வியட்நாம் வங்கியில் 12 பில்லியன் டாலர் மோசடியில் ஈடுபட்ட பெண் தொழிலதிபர் ஒருவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டு உள்ளது.
வியட்நாமின் ஹோ சி மின் நகரைச் சேர்ந்தவர் ட்ரோங் மை லான்(68). அந்நாட்டின் முன்னணி தொழிலதிபர்களில் ஒருவர். ஆரம்ப காலத்தில் வறுமையில் வாடிய இவர், மார்க்கெட்டில் வேலைபார்த்து வந்தார்.
பிறகு தாயாருடன் சேர்ந்து அழகுசாதன பொருட்களை விற்கத் துவங்கினார். பொருளாதார சீர்திருத்தம் காரணமாக 1986 ல் அவர் தனது தொழிலை விரிவாக்கம் செய்தார். 1990ல் ஹோட்டல் மற்றும் உணவகம் துவக்கினார்.
பிறகு ‘Van Thinh Phat Group’ என்ற ரியல் எஸ்டேட் நிறுவனம் துவங்கி அதில் கொடி கட்டிப் பறந்தார். 2022ம் ஆண்டு அக்., மாதம் ட்ரோங் மை லான் கைதான பிறகு அவரது மோசடிகள் வெளிச்சத்திற்கு வரத் துவங்கின. அந்நாட்டின் ஐந்தாவது மிகப்பெரிய வங்கியான சைகோன் வணிக வங்கியை அவர் ரகசியமாக கட்டுப்படுத்தியது தெரிந்தது.
மேலும் 2012 முதல் 2022 வரை பல போலி நிறுவனங்களை துவக்கியும், தனக்கு வேண்டியவர்கள் மூலமும் போலியாக கடன் பெற்று பெரும் மோசடி செய்தார். இதன் மூலம் அவர் 12.5 பில்லியன் டாலர் கடன் பெற்றார். வங்கி மோசடியை மறைக்க ட்ரோங் மை லான் வங்கி அதிகாரிகளுக்கு 5.2 மில்லியன் டாலர் லஞ்சம் கொடுத்து உள்ளனர்.
வியட்நாம் வரலாற்றில், இந்தளவு லஞ்சம் கொடுக்கப்பட்டது இதுவே முதல்முறை ஆகும். இந்த முறைகேட்டில் ட்ரோங் மை லான், கணவர்( ஹாங்காங்கில் தொழிலதிபர்) மற்றும் உறவினர் உள்ளிட்டோருக்கு தொடர்பு உள்ளதாக குற்றம்சாட்டப்பட்டது.
அவர்கள் மீதான ஆதாரங்களை 105 பெட்டிகளில் வைத்து போலீசார் நீதிமன்றத்தில் தாக்கல் செய்தனர். அதனை கண்காணிப்பதற்கு என சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டன.
ஏப்ரல் மாதம் முதல் துவங்கிய விசாரணை முடிவில், மோசடி, லஞ்சம் மற்றும் வங்கி மோசடியில் ஈடுபட்டதற்காக ட்ரோங் மை லானுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டு உள்ளது.
வியட்நாம் சட்டப்படி மோசடித் தொகையில் 75 சதவீத தொகையை திருப்பி அளித்தால் மரண தண்டனை குறைக்கப்படும். இதனையடுத்து அரசுக்கு திருப்பிக் கொடுக்க வேண்டிய 9 பில்லியன் டாலரை திரட்டும் பணியில் அவரது வழக்கறிஞர்கள் ஈடுபட்டு உள்ளனர். அவரது சொத்துகளை விற்றும், நண்பர்களிடம் கடன் வாங்கும் முயற்சி நடக்கிறது. அவரது நிறுவனத்தின் பங்குகளை விற்க முயற்சி நடந்த போதும், அது சவாலாக உள்ளதாக கூறப்படுகிறது.
+ There are no comments
Add yours