’’கோவா விமான நிலையத்தில் தமிழ்ப் பெண் ஒருவரிடம் இந்தியில் பேசி, அவர் இந்தி தெரியாது என்று சொன்னதும் பாதுக்காப்பு பணியில் இருந்த வீரர் ஒருவரால் மிரட்டப்பட்டுள்ளது கண்டனத்துக்குரியது’’ என முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.
தமிழகத்தை சேர்ந்தவர் ஷர்மிளா. இவர் தனது 3 வயது குழந்தையுடன் கோவாவில் இருந்து சென்னை திரும்ப தபோலிம் விமான நிலையத்திற்கு சென்றுள்ளார். அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த சிஐஎஸ்எஃப் வீரர் இந்தியில் கேள்வி கேட்டுள்ளார்.
அதற்கு தனக்கு இந்தி தெரியாது என ஷர்மிளா கூறியுள்ளார். இதற்கு, இந்திதான் தேசிய மொழி என பாதுகாப்பு பணியில் இருந்த வீரர் கூறி ஷர்மிளாவிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.
இதனைத் தொடர்ந்து பாதிக்கப்பட்ட ஷர்மிளா, சிஐஎஸ்எஃப் தலைமை அலுவலகத்திற்கு மெயில் மூலம் புகார் அளித்துள்ளார். இந்த சம்பவத்திற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் தளத்தில் கண்டனம் தெரிவித்துள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள பதிவில், ‘’கோவா விமான நிலையத்தில் தமிழ்ப் பெண் ஒருவரிடம் இந்தியில் பேசி, அவர் இந்தி தெரியாது என்று சொன்னதும் வீரர் ஒருவரால் மிரட்டப்பட்டுள்ளார். ‘தமிழ்நாடு இந்தியாவில்தானே இருக்கிறது’ என்றும், ‘இந்தியாவில் உள்ள அனைவரும் இந்தியைக் கற்றாக வேண்டும்’ என்றும் பாதுகாப்புப் படை வீரர் பாடம் எடுத்துள்ளார். இது கடும் கண்டனத்துக்குரியது.
இந்தி அலுவல் மொழியே தவிர தேசிய மொழியல்ல என்று அவருக்கு யார் சொல்வது? பல்வேறு மொழி பேசும் மக்களின் கூட்டாட்சி நாடு இந்தியா. கூட்டாட்சித் தன்மையை வலியுறுத்தும் வகையில்தான் மத்தியத் தொழில் பாதுகாப்புப் படை வீரர்கள் செயல்பட வேண்டும். விமான நிலையங்களில் அனைத்து மொழிகளுக்கும் உரிய மதிப்பும் மரியாதையும் வழங்கப்பட வேண்டும்’’ எனப் பதிவிட்டுள்ளார்.
+ There are no comments
Add yours