உத்தரப் பிரதேச மாநிலம், முசாபர் நகரில் புதிதாக கட்டுப்பட்டு வந்த கட்டிடம் இடிந்து விழுந்ததில் 2 பேர் உயிரிழந்தனர். மேலும் 17 பேர் படுகாயமடைந்தனர்.
உத்தரப் பிரதேச மாநிலம், முசாபர் நகர், ஜான்சத் பகுதியில் இரண்டுமாடி கட்டிடம் கட்டப்பட்டு வந்தது. இந்நிலையில் நேற்று மாலை 5.30 மணி அளவில் இந்த கட்டுமானம் இடிந்து விழுந்தது. இதில் ஏராளமான தொழிலாளர்கள் இடிபாடுகளுக்குள் சிக்கிக் கொண்டனர்.
இதையடுத்து முசாபர் நகர் போலீஸார் மற்றும் மீட்பு படையினர் அங்கு சென்று மீட்புப் பணியில் ஈடுபட்டனர். அப்பகுதியை சேர்ந்த இளைஞர்களும் மீட்பு பணியில் ஈடுபட்டனர். நேற்று மாலையிலிருந்து பல மணி நேரங்களாக மீட்பு பணி நடைபெற்றது.
இதில் 19 பேர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டனர். அவர்களில் இருவர் உயிரிழந்துள்ளதாகவும் மற்றவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் கூடுதல் டிஜிபி துருவா காந்த் தாக்கூர் தெரிவித்தார்.
கட்டுமான தளத்தில் இன்னும் தொழிலாளர்கள் சிக்கியுள்ளனரா என்பதைக் கண்டறிய, தொடர்ந்து தேடுதல் பணி நடைபெற்று வருவதாக போலீஸார் தெரிவித்தனர். கட்டிடம் இடிந்து தொழிலாளர்கள் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
+ There are no comments
Add yours