ஒரிசாவின் சிவப்பு எறும்பு சட்னிக்கு புவிசார் குறியீடு!

Spread the love

மயூர்பஞ்ச் என்ற மாநிலத்தில் உள்ள மலைப் பகுதியில் ‘கை’ என்ற ஒரு வகை நெசவு செவ்வெறும்பு காணப்படுகிறது. Oecophylla smaragdina எனும் இந்த எறும்பு வகை, தான் வாழும் மரத்தின் இலைகளைக் கொண்டு நெய்து ஒரு வீட்டை அமைக்கிறது. அதனுள் தன் குட்டிகளை வைத்து வளர்க்கிறது.

இந்த மலையில் வாழும் பழங்குடி மக்கள், இந்த எறும்புகளை வைத்து துவையல் செய்து உண்கின்றனர். மேலும் இதை அருகில் உள்ள சந்தையிலும் விற்பனை செய்கின்றனர். மருத்துவ குணங்களால் சிறப்பு பெற்றது இந்த எறும்பு துவையல்.

இலையால் ஆன கூட்டை எடுத்து தண்ணீரில் போட்டு இலைகளை தனியே பிரித்துவிட்டு எறும்புகளை, இஞ்சி, பூண்டு,மிளகாய், உப்பை வைத்து அரைத்து துவையல் செய்கின்றனர். எறும்பின் புழுக்களை பெரிதும் விரும்பி உண்கின்றனர். அதை பச்சையாகவும் சாப்பிடுகின்றனர்.

கை-எறும்பு துவையலில் புரதம், கால்சியம், இரும்பு, மக்னீசியம், பொட்டாசியம்,சோடியம், ஜின்க், தாமிரம், அமினோ ஆசிட்கள் இருப்பதால் நோயெதிர்ப்பு சக்தியை மேம்படுத்தும் என்று நம்பப்படுகிறது.

மயூர்பஞ்ச் பழங்குடியினர் காய்ச்சல், ஜலதோஷம், இருமல் போன்றவற்றிலிருந்து விடுபடவும், பசியை அதிகரிக்கவும், பார்வைத் திறனை அதிகரிக்கவும், மூட்டுவலி, வயிற்று நோய்கள், மூளை மற்றும் நரம்பு மண்டலத்தின் ஆரோக்கியமான வளர்ச்சிக்கு இந்த எறும்பினால் ஆன கை சட்னி அல்லது சூப் சாப்பிடுகிறார்கள்.

சேகரிக்கப்பட்ட கை எறும்புகளை தூய கடுகு எண்ணெயில் குழைத்து மருத்துவ எண்ணெயைத் தயாரிக்கிறார்கள். 30 நாட்களுக்குப் பிறகு, இந்த எண்ணெய் குழந்தைகளுக்கான எண்ணெயாகவும், வாத நோய், ரிங்வோர்ம் மற்றும் பிற தோல் நோய்களைக் குணப்படுத்தவும் பயன்படுத்தப்படுகிறது.

“கை” (சிவப்பு நெசவாளர் எறும்பு) குடும்பம் மூன்று வகை உறுப்பினர்களைக் கொண்டுள்ளது – தொழிலாளர்கள், பெரிய தொழிலாளர்கள் மற்றும் ராணிகள். தொழிலாளர்கள் மற்றும் பெரிய தொழிலாளர் எறும்புகள் பெரும்பாலும் ஆரஞ்சு நிறத்தில் உள்ளன. கை சிறிய பூச்சிகள் மற்றும் பிற முதுகெலும்பில்லாத உயிரினங்களை உண்கிறது.

கை எறும்புகள் தங்கள் கூட்டின் அருகே வேறு உயிரினங்கள் வந்தால் வெட்டையாடிவிடும். இதன் காரணமாக இந்த எரும்பில் இருந்து கிடைக்கும் இரசாயனத்தை பூச்சிக்கொல்லிகள் தயாரிப்பில் பயன்படுத்தலாம் என்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர்.

மலைவாழ் மக்களின் வாழ்வாதாரமாக இருக்கும் இந்த உணவின் மருத்துவ குணத்தையும் கருத்தில் கொண்டு ஆராய்ச்சியாளர்கள் இதன் தயாரிப்பில் மேம்பாடு கொண்டு வந்து இது புவிசார் குறியீடு வாங்க வேண்டும் என்ற முனைப்பில் உள்ளனர்


Spread the love

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours