அரசியல் கட்சிகள் வைக்கும் பேனர்களில், போஸ்டர்கள் உள்ளிட்டவைகளில் அவற்றை அச்சிட்ட அச்சகம் மற்றும் வெளியீட்டாளரின் பெயர் இடம்பெற வேண்டும், ஒப்புதல் பெற்ற பின்னரே விளம்பரங்களை வெளியிட வேண்டும் என்று தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
மக்களவை தேர்தலில் தங்கள் கட்சிக்கு ஆதரவாகவும், தங்கள் சாதனைகளைச் சொல்லியும் அரசியல் கட்சிகள் விளம்பரங்களை வெளியிடுகின்றன. அச்சிட்ட துண்டு பிரசுரங்கள், ஆங்காங்கே விளம்பரப் பதாதைகள், தொலைக்காட்சி மற்றும் சமூக வலைதளங்களில் விளம்பரங்கள் என பல்வேறு வகைகளில் ஆதரவு பிரச்சாரங்கள் மற்றும் எதிர்ப்பு கருத்துக்கள் வெளியிடப்படுகிறது.
இப்படி தேர்தலுக்காக அரசியல் கட்சிகளும், வேட்பாளர்களும் செய்து வரும் விளம்பரங்களில் அவற்றை அச்சிட்ட அச்சகத்தின் பெயரோ, வெளியீட்டாளரின் பெயரோ இடம்பெறுவதில்லை என்று புகார்கள் எழுந்தன. இதுகுறித்து ஆம் ஆத்மி கட்சி சார்பில் தேர்தல் ஆணையத்திடம் புகார் அளிக்கப்பட்டது.
இதையடுத்து இப்புகார் குறித்து தேர்தல் அதிகாரிகள் குழுவினர் ஆலோசனை நடத்தினர். அதன் அடிப்படையில், தேர்தல் ஆணையம் புதிய உத்தரவுகளைப் பிறப்பித்துள்ளது. விளம்பரப் பலகைகள், பேனர்கள், சுவரொட்டிகள், துண்டு பிரசுரங்கள் உள்ளிட்ட தேர்தல் தொடர்பான பொருட்களை அச்சகம் மற்றும் வெளியீட்டாளர் பெயர் இல்லாமல் வெளியிட மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தின் 127ஏ பிரிவு தடை விதிக்கிறது.
ஆகவே, அந்த விவரங்கள் இடம்பெற வேண்டும். அப்போதுதான் தேர்தல் பிரச்சாரத்தில் வெளிப்படைத் தன்மையை உருவாக்க முடியும். தேர்தல் செலவுகளை ஒழுங்குபடுத்த முடியும். பேனரில் உள்ள கருத்துகள், தேர்தல் நடத்தை விதிமுறைகளுக்கு எதிராக இருந்தால், அதற்கான பொறுப்பை சுமத்த முடியும்.
ஒரு வேட்பாளர் அல்லது கட்சிக்கு ஆதரவாக விளம்பரம் வெளியிடலாம். ஆனால், பிற வேட்பாளருக்கு எதிராக விளம்பரம் வெளியிட தடை உள்ளது. விளம்பரங்களுக்கு ஒப்புதல் அளிக்கும் அதிகாரம் பெற்றவரின் ஒப்புதலுக்கு பிறகே விளம்பரங்கள் வெளியிடப்பட வேண்டும். அரசு செலவில், ஆட்சியில் உள்ள கட்சிக்கு ஆதரவான விளம்பரங்கள் தடை செய்யப்படும் என்று தேர்தல் ஆணைய உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
+ There are no comments
Add yours