மேற்கு ஆப்பிரிக்க நாடான கினியாவின் தலைநகரான கொனக்ரியில் உள்ள எரிபொருள் சேமிப்பு நிலையத்தில் நேற்று தீடிரென தீ விபத்து ஏற்பட்டது. இதில் பலியானவர்களின் எண்ணிக்கை 13 ஆக உயர்ந்துள்ளது. படுகாயமடைந்த 80 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
கொனக்ரியில் நேற்று ஏற்பட்ட எரிபொருள் கிடங்கு தீ விபத்தில் 8 பேர் உயிரிழந்த நிலையில், தற்போது உயிரிழப்பு எண்ணிக்கை 13 ஆக உயர்ந்துள்ளது. இந்த விபத்தில் காயமடைந்த 178 பேரில் 89 பேர் சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளனர். மற்றவர்கள் சிகிச்சை பெற்று வருவதால் உயிரிழப்பு எண்ணிக்கை அதிகமாகும் என அஞ்சப்படுகிறது.
அரசு அலுவலகங்கள் நிறைந்த கொனக்ரியில் எரிபொருள் இறக்கிக் கொண்டிருந்தபோது இந்த விபத்து ஏற்பட்டதாக அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது. சுத்திகரிக்கப்பட்ட கச்சா எண்ணெயை கினியா பெருமளவில் இறக்குமதி செய்து வருகிறது. இந்த எண்ணெய் கொனக்ரி சேமிப்பு நிலையத்தில் வைத்து நாட்டின் மற்ற பகுதிகளுக்கு விநியோகிக்கப்படுகிறது. இந்த நிலையில், தற்போது ஏற்பட்டுள்ள தீவிபத்து அந்நாட்டின் எரிபொருள் விநியோகத்தில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது.
இந்த தீ விபத்துக்கான காரணம் குறித்து தீவிர விசாரணையில் ஈடுபட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தலைநகரான கொனக்ரியில் இருந்து நாட்டின் பிற பகுதிகளுக்கான எரிபொருள் விநியோகத்தில் ஏற்படக்கூடிய இடையூறுகளைத் தடுக்க, எரிபொருள் தொடர்பான முக்கியத் தேவைகளை கண்டறிந்து வருவதாக கினியா நாட்டின் பாதுகாப்புத் துறை அமைச்சா் பஷீா் தியலோ தெரிவித்தாா்.
இந்த விபத்தில் பாதிக்கப்பட்டவா்களுக்கு சிகிச்சை அளிக்க செனகல் மற்றும் மாலியில் இருந்து மருத்துவக் குழுவினா் வரவழைக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.
+ There are no comments
Add yours