புதுடெல்லி: இந்திய தண்டனை சட்டம், பிரிவு 497-ன்படி, ஒருவர் திருமண பந்தத்தை மீறி வேறு ஒருவரின் மனைவியுடன் பாலியல் உறவு வைத்துக் கொள்வது குற்றமாகக் கருதப்பட்டது. இதை எதிர்த்து கேரளாவின் ஜோசப் ஷைன் என்பவர் உச்ச நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கில் கடந்த 2018-ம் ஆண்டில் தீர்ப்பு வழங்கப்பட்டது.
“பெண்களின் சுதந்திரம், அடிப்படை உரிமையில் இந்த சட்டப்பிரிவு தலையிடுகிறது. கணவர் என்பவர் பெண்களின் எஜமானர் கிடையாது. எனவே இந்திய தண்டனை சட்டம் பிரிவு 497 ரத்து செய்யப்படுகிறது. திருமண பந்தத்தை மீறிய உறவு குற்றமல்ல” என்று 5 நீதிபதிகள் அடங்கிய அமர்வு தீர்ப்பளித்தது.
இந்த சூழலில் இந்திய குற்றவியல் சட்டத்துக்கு (ஐபிசி) பதிலாக பாரதிய நியாய சன்ஹிதா 2023, இந்திய குற்றவியல் நடைமுறை சட்டத்துக்கு (சிஆர்பிசி) பதிலாக பாரதிய நாகரீக் சுரக் ஷா 2023, இந்திய சாட்சிகள் சட்டத்துக்கு (ஐஇசி) பதிலாக பாரதிய சாக் ஷியா 2023 ஆகிய 3 புதிய மசோதாக்களை மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா கடந்த ஆகஸ்டில் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தார்.
பாகுபாடு கூடாது: புதிய மசோதாக்கள் தொடர்பாக நாடாளுமன்ற நிலைக் குழு ஆய்வு செய்து வருகிறது. இந்த குழு தனது பரிந்துரைகளை மத்திய அரசிடம் சமர்ப்பித்துள்ளது. அதில், “திருமண பந்தத்தை மீறிய உறவை குற்றமாக்க வகை செய்யும் சட்டப்பிரிவை மீண்டும் நடைமுறைக்கு கொண்டு வர வேண்டும். திருமண பந்தத்தை மீறும் விவகாரங்களில் ஆண், பெண் என்ற பாகுபாடு இன்றி தண்டனை வழங்கப்பட வேண்டும்’’ என்று பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.
+ There are no comments
Add yours