“ஈரான் அச்சுறுத்தலை எதிர்கொள்ள நாங்கள் பிராந்திய ஒருமைப்பாட்டை ஏற்படுத்துவோம். தகுந்த நேரத்தில் ஈரான் உரிய விலை கொடுக்க வேண்டியிருக்கும்” என்று இஸ்ரேல் அமைச்சர் ஒருவர் கூறியுள்ளதால், இந்த மோதல் போக்கானது இப்போதைக்கு முடிவுக்கு வந்துவிட்டதாகக் கூறப்படுகிறது.
முன்னதாக, இஸ்ரேல் மீது ஈரான் நேற்று (ஞாயிறு) காலை சுமார் 300 ஏவுகணைகள் மற்றும் ட்ரோன் குண்டுகளை வீசியது. சுமார் 5 மணி நேரம் நடந்த இந்தத் தாக்குதலில் 99 சதவீதத்தை நடுவானில் இடைமறித்து அமெரிக்க மற்றும் இஸ்ரேலியப் படைகள் அழித்தன. இந்த தாக்குதல் 3-ம் உலகம் போருக்கு வழிவகுக்கும் என இணையவாசிகள் பலர் அச்சம் எழுந்த நிலையில், இஸ்ரேலின் நிலைப்பாடு சில கேள்விகளை எழுப்புவதாக அமைந்துள்ளன.
‘தி இண்டிபெண்டன்ட் ’பத்திரிகைக்கு இஸ்ரேல் அமைச்சர் பென்னி கான்ட்ஸ் அளித்தப் பேட்டியில், “ஈரான் அச்சுறுத்தலை எதிர்கொள்ள நாங்கள் பிராந்திய ஒருமைப்பாட்டை ஏற்படுத்துவோம். தகுந்த நேரத்தில் ஈரான் உரிய விலை கொடுக்க வேண்டியிருக்கும்” என்று தெரிவித்துள்ளார். இதனைச் சுட்டிக்காட்டி இஸ்ரேல் இந்த மோதலுக்கு இப்போதைக்கு முற்றுப்புள்ளி வைக்கிறது எனக் கொள்ளலாம் எனக் கூறப்படுகிறது. ஏற்கெனவே தெஹ்ரானும் அடுத்தக்கட்ட தாக்குதல் பற்றி எதுவும் தெரிவிக்கவில்லை.
அமெரிக்கா கைவிரித்ததா? – இவ்வாறாக ஈரானின் தாக்குதலுக்கு இஸ்ரேல் உடனடியாக பதிலடி கொடுக்கப் போவதில்லை என்ற நிலைப்பாட்டின் பின்னணியில் அமெரிக்காவின் கைவிரிப்பு இருப்பதாக சொல்லப்படுகிறது. ஏற்கெனவே ரஷ்யா – உக்ரைன் போரில் அமெரிக்கா பெருமளவில் ஆயுத, நிதி உதவிகளை உக்ரைனுக்கு செய்துவருகிறது. இந்தச் சூழலில், ஈரானுக்கு பதிலடி கொடுப்பதில் இஸ்ரேலுக்கு உதவ அமெரிக்கா முன்வர மறுத்துவிட்டதாகத் தெரிகிறது.
ஆகையால், அமெரிக்காவின் உதவியில்லாமல் ஈரானை தாக்கினால் மத்திய கிழக்கு பிராந்தியம் முழுவதும் போர் படரும் என்பதாலும் இஸ்ரேல் அமைதி காக்கிறது எனக் கூறப்படுகிறது.
காசா மீதான தாக்குதல் கடந்த அக்டோபர் 7-ல் இருந்து தொடர்ந்து கொண்டிருக்கிறது. ஆனாலும் இஸ்ரேலியப் பிணைக் கைதிகள் இன்னும் பல பேர் ஹமாஸிடம் சிக்கியுள்ளனர். அவர்கள் உயிருடன் தான் இருக்கிறார்களா என்பது கூட தெரியாத நிலையில், இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு பதவி விலகக் கோரி உள் நாட்டில் அழுத்தம் ஏற்பட்டுள்ளது.
அதேபோல், அமெரிக்காவில் 2024 நவம்பரில் அதிபர் தேர்தல் நடைபெறவுள்ளது. அங்கு இன்னும் பணவீக்கம் கட்டுப்பாட்டுக்குள் வரவில்லை. அமெரிக்க மத்திய வங்கிகளின் கடன் கொள்கைகளில் மாற்றம் இல்லாதது உலகம் முழுவதும் சந்தை நிலவரங்களை பாதித்து வருகிறது. இத்தகையச் சூழலில் அமெரிக்கா இன்னொரு போருக்கு பின்னணியாக இருக்க விரும்பவில்லை. அதனால், இஸ்ரேலுக்கு உதவிக்கரம் நீட்டாததால் இஸ்ரேல் இதிலிருந்து பின்வாங்குவதாக நிபுணர்கள் கூறுகின்றனர்.
அமெரிக்க பங்களிப்பு: முன்னதாக, இஸ்ரேல் மீது ஈரான் ஏவிய ட்ரோன்களில் 80-ஐ அமெரிக்கா வீழ்த்தியது. ஈரான், ஏமனில் இருந்து ஏவப்பட்ட 6 ஏவுகணைகளை வீழ்த்தியது. பிராந்திய பாதுகாப்பை உறுதி செய்ய அமெரிக்கா ஒத்துழைக்கும் என்று அமெரிக்க ராணுவம் தெரிவித்திருந்தது. ஆனால், அதிபர் ஜோ பைடன், இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவிடம், ஈரானுக்கு எதிரான பதில் தாக்குதலில் அமெரிக்கா ஈடுபடாது எனத் தெரிவித்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
“மத்திய கிழக்கு பிராந்தியமோ அல்லது இந்த உலகமோ இன்னொரு போரை தாங்காது. அமைதியை நிலைநாட்டும் கூட்டுப் பொறுப்பு நம் அனைவருக்கும் இருக்கிறது” என்று ஐ.நா. பொதுச் செயலாளர் அண்டோனியோ குத்ரேஸ் கவலை தெரிவித்திருந்த நிலையில், இஸ்ரேலின் நிலைப்பாடு தாக்குதலுக்கான தற்காலிக முற்றுப்புள்ளியாகப் பார்க்கப்படுகிறது.
+ There are no comments
Add yours