அப்பாவின் ஆசைக்காக படித்த மகள், பல்கலைக்கழகத் தேர்வில் 8 தங்கப்பதக்கங்கள் வென்று அந்த அப்பாவுக்கு பெருமிதம் சேர்த்திருக்கிறார்.
பெங்களூரு ஆனேகல் பகுதியை சேர்ந்தவர் வினுதா. பெங்களூரு பல்கலைக்கழகத்தில் நடந்து முடித்த பிஎட் தேர்வில் எட்டு தங்கப் பதக்கங்கள் மற்றும் மூன்று ரொக்கப் பரிசுகளுடன் இவர் முதலிடம் பெற்றுள்ளார்.
தந்தை ஒரு தினக்கூலி. தாய் இல்லத்தரசி. இவர்களின் ஒரே மகள் வினுதா. தந்தை தினக்கூலி என்றபோதும், செல்ல மகளுக்கு அதன் பாதிப்பு எந்த வகையிலும் நேராது வளர்த்தார். தந்தையின் பாசத்தை புரிந்து கொண்ட வினுதாவும் சிறுவயதிலிருந்தே நன்றாக படித்தார்.
வினுதாவின் எதிர்காலம் குறித்த அவரது தந்தைக்கு ஒரு கனவு இருந்தது. நன்றாக படிக்கும் மகளை டாக்டர், இன்ஜினியர் என்று படிக்க வைக்க அவர் விரும்ப வில்லை. அந்த அளவுக்கு படிக்க வைக்க அவருக்கு வசதியும் இல்லை. அதிகம் செலவு வைக்காத படிப்பை நல்லபடியாக முடித்து, ஓர் அரசு வேலையில் மகள் சேர வேண்டும் என்று அளவோடு ஆசைப்பட்டார். அதன்படி மகளை அரசுப் பள்ளி ஆசிரியராக்க முடிவு செய்தார்.
எம்எஸ்சி ஆர்கானிக் கெமிஸ்ட்ரி முடித்த வினுதா, அதன் பின்னர் பெங்களூரு பல்கலைக்கழகத்தில் பிஎட் படிப்பில் சேர்ந்தார். தந்தையின் கனவை ஈடேற்ற ஆசிரியர் பட்டப் படிப்பில் அதிக மதிப்பெண்கள் எடுக்க உழைத்தார். வினுதாவின் உழைப்பும், மெனக்கிடலும் அவரை ஏமாற்றவில்லை. பெங்களூரு பல்கலைக்கழகத்தில் இன்று(அக்.17) நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில் 11 பதக்கங்கள் மற்றும் 3 ரொக்கப் பரிசுகளுடன் முதல் மாணவியாக வென்றிருக்கிறார்.
இதுகுறித்து வினுதா கூறுகையில், “என்னை அரசுப் பள்ளி ஆசிரியராகப் பார்க்க வேண்டும் என்பது என் தந்தையின் கனவு. எனவே அப்பாவின் ஆசைக்காவே படித்தேன். தங்கபதக்கம் வாங்குவேன், முதல் மாணவியாக வருவேன் என்றெல்லாம் நினைக்கவில்லை. அரசுப் பள்ளியின் ஆசிரியையாகி அப்பாவின் கனவை நனவாக்கினால் மட்டுமே நான் தங்கப்பதக்கம் வென்றதாக உணர்வேன்” என்று உருகியிருக்கிறார். பிஎட் தேர்வில் முதல் மதிப்பெண் எடுத்த வினுதாவுக்கு ஆசிரியப் பணியில் சேர்வதில் சிரமம் இருக்கப்போவதில்லை.
+ There are no comments
Add yours