இஸ்ரேல் – ஹமாஸ் இடையே நடந்து வரும் மோதல் இந்தியப் பெருங்கடலில் கடல்சார் வணிகம், இந்தியாவின் எரிசக்தி மற்றும் பொருளாதார நலன்களை நேரடியாக பாதிக்கிறது என ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியா கவலை தெரிவித்துள்ளது.
காசாவில் இஸ்ரேல் தாக்குதலுக்கு பதிலடியாகவும், பாலஸ்தீனியர்களுக்கு தங்கள் ஆதரவைக் தெரிவிக்கும் வகையிலும் செங்கடல் வழியாக இஸ்ரேல் செல்லும் கப்பல்களை ஹுதி கிளர்ச்சியாளர்கள் தாக்குதல் நடத்தி வருகின்றனர்.
இதனால் அப்பகுதியில் கடல்சார் போக்குவரத்தின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. மேலும், இந்த தாக்குதல் காரணமாக இந்தியாவின் எரிசக்தி மற்றும் பொருளாதார நலன்களும் பாதிக்கப்பட்டு வருவதாக ஹுதி கிளர்ச்சியாளர்களின் பெயரை நேரடியாக குறிப்பிடாமல், ஐ.நா-வில் இந்தியா கவலை தெரிவித்துள்ளது. மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் சூழல் குறித்த ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் நேற்று விவாதம் நடைபெற்றது. அப்போது, ஐ.நா-வுக்கான இந்தியாவின் துணை நிரந்தர பிரதிநிதி ஆர்.ரவீந்திரா பேசியதாவது:
“தற்போது நடைபெற்று வரும் மோதல் இந்தியப் பெருங்கடலில் கடல்சார் வணிக போக்குவரத்தின் பாதுகாப்பை பாதிக்கிறது. இதில் இந்தியாவுக்கு அருகிலுள்ள சில தாக்குதல்களும் அடங்கும்.
இது சர்வதேச சமூகத்துக்கு மிகுந்த கவலையளிக்கும் விஷயம். இது இந்தியாவின் சொந்த எரிசக்தி மற்றும் பொருளாதார நலன்களில் நேரடி தாக்கத்தை ஏற்படுத்துகிறது. இந்த நெருக்கடியான சூழ்நிலை எந்தவொரு தரப்பினருக்கும் பயனளிக்காது. இரு தரப்பினருக்கும் இடையிலான நேரடி மற்றும் அர்த்தமுள்ள பேச்சுவார்த்தை மூலம் அடையப்பட்ட இரு மாநில தீர்வு மட்டுமே இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீன மக்கள் விரும்பும் நீடித்த அமைதியை வழங்கும் என இந்தியா உறுதியாக நம்புகிறது.
எனவே, வன்முறையை தவிர்க்கவும், ஆத்திரமூட்டும் நடவடிக்கைகளைத் தவிர்க்கவும், நேரடி சமாதானப் பேச்சுவார்த்தைகளை விரைவாக மீண்டும் தொடங்குவதற்கான சூழ்நிலைகளை உருவாக்கவும் அனைத்து தரப்பினரையும் நாங்கள் கேட்டுக்கொள்கிறோம்”
இவ்வாறு ஐ.நா-வுக்கான இந்தியாவின் துணை நிரந்தர பிரதிநிதி ஆர்.ரவீந்திரா தெரிவித்துள்ளார்.
+ There are no comments
Add yours