க்ரூஸ் கப்பல், அதாங்க சொகுசு கப்பல் சுற்றுலா என்றால் முன்பெல்லாம் மக்கள் பெரிதும் ஆர்வம் காட்டியதில்லை. கட்டணம் அதிகமாக இருக்கும், பாதுகாப்பு விஷயத்தில் சிக்கல் இருக்கும், எதுக்கு வம்பு என ஒதுங்கியே நின்றனர். இந்த சூழலில் கொரோனா நெருக்கடியின் போது வீட்டிற்குள்ளேயே முடங்கி கிடந்த மக்கள், வெளியில் வந்தனர். அதென்ன க்ரூஸ் சொகுசு கப்பல் சுற்றுலா, அதையும் தான் பார்த்து விடலாம் என்று களமிறங்கினர்.
இது பெரிய அளவில் பிடித்து போக, சமூக வலைதளங்களில் வேற லெவலுக்கு ட்ரெண்டானது. 2021ல் இருந்து ஆர்வம் அதிகரிக்க தற்போது வரலாறு காணாத அளவிற்கு க்ரூஸ் கப்பல் சுற்றுலாவில் மக்கள் பயணம் செய்ய தொடங்கி விட்டனர். இந்தியாவின் பல்வேறு துறைமுகங்களில் இருந்து அளிக்கப்படும் சொகுசு கப்பல் சுற்றுலாவில் 2023-24ஆம் நிதியாண்டில் மட்டும் 4.7 லட்சம் பேர் பங்கேற்றுள்ளனர். அதிலும் உள்நாட்டு சுற்றுலாவில் க்ரூஸ் கப்பல் மீதான மோகம் 85 சதவீதம் அதிகரித்துள்ளது.
எம்.வி எம்பிரஸ் சொகுசு கப்பல
இதன்மூலம் இந்தியாவில் புதிய சுற்றுலா தலமாக சொகுசு கப்பல் மாறியிருக்கிறது. கடந்த 2022-23ஆம் நிதியாண்டில் இந்தியா வந்து சொகுசு கப்பல் சுற்றுலாவில் பங்கேற்ற வெளிநாட்டவர்களின் எண்ணிக்கை 29,026 ஆகும். அதுவே கடந்த நிதியாண்டில் 98,344 ஆக அதிகரித்துள்ளது. இதில் இரண்டு விதமான சேவைகள் அளிக்கப்படுகின்றன. சொகுசு கப்பல் மூலம் உள்நாட்டு சுற்றுலா, வெளிநாட்டு சுற்றுலா என இரண்டு விதமான பயணங்களை மேற்கொள்ளலாம்.
இதற்காக இ-விசா சேவைகள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. அதுமட்டுமின்றி கட்டுப்படியாகக் கூடிய கட்டணம் தான் வசூலிக்கப்படுவதாக கூறுகின்றனர். தற்போதைய சூழலில் மும்பை, கோவா, மங்களூரு, கொச்சி ஆகிய துறைமுகங்களில் இருந்து வெளிநாட்டு சொகுசு கப்பல் சுற்றுலா செயல்பட்டு வருகிறது. உள்நாட்டு சொகுசு கப்பல் சுற்றுலாவை எடுத்து பார்த்தால் மும்பை – கோவா, மும்பை – டையூ, மும்பை – கொச்சி, மும்பை – லட்சத்தீவுகள், மும்பை – ஹை சீஸ், சென்னை – விசாகப்பட்டினம் ஆகிய வழித்தடங்கள் இருக்கின்றன.
இவை கடந்த 2021 செப்டம்பர் முதல் இயக்கப்பட்டு வருகின்றன. கடல்வழி சொகுசு கப்பல் சுற்றுலா இந்திய மக்கள் மத்தியில் பெரிதும் வரவேற்பு பெற்ற நிலையில், ஆற்று வழி கப்பல் சுற்றுலாவிற்கும் முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது. இதில் கங்கை நதியின் வாரணாசி – ஹால்தியா, பிரம்மபுத்திரா நதியின் தூப்ரி – சதியா வழித்தடங்கள் இடம்பெற்றுள்ளன.
அடுத்தகட்டமாக தீம் அடிப்படையில் கப்பல் சுற்றுலாவை அறிமுகம் செய்ய மத்திய அரசு முடிவு செய்துள்ளது. தீம் என்றால் குஜராத் ஆன்மீக சுற்றுலா, மேற்கு கடலோர கலாச்சார சுற்றுலா, தெற்கு கடலோர ஆயுர்வேத சுற்றுலா, கிழக்கு கடலோர பாரம்பரிய சுற்றுலா உள்ளிட்டவை அடங்கும். இந்த அறிவிப்பிற்காக சுற்றுலா பயணிகள் பலரும் ஆர்வத்துடன் காத்து கொண்டிருக்கின்றனர்.
+ There are no comments
Add yours