மத்திய புலனாய்வு அமைப்பான சிபிஐ, இந்திய ஒன்றியத்தின் கட்டுப்பாட்டில் இல்லை என உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது.
மேற்கு வங்கம் மாநில அரசின் முன் அனுமதியைப் பெறாது, அங்கு சிபிஐ தனது விசாரணையைத் தொடர்வதாகக் குற்றம்சாட்டி உச்ச நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கு விசாரணையின்போது மத்திய அரசு இந்த விளக்கத்தை இன்று வழங்கியது.
உச்ச நீதிமன்ற நீதிபதிகள் பி.ஆர்.கவாய் மற்றும் சந்தீப் மேத்தா ஆகியோர் அடங்கிய அமர்வுக்கு முன்பாக “இந்திய ஒன்றியம் எந்த வழக்கையும் பதிவு செய்யவில்லை; சிபிஐ அமைப்பு இந்திய யூனியனின் கட்டுப்பாட்டில் இல்லை” என்று மத்திய அரசின் சார்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா தெரிவித்தார்.
அரசியல் சட்டத்தின் 131வது பிரிவின் கீழ் மத்திய அரசுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் மேற்கு வங்கம் வழக்கைத் தொடர்ந்தது. மேற்கு வங்கத்தில் வழக்குகளை விசாரிக்க சிபிஐ விசாரணை அமைப்புக்கான பொது ஒப்புதலை மாநில அரசு ரத்து செய்த போதிலும், சிபிஐ தொடர்ந்து எப்ஐஆர் பதிவு செய்து விசாரணையைத் தொடர்கிறது என்று மேற்கு வங்கத்தை ஆளும் திரிணமூல் அரசு தொடுத்த வழக்கில் வாதம் முன்வைக்கப்பட்டது.
மத்திய மற்றும் மாநில அரசுகளுக்கு இடையேயான பிரச்சினையில், உச்ச நீதிமன்றத்தின் அதிகார வரம்பைக் கையாளும் பிரிவு 131, புனிதமானது என்றும் அதன் தவறான பயன்பாடு என்பது அனுமதிக்கப்படக் கூடாது என்றும் மேற்கு வங்க சொலிசிட்டர் ஜெனரல் உச்ச நீதிமன்ற அமர்வு முன்பாக முறையிட்டார்.
மேற்கு வங்கம் மாநிலத்தில் விசாரணை அல்லது சோதனை நடத்த சிபிஐயின் பொது ஒப்புதல் திரும்பப் பெறப்பட்டது வழக்கு விசாரணையின் மையமானது. பாஜக அல்லாத பல மாநிலங்களில், சிபிஐ மற்றும் அதன் செயல்பாடுகளுக்கு, சம்பந்தப்பட்ட அரசாங்கத்தின் அனுமதி அல்லது நீதிமன்றத்தின் வழிகாட்டுதல்கள் தேவைப்படுகின்றன.
பாஜக அல்லாத கட்சிகளின் ஆட்சியிலான மாநிலங்கள் சிபிஐ அமைப்பு, மாநில அரசின் அனுமதி பெற்றே அங்கு விசாரணையைத் தொடங்க முடியும்; அல்லது நீதிமன்ற உத்தரவு அல்லது வழிகாட்டலின் பெயரில் சிபிஐ களத்தில் இறங்கலாம். டெல்லி சிறப்புக் காவல் அமைப்புச் சட்டம் 1946 பிரிவு 6 இதனை வலியுறுத்துகிறது. எனினும் குறிப்பிட்ட சில வழக்குகளில் பொதுவான முன்அனுமதி உண்டு. அவற்றையும் மேற்குவங்கம் மட்டுமன்றி கேரளா, மிசோரம், பஞ்சாப், தெலங்கானா உள்ளிட்ட மாநிலங்கள் திரும்பப்பெறுவதாக அறிவித்தன. கடந்தாண்டு மத்தியில் இந்த வரிசையில் தமிழ்நாடும் இணைந்தது குறிப்பிடத்தக்கது.
+ There are no comments
Add yours