சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலின் பரிந்துரைத்த நிலையில் அமைச்சராக பொன்முடிக்கு பதவிப்பிரமாணம் செய்து வைக்க ஆளுநர் ஆர்.என்.ரவி மறுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
உயர்கல்வி அமைச்சராக இருந்த பொன்முடிக்கு எதிரான சொத்துக்குவிப்பு வழக்கில், உயர் நீதிமன்றம் 3 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கியது. இதனால், மக்கள் பிரதிநிதித்துவ சட்டப்படி, அவர் எம்எல்ஏ, அமைச்சர் பதவிகளை இழந்தார். உயர் நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் பொன்முடி மேல்முறையீடு செய்தார். மேல்முறையீட்டு வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், பொன்முடிக்கு வழங்கப்பட்ட தண்டனையை நிறுத்தி வைத்துள்ளது.
இதன்மூலம், அவர் திருக்கோவிலூர் எம்எல்ஏவாக தொடர்வதாக அறிவிக்கப்பட்டது.மேலும், அவருக்கு அமைச்சராக பதவியேற்பு செய்ய வேண்டும் என ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் பரிந்துரைத்தார். முதல்வர் கடிதம் எழுதிய மறுநாள் ஆளுநர் டெல்லி புறப்பட்டுச் சென்றார்.
ஆளுநர், நேற்று சென்னை திரும்பிய நிலையில், முதல்வரின் பரிந்துரைக்கு மறுப்பு தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்து முதல்வருக்கு ஆளுநர் எழுதிய கடிதத்தில், ‘பொன்முடிக்கான தண்டனைதான் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாகவும், அவர் விடுவிக்கப்படவில்லை என்பதால் அமைச்சராக பதவிப்பிரமாணம் செய்து வைக்க முடியாது என்றும் தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆனால், இதுபற்றி எந்த ஒரு அதிகாரப்பூர்வ தகவலும் ஆளுநர் மாளிகை தரப்பில் இருந்தோ, அரசு தரப்பில் இருந்தோ வெளியிடப்படவில்லை.
+ There are no comments
Add yours