இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம் இன்று காலை 9.10 மணிக்கு பி.எஸ்.எல்.வி.சி- 58 ராக்கெட்டை விண்ணில் செலுத்த உள்ளது. இந்த செயற்கைகோள், எக்ஸ்ரே மூலங்களின் தற்காலிக நிலை, நிறமாலை போன்ற அறிவியல் ஆய்வுகளை மேற்கொள்ள உள்ளது.
பி.எஸ்.எல்.வி.சி- 58 ராக்கெட்டில் எக்ஸ்போசாட் என்ற செயற்கைக்கோள் பொருத்தப்பட்டுள்ளது. இதன் ஆயுட்காலம் 5 ஆண்டுகள் ஆகும். இது இன்று காலை 9.10 மணிக்கு ஆந்திரா மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து விண்ணில் செலுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. பூமியில் இருந்து சுமார் 650 கிலோமீட்டர் தொலைவில் நிலைநிறுத்தப்பட உள்ளது.
இதற்கான கவுண்டவுன் நேற்று காலை 8.10 மணிக்கு தொடங்கியது. 25 மணி நேர கவுண்டவுன் முடிந்த பின் இன்று காலை 9.10 மணிக்கு விண்ணில் செலுத்தப்பட உள்ளது. இந்த செயற்கைகோள், எக்ஸ்ரே மூலங்களின் தற்காலிக நிலை, நிறமாலை போன்ற அறிவியல் ஆய்வுகளையும், விண்வெளியில் உள்ள தூசு, கருந்துளை வாயுக்களின் மேகக்கூட்டமான ‘ நெபுலா’ ஆகியவற்றை பற்றி விரிவாக ஆராய ஏதுவாக இருக்கும் என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
விண்ணில் ஏவப்பட்டதில் இருந்து சுமார் 22 நிமிடம் பயணம் மேற்கொள்ள உள்ளது. பிஎஸ்எல்வி சி58 ராக்கெட்டில் எக்ஸ்போசாட் (XpoSat) செயற்கைக்கோள் மட்டுமின்றி பிற நாடுகளைச் சேர்ந்த செயற்கைக்கோள்களையும் சுமந்து செல்கிறது. முக்கியமாக கேரளா மாநிலம் திருவனந்தபுரத்தைச் சேர்ந்த லால்பகதூர் சாஸ்திரி இன்ஸ்டிட்டியூட் ஆப் டெக்னாலஜி மாணவிகள் ‘வேசாட்’ என்ற செயற்கைக்கோளை வடிவமைத்துள்ளனர்.
இது, விண்வெளி மற்றும் பூமியின் மேற்பரப்பில் உள்ள புறஊதாக் கதிர்கள் மற்றும் கேரளாவில் வெப்பநிலை மற்றும் காலநிலை மாற்ற நிகழ்வுகளில் அவற்றின் தாக்கத்தை ஆராயும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. நாட்டில் பெண்கள் மேற்பார்வையில் முழுமையாக வடிவமைக்கப்பட்ட முதல் செயற்கைக்கோள் என்ற பெருமை இந்த வெசாட் செயற்கைக்கோளுக்கே சேரும். இத்துடன் 10 வெளிநாட்டுச் செயற்கைக்கோள்களும் இந்த பி.எஸ்.எல்.வி.சி- 58 ராக்கெட் சுமந்து செல்கிறது.
+ There are no comments
Add yours