வீட்டுச்சிறையில் வைக்கப்பட்டுள்ள இம்ரான் கானின் மனைவி புஷ்ரா பிவியின் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது என பிடிஐ கட்சி அறிவித்துள்ளதால் பாகிஸ்தானில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
கட்சியின் தலைவர்:
பாகிஸ்தான் முன்னாள் கிரிக்கெட் நட்சத்திரமும், முன்னாள் பிரதமருமானவர் இம்ரான் கான் (71). இவரது மனைவி புஷ்ரா பிவி (49). இம்ரான் கான், பாகிஸ்தான் தெஹ்ரீக்-இ-இன்சாஃப் (பிடிஐ) கட்சியின் தலைவராகவும் இருந்து வருகிறார்.
இந்நிலையில் இம்ரான் கான் ஊழல் வழக்கில் 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டு ராவல்பிண்டியில் உள்ள உயர் பாதுகாப்பு கொண்ட அடியாலா சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். சமீபத்தில் அந்நாட்டு நாடாளுமன்றத் தேர்தலில் பிடிஐ கட்சியின் சின்னத்தை தேர்தல் ஆணையம் முடக்கியதால், அக்கட்சியினர் சுயேச்சை சின்னத்தில் போட்டியிட்டு அதிகபட்சமாக 101 இடங்களில் வெற்றி பெற்றனர்.
சிறை தண்டனை:
இதற்கிடையே இம்ரான் கான் பிரதமராக இருந்தபோது, அவரது மனைவி புஷ்ரா பிவி பெற்ற பரிசுப் பொருள்களின் மதிப்பை குறைத்து காட்டிய புகாரில் சிக்கினார். இந்த வழக்கில் இம்ரான் கானுக்கும், அவரது மனைவிக்கும் 14 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. இதேபோல், திருமண விதி மீறல் வழக்கிலும் இம்ரான் தம்பதியினர் தலா 7 ஆண்டுகள் சிறை தண்டனை பெற்றுள்ளனர்.
மனுத்தாக்கல்:
இம்ரான் கான் சிறையில் அடைக்கப்பட்டுள்ள நிலையில், புஷ்ரா பிவி இஸ்லாமாபாத்தில் வீட்டிலேயே சிறை வைக்கப்பட்டுள்ளார். அவர் தனது உயிருக்கு பாதுகாப்பு இல்லை எனவும், கணவர் அடைக்கப்பட்டுள்ள அடிலியா சிறைக்கே தன்னையும் மாற்ற வேண்டும் எனக் கோரி இஸ்லாமாபாத் உயர்நீதிமன்றத்தில் ஏற்கெனவே மனுத்தாக்கல் செய்துள்ளார்.
உயிருக்கு ஆபத்து:
இந்நிலையில் பாகிஸ்தானில் உள்ள பாசிச ஆட்சி புஷ்ரா பிவிக்கு மருத்துவ உதவி அளிக்கவில்லை என்றும், அவரது உயிருக்கு கடுமையான அச்சுறுத்தல் உள்ளது என்றும் இம்ரானின் பிடிஐ கட்சி தெரிவித்துள்ளதால் இந்த விவகாரம் அந்நாட்டில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
+ There are no comments
Add yours