதிபதியும் தேர்தலில் வாக்கெடுப்பில் மோசடியில் ஈடுபட்டதாகப் பாகிஸ்தான் மூத்த தேர்தல் அதிகாரி அதிகாரி ஒருவர் குற்றம் சாட்டி தனது பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளார்.
தேர்தல் அதிகாரியான ராவல்பிண்டி முன்னாள் கமிஷனர் லியாகத் அலி சத்தா இந்தக் கருத்துகளைக் கூறியுள்ளார். இது தொடர்பாக பேசிய அவர், “இந்த தவறுகளால் நான் எனது பதவியை ராஜினாமா செய்கிறேன். தலைமைத் தேர்தல் ஆணையர் மற்றும் தலைமை நீதிபதிக்கும் இதில் தொடர்பு இருக்கிறது.. நாட்டின் முதுகில் குத்திவிட்டு யாராலும் நிம்மதியாகத் தூங்க முடியாது. நான் செய்த அநீதிக்கு நான் தண்டிக்கப்பட வேண்டும், இந்த அநீதியில் ஈடுபட்ட மற்றவர்களும் தண்டிக்கப்பட வேண்டும்.
இந்த விவகாரத்தில் எனக்குப் பயங்கரமாக அழுத்தம் கொடுத்தார்கள். ஒரு கட்டத்தில் தற்கொலை செய்து கொள்ளலாமா என்று கூட நினைத்தேன். ஆனால், கடைசியில் பொதுமக்களிடம் இதை சொல்லலாம் என முடிவு செய்துவிட்டேன். இதன் காரணமாகவே இப்போது உங்களிடம் இதைக் கூறுகிறேன். அனைத்து அதிகாரிகளிடமும் நான் ஒன்றை மட்டும் கேட்டுக்கொள்கிறேன். தயவு செய்து இந்த அரசியல்வாதிகள் சுயலாபத்திற்காக எதையும் செய்யாதீர்கள்” என்று அவர் தெரிவித்தார். இந்த விவகாரம் இப்போது பாகிஸ்தானில் பெரும் பூதாகரமாகியிருக்கிறது.
+ There are no comments
Add yours