இஸ்ரேல் – பாலஸ்தீனம் இடையே போர் மூண்டுள்ள நிலையில், இஸ்ரேலில் சிக்கியுள்ள தமிழகத்தை சேர்ந்த 15 பேர் அயலக தமிழர் நல வாரியத்தை தொடர்பு கொண்டுள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.
மேலும், இஸ்ரேலில் வசிக்கும் தமிழர்கள் அயலக தமிழர் நலவாரியத்தை தொடர்பு கொண்டால் தூதரகம் மூலம் மீட்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தமிழக அரசு தெரிவித்துள்ளது.
அதன்படி, உதவி எண்கள்: +91-87602 48625, +91-99402 56444, +91-96000 23645 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம் என தமிழக அரசு அறிவித்துள்ளது.
இதற்கிடையே, இஸ்ரேல் மீதான ஹமாஸ் படையின் தாக்குதலுக்கு இங்கிலாந்து, பிரான்ஸ், ஜெர்மனி உள்ளிட்ட நாடுகள் கண்டனம் தெரிவித்துள்ள நிலையில், இஸ்ரேல் மீதான ஹமாஸ் படையின் தாக்குதல் அதிர்ச்சி அளிப்பதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக தனது எக்ஸ் சமூக வலைதளத்தில் பிரதமர் மோடி வெளியிட்டுள்ள பதிவில்,
“இஸ்ரேல் மீது ஹமாஸ் நடத்தும் தாக்குதல் அதிர்ச்சி அளிக்கிறது. இந்த தாக்குதலில் உயிரிழந்த அப்பாவி மக்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தினருக்காக பிரார்த்தனை செய்வோம். கடினமான சூழலை எதிர்கொண்டிருக்கும் இஸ்ரேலுக்கு உறுதுணையாக நிற்போம்” என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
+ There are no comments
Add yours