மக்களவை அத்துமீறல் சம்பவத்துக்குப் பின்பு இதுவரை 141 எம்.பி.க்கள் மீது இடைநீக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், இடைநீக்கம் செய்யப்பட்ட எதிர்க்கட்சி எம்பிக்கள் நாடாளுமன்ற வளாகத்தில் நேற்று (டிச.19) காலை பதாகைகளை ஏந்தி மத்திய அரசுக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டனர். அந்தப் போராட்டத்தின் போது திரிணமூல் காங்கிரஸின் எம்.பி கல்யாண் பானர்ஜி, மாநிலங்களவைத் தலைவரும், குடியரசுத் துணைத் தலைவருமான ஜக்தீப் தன்கர் அவை நடவடிக்கையின்போது செய்வதைப் போல நடித்துக் காட்டினார். அப்போது, ராகுல் காந்தி, அதை தனது செல்போனில் வீடியோ எடுத்தார். ஜகதீப் தன்கரை போல திரிணமூல் காங்கிரஸ் எம்.பி நடித்துக் காட்டிய வீடியோ சமூக ஊடகங்களில் வைரலானது.
பாஜக இந்தச் செயலுக்கு கடும் கண்டனங்களை பதிவு செய்தது. குடியரசுத் துணைத் தலைவர் ஜக்தீப் தன்கரும் இதற்கு தனது கண்டனத்தை தெரிவித்தார். இவை சர்ச்சையான நிலையில், இவ்விவகாரம் தொடர்பாக பிரதமர் மோடி, குடியரசு துணைத் தலைவர் ஜக்தீப் தன்கரை தொலைபேசியில் தொடர்புகொண்டு வருத்தம் தெரிவித்தார். மேலும் இந்த செயலால் தனது மனம் உடைந்துவிட்டதாக குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவும் வேதனை தெரிவித்தார்.
இந்த விவகாரம் சர்ச்சையான நிலையில், டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்த மேற்கு வங்க முதல்வரும், திரிணமூல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானர்ஜி, ‘நாங்கள் அனைவரையும் மதிக்கிறோம். நடந்ததை இயல்பானதாக எடுத்துக் கொள்ள வேண்டும். ராகுல் இதனைக் காட்சிப்படுத்தாவிட்டால் இது இவ்வளவு பெரிய சர்ச்சையாகவே ஆகியிருக்காது’ என்றார். அப்போது நிருபர்கள், அப்படியென்றால் நீங்கள் அந்தச் சம்பவத்தை ஆதரிக்கிறீர்களா எனக் கேள்வி எழுப்ப, ‘நான் மேற்கு வங்கம் சார்ந்த பிரச்சினைகளைத் தவிர வேறு எது பற்றியும் தற்போது பேச விரும்பவில்லை’ என்றார்.
+ There are no comments
Add yours