தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டியை, நடிகர் நாகார்ஜுனா, அவரது மனைவி அமலா அக்கினேனி ஆகியோர் இன்று சந்தித்துப் பேசினர்.
நடிகர் நாகார்ஜுனா, அவரது மனைவி அமலா அக்கினேனியுடன் தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டியை ஹைதராபாத்தில் உள்ள அவரது வீட்டில் இன்று சந்தித்தார். இந்த சந்திப்பின் போது, முதலமைச்சர் ரேவந்த் ரெட்டிக்கு அவர்கள் பூங்கொத்து வழங்கினர்.
நாகார்ஜுனா தெலங்கானாவில் பிஆர்எஸ் கட்சிக்கும் ஆந்திராவில் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சிக்கும் நெருக்கமானவர் என்று கூறப்படுகிறது. இந்நிலையில் அவர் காங்கிரஸ் கட்சி சார்பில் புதிதாக முதல்வர் பதவிக்கு வந்துள்ள ரேவந்த் ரெட்டியை, இன்று சந்தித்துப் பேசியுள்ளார்.
சமீபத்தில் தெலங்கானா முன்னாள் முதல்வரும், பாரத் ராஷ்டிர சமிதி கட்சியின் தலைவருமான கே.சந்திரசேகர் ராவ், வீட்டில் தவறி விழுந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அப்போது, சந்திரசேகர் ராவை, மருத்துவமனையில் சென்று நாகார்ஜுனா சந்தித்து நலம் விசாரித்து வந்தார்.
முந்தைய பிஆர்எஸ் ஆட்சியில் ஹைதராபாத்தின் மாதப்பூரில் நீர் நிலைகளை ஆக்கிரமித்து கட்டிடங்கள் கட்டப்பட்டதாக புகார் எழுந்தது. இந்நிலையில் தாங்கள் ஆட்சிக்கு வந்தால் நீர் நிலைகளை ஆக்கிரமித்து கட்டப்பட்ட கட்டிடங்களை அகற்ற நடவடிக்கை எடுப்போம் என தற்போதைய முதல்வர் ரேவந்த் ரெட்டி அறிவித்திருந்தார்.
இந்நிலையில் மாதப்பூரில் நாகார்ஜுனாவுக்கு சொந்தமான மாநாட்டு மைய கட்டிடம் உள்ளது. இந்த கட்டிடமும் நீர் நிலையை ஆக்கிரமித்து சட்ட விரோதமாக கட்டப்பட்டுள்ள புகாரில் சிக்கியுள்ளது.
தற்போது தெலங்கானாவில் காங்கிரஸ் ஆட்சி அமைந்துள்ளதால் தனது கட்டிடத்தை இடிக்கும் நடவடிக்கையை கைவிட வலியுறுத்தியே நாகார்ஜுனா, முதல்வர் ரேவந்த் ரெட்டியை சந்தித்துள்ளதாக அம்மாநில காங்கிரஸ் கட்சியினர் சமூக வலைதளங்களில் காரசாரமாக பதிவுகளை வெளியிட்டு வருகின்றனர்.
+ There are no comments
Add yours