சந்திரயான்-4 திட்டத்தில் 2 ராக்கெட் ஏவுதல் செயல்படுத்த திட்டம்!

Spread the love

சென்னை: சந்திரயான்-4 திட்டத்தில் 2 ராக்கெட்ஏவுதல் திட்டங்களை செயல்படுத்த உள்ளதாக இஸ்ரோ விஞ்ஞானிகள் தெரிவித்தனர்.

இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம் (இஸ்ரோ) தயாரித்து அனுப்பிய சந்திரயான்-3 விண்கலத்தின் ‘விக்ரம்’ லேண்டர் பாகம் கடந்த ஆக. 23-ம் தேதி வெற்றிகரமாக நிலவில் தரையிறங்கியது. அதிலிருந்து ரோவர் வாகனும் பத்திரமாக நிலவின் தரைப்பகுதிக்கு கொண்டு வரப்பட்டது. இதன்மூலம், நிலவின் தென்துருவத்தில் தரையிறங்கிய முதல் நாடு எனும் பெருமையை இந்தியா பெற்றது. அதன்பின் லேண்டர் தரை இறங்கிய இடத்தில் இருந்தபடியும், ரோவர் நிலவின் மேற்பரப்பில் ஊர்ந்து சென்றும் 14 நாட்கள் ஆய்வு மேற்கொண்டு பல்வேறு அரிய தகவல்களையும், படங்களையும் நமக்கு வழங்கின.

அடுத்தகட்டமாக ஜப்பானுடன் சேர்ந்து சந்திரயான்-4 திட்டமானது லூபெக்ஸ் (The Lunar Polar Exploration mission-LUPEX) எனும் பெயரில் செயல்படுத்தப்பட உள்ளது. இத்திட்டத்தில் ரோபோட் தொழில்நுட்பத்திலான ரோவர் மற்றும் லேண்டரை நிலவுக்கு அனுப்பிஆய்வு செய்வதுடன், அதன் மேற்பரப்பில் உள்ள மாதிரிகளை சேகரித்து பூமிக்கு கொண்டுவரப்பட உள்ளன.இதற்காக 2 ராக்கெட்கள் பயன்படுத்தப்பட உள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளன.

இதுகுறித்து இஸ்ரோ விஞ்ஞானிகள் சிலர் கூறும்போது, ‘‘சந்திரயான்-4 விண்கலமானது முந்தைய திட்டங்களைவிட சவாலானதாகும். ஏனெனில், விண்கலத்தை நிலவில்தரையிறக்கி மாதிரிகளை சேகரித்துபின்னர் மீண்டும் பூமிக்கு கொண்டுவர வேண்டும். இதற்காக பிஎஸ்எல்வி மற்றும் எல்விஎம்-3 ஆகிய 2 ராக்கெட்கள் மூலம் 5 விதமான கலன்கள் விண்ணில் அனுப்பப்பட உள்ளன.

அதாவது, எல்விஎம்-3 ராக்கெட் மூலம் உந்துவிசை கலன் (Propulsion Module (PM), தரையிறங்கி கலன் (Descender Module-DM), மேல் புறப்பாடு கலன் (Ascender Module-AM)ஆகியவை முதலில் ஏவப்படும். அடுத்தகட்டமாக பிஎஸ்எல்வி ராக்கெட் மூலம் இடமாற்று கலன் (Transfer module-TM), மறுநுழைவு கலன்(Re-entry module-RM) ஆகியவை அனுப்பப்படும்.

குறிப்பிட்ட கால இடைவெளிகளில் இந்த ராக்கெட்கள் விண்ணில் செலுத்தப்படும். இஸ்ரோ வரலாற்றில் ஒரே திட்டத்துக்காக 2 ராக்கெட்களை விண்ணில் செலுத்துவது இதுவே முதல் முயற்சியாகும். இந்த திட்டத்தை 2028-ம் ஆண்டில் செயல்படுத்த திட்டமிட்டுள்ளோம்.

இதில் செலுத்தப்பட உள்ள லேண்டரை இந்தியாவும், ரோவரை ஜப்பானும் வடிவமைக்க உள்ளன. இவற்றின் ஆயுட்காலம் 6 மாதம். ரோவரில் நிலவின் மேற்பரப்பில் துளையிட வசதியாக நவீன இயந்திரங்கள் இடம்பெறும். இதன்மூலம் நிலவில் உள்ள மணற் துகள்கள், மூலக்கூறுகள் போன்ற மாதிரிகளை எளிதாக சேகரிக்க முடியும்’’என்றனர்.


Spread the love

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours