சிங்கப்பூர் அதிபர் தேர்தலில் தமிழ் வம்சாவளியை சேர்ந்த தர்மன் சண்முகரத்னம் வெற்றி பெற்றுள்ளார்.
சிங்கப்பூர் நாட்டின் 9வது அதிபராக தர்மன் சண்முகரத்னம் தேர்வு செய்யப்பட்டுள்ளார். சிங்கப்பூர் அதிபர் ஹலிமா யாகூப்பின் 6 ஆண்டு பதவி காலம் வருகிற செப்டம்பர் 13ஆம் தேதியுடன் முடிவடைகிறது. இதையடுத்து சிங்கப்பூர் அதிபர் தேர்தல் செப்டம்பர் 1ஆம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது. இதில் மீண்டும் போட்டியிட போவதில்லை என்று தற்போதைய அதிபர் ஹலிமா யாகூப் அறிவித்துவிட்டார். சிங்கப்பூர்அதிபர் தேர்தலில் போட்டியிடுவதற்காக கேபினட் அமைச்சர் பதவியில் இருந்த தர்மன் சண்முகரத்னம் தனது பதவியை ராஜினாமா செய்வதாக கடந்த ஜூன் மாதம் அறிவித்தார்.
இந்திய வம்சாவளியை சேர்ந்த தமிழரான தர்மன் சண்முகரத்னம், சீன வம்சாவளியை சேர்ந்தவரும் சிங்கப்பூர் குடியுரிமை பெற்றவருமான கோக் சாங், டான் கின் லியான் ஆகியோர் அதிபர் தேர்தலில் போட்டியிட்டனர். இவர்கள் மூவரும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வந்தனர். இதனால் கடும் போட்டி நிலவியது. சிங்கப்பூரில் அதிபர் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று நடைபெற்றது. இதில் பொதுமக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து வாக்களித்தனர். வாக்குப்பதிவு முடிந்த நிலையில் இன்றே வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் சற்று முன்பு வெளியாகின.
இதில் தர்மன் சண்முக ரத்னம் வெற்றி பெற்றுள்ளார். அதிபர் தேர்தலில் மொத்தம் பதிவான வாக்குகளில் 70.4 சதவீத வாக்குகளைப் பெற்று தர்மன் சண்முக ரத்னம் அபார வெற்றி பெற்றுள்ளார். சிங்கப்பூர் நாட்டின் 9வது அதிபராக தமிழ் வம்சாவளியைச் சேர்ந்த தர்மன் சண்முகரத்னம் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இதற்கு முன்பு, இந்திய வம்சாவளியை சேர்ந்த இரண்டு பேர் சிங்கப்பூருக்கு அதிபராக பதவி வகித்துள்ளனர். சிங்கப்பூரின் மூன்றாவது அதிபரான தேவன் நாயர் 4 ஆண்டுகள் அதிபராக பதவி வகித்தார். இவர் கேரள மாநிலத்தை பூர்வீகமாக கொண்டவர். எஸ்.ஆர். நாதன் என அழைக்கப்படும் செல்லப்பன் ராமநாதன், 2009ஆம் ஆண்டு அதிபராக தேர்வானார். இவர் தமிழ்நாட்டை பூர்வீகமாக கொண்டவர்.
+ There are no comments
Add yours