தேசிய பேரிடராக  அறிவிக்கும்  நடைமுறையே கிடையாது – நிர்மலா சீதாராமன் !

Spread the love

தேசிய பேரிடர் என்கிற அறிவிப்பை வெளியிடும் நடைமுறையே மத்திய அரசிடம் இல்லை என மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறினார்.

டெல்லியில்  நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

ஆழ்ந்த இரங்கல் :

தமிழ்நாட்டில் புயல் வெள்ள பாதிப்பில் உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது. பொருட்கள், சொத்துக்கள் சேதம் அடைந்துள்ளன. உயிரிந்தவர்களின் குடும்பத்துக்கும், பொருட்சேதம் ஏற்பட்டவர்களின் குடும்பத்துக்கும் ஆழ்ந்த இரங்கலை முதலில் தெரிவித்துக் கொள்கிறேன். இந்த செய்தி கிடைத்த உடனேயே மத்திய அரசு பல முயற்சிகளை எடுத்தது. 

நெல்லை, தூத்துக்குடி, தென்காசி, கன்னியாகுமரி ஆகிய இந்த 4 மாவட்டங்களிலும் ஒரு வருடம் முழுவதும் பெய்ய வேண்டிய மழை ஒரேநாளில் பெய்திருக்கிறது. இதனால் தண்ணீர் தேங்கி, வீடுகள் வெள்ளத்தில் மூழ்கின. மக்கள் தவித்தனர். இந்த தகவல் 18-ந் தேதி காலை எனக்கு கிடைத்தது. அன்று நாடாளுமன்றம் நடந்து கொண்டிருந்தது. நான் அன்று மதியமே உள்துறை அமைச்சரை சந்தித்து 4 மாவட்டங்களுக்கும் உடனடியாக உதவிகள் செய்யுமாறு கேட்டுக்கொண்டேன். அவரும் உடனே மீட்புப்படைகளை அனுப்புதல் உள்ளிட்ட உத்தரவுகளை பிறப்பித்தார்.

ஹெலிகாப்டர்கள்

21-ந் தேதி டிசம்பர் வரை எல்லா மீட்புபடைகள் மூலமாகவும் 42 ஆயிரத்து 290 பேர் மீட்கப்பட்டனர். 31 பேர் உயிர் இழந்து இருக்கிறார்கள். இது வருத்தப்படக்கூடிய விஷயம். மீட்பு பணியில் மத்திய அரசின் எல்லா துறைகளும் ஒத்துழைத்து களத்தில் இறங்கின. உள்துறை அமைச்சக கட்டுப்பாட்டு அறைகள் நிலைமையை 24 மணி நேரமும் கண்காணித்தன. உதவிகள் முறையாக தொடர்ந்தன.

இந்திய விமானப்படை 5 ஹெலிகாப்டர்கள் 70 முறை சென்று மீட்புப்பணியில் ஈடுபட்டன. இதைப்போல கடற்படையின் ஹெலிகாப்டர்கள், கடலோர காவல்படை ஹெலிகாப்டர்களும் மீட்புப்பணியில் ஈடுபட்டன.

மத்தியக்குழு

வழக்கமாக, அவசர நிலைமை இயல்பு நிலைக்கு திரும்பிய பிறகே செல்லும். ஆனால் இந்த விஷயத்தில் 19-ந் தேதி மாலையே மத்தியக்குழு பாதிக்கப்பட்ட இடங்களுக்கு சென்றுவிட்டது.

இதற்கு முன்னதாக 11-ந் தேதி முதல் 14-ந் தேதிவரை மத்தியக்குழு சென்னையில் இருந்தது. தேசிய பேரிடர் மீட்புப்படை, ராணுவம், விமானப்படை, கடற்படை மற்றும் கடலோர காவல்படையினர் மட்டும் 5049 பேரை மீட்டு இருக்கிறார்கள். உடனே களத்தில் இறங்கியதால் நிறைய பேரை மீட்க முடிந்தது.

ஒவ்வொரு ஆண்டும் மாநில பேரிடர் நிவாரண நிதிக்கு பணம் வழங்கப்பட்டு வருகிறது. இதில் மத்திய அரசு தனது பங்கை உரிய நேரத்துக்கு வழங்க வேண்டும். இந்த ஆண்டு ஏப்ரல் 1-ந் தேதி ரூ.813.15 கோடி தமிழ்நாடு அரசிடம் இருந்தது. இந்த ஆண்டுக்கான மத்திய அரசின் பங்கு ரூ.900 கோடியில் முதல் தவணை ரூ.450 கோடி, புயல் வருவதற்கு முன்பே விடுவித்து விட்டோம். 2-வது தவணையை 4 மாவட்டங்களில் மழை வருவதற்கு முன்பே அதாவது கடந்த 12-ந் தேதியே கொடுத்து விட்டோம்.

தமிழ்நாட்டில் சென்னையில் இருக்கக்கூடிய மண்டல வானிலை ஆய்வு மையம் 4 மாவட்டங்களில் தீவிர மழை வெள்ளம் பற்றி 12-ந் தேதியே தகவல் கொடுத்துவிட்டது. ஒவ்வொரு 5 நாட்களுக்கு முன்பும் தகவல்களை சொல்லிக்கொண்டே இருந்தனர். இதுமட்டுமல்லாது ஒவ்வொரு 3 மணி நேரத்துக்கும் தகவல் கூறினர். எனவே எங்களுக்கு முன் எச்சரிக்கை கிடைக்கவில்லை என்று யாரும் குறை கூற முடியாது. அதிநவீன மயமான டாப்லர் எனப்படும் 3 கருவிகள் சென்னை வானிலை ஆய்வு மையத்தில் உள்ளன.

தமிழ்நாட்டில் எப்போது எந்த இடையூறு வந்தாலும் பிரதமரும், உள்துறை மந்திரியும் உடனுக்குடன் நடவடிக்கை எடுக்கிறார்கள் என்பதற்கு இந்த ஒரு உதாரணமே போதும். எனவே புரிந்து கொண்டு பேசுங்கள்.

இவ்வாறு அவர் கூறினார்.

கேள்வி-பதில் :

இதனைத் தொடர்ந்து நிருபர்களின் கேள்விகளுக்கு பதில் அளித்து அவர் பேசியதாவது:-

சென்னை வானிலை ஆய்வுமையம் மீது அன்புமணி வைத்திருக்கும் குற்றச்சாட்டு சரியானது அல்ல. ஏன் என்றால் நான் ஏற்கனவே சொன்னேன். அங்கு 3 டாப்லர் கருவிகள் உள்ளன. அதன் மூலம் தகவல்களை தெளிவாக கூறினார்கள். இயல்பான மழை பெய்யும் என்று அவர்கள் நினைத்திருந்தாலும் 4 மாவட்டங்களிலும் அமைச்சர்கள் சென்று முன் எச்சரிக்கை நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும் அல்லவா? அவர்கள் எப்போது அங்கு சென்றனர்?

தேசிய பேரிடர் மீட்புப்படை போவதற்கு முன்னால் தமிழ்நாட்டில் உள்ளவர்கள் யாராவது அங்கு இருந்தார்களா? இல்லையே.

ரூ.4 ஆயிரம் கோடியில் 92 சதவீதம் செலவு செய்து விட்டதாகவும் என்ன மழை பெய்தாலும் ஒன்றும் ஆகாது என்று சென்னையைப் பற்றி பேசிய அமைச்சர், சென்னையில் வெள்ளம் வந்தபிறகு 42 சதவீதம்தான் செலவு செய்திருக்கிறோம் என்கிறார். அந்த பணத்தை எங்கே போட்டீர்கள். கணக்கு ஏன் மாறுகிறது? 92 சதவீதத்துக்கும், 42 சதவீதத்துக்கும் வித்தியாசம் தெரியாத அமைச்சர், இன்னொரு அமைச்சர் மூலம் கேட்கிறார்கள்.

இத்தனை செ.மீ. அதிகமாக மழை பெய்யும் என்று சொல்லியிருந்தால் ஏற்பாடு செய்திருப்போம் என்று சொல்கிறார்கள். என்ன அநியாயம்?

மாநில அரசு கொடுத்த புள்ளி விவரங்களின் அடிப்படையில் நன்றாக வேலை செய்ததாக மத்தியக்குழு தெரிவித்து இருக்கலாம். 42 சதவீத பணம்தான் செலவு செய்திருக்கிறீர்கள் என்று சொல்லும் நீங்கள் அங்குலம் அங்குலம் மழை அளவு எச்சரிக்கை கேட்பீர்களா?

முதல்-அமைச்சர் எங்கே இருந்தார்?

2015-ல் அம்பத்தூரில் வெள்ளத்தில் நான் நடந்து போனேன். மழைநீர் கடலில் கலக்கும் முகத்துவாரத்தை அடைத்து வைத்திருந்தனர். அந்த வெள்ளத்துக்கு அப்புறம் என்ன பாடம் கற்றுக்கொண்டீர்கள்? அந்த பாடத்துக்கு ஏற்ப என்ன செய்தீர்கள்? பாடத்துக்கு ஏற்ப செய்திருந்தீர்களானால் இப்போது மழை வெள்ளம் தேங்கி இருக்காது. அம்பத்தூர் தற்போதும் மூழ்கியுள்ளது. தமிழக முதல்-அமைச்சர் நெல்லை சென்றார். பாதிப்புகளை பார்த்தார் என்பது உகந்த செயல். ஆனால் அதே முதல்-அமைச்சர் நாங்கள் மத்திய படையினரை அனுப்பிக்கொண்டிருந்தபோது எங்கே இருந்தார்? டெல்லியில் இருந்தார். நாள் முழுக்க டெல்லியில் இருந்த அவர், தனது கூட்டம் முடிந்தவுடன் பிரதமரை பார்க்க நேரம் கேட்டு, பிரதமரும் நேரம் ஒதுக்கினார். போகிற போக்கில் அவர் பிரதமரை சந்தித்தார். இதில் இருந்தே முதல்-அமைச்சர் எதற்கு முன்னுரிமை அளிக்கிறார் என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

இந்த பேரிடர் நிகழும் போது  முதல்-அமைச்சர் இந்தியா கூட்டணியோடு இருக்கிறார். இந்தியா கூட்டணியே நீ இங்கே இரு. நான் பேரிடரை பார்த்துவிட்டு வருகிறேன், என் மக்கள் என் மண் என அவர் பாதிக்கப்பட்ட இடத்தில் இருந்திருக்க வேண்டாமா? அது இல்லாமல் வாய்க்கு என்ன நஷ்டம் என்பதுபோல ரூ.12 ஆயிரம், ரூ.16 ஆயிரம் கோடி கொடு என கேட்கலாமா? எவ்வளவு கொடுக்க வேண்டுமோ, அதை கொடுப்பார்கள்.

நடைமுறை இல்லை :

ரூ.4 ஆயிரம் கோடி திட்டம் உள்ளிட்டவற்றை சரியாக பயன்படுத்தி இருந்தால் இந்த நிலைமை வந்திருக்காது. அதுபற்றி சரியான விவரம் கூட தரவில்லை என்பது எங்களது குற்றச்சாட்டு. 42 சதவீதம் செலவு என்பதாவது உண்மைதானா? சென்னை வடிகால் அமைப்புக்கு கொடுத்த பணம் சரியாக உபயோகப்படுத்தப்படவில்லையோ? என நான் கேள்வி கேட்கிறேன்.

தேசிய பேரிடர் என அறிவிக்கப்படுவதற்கு நடைமுறை இல்லை தமிழ்நாட்டில் நடந்தது அப்படி அல்ல, உத்தரகாண்டில் நடந்ததுதான் அப்படி என நாங்கள் சொல்லவிலை. தேசிய பேரிடர் என்கிற அறிவிப்பை வெளியிடும் நடைமுறையே மத்திய அரசிடம் இல்லை. இதற்கு முன்பும் எந்த மாநிலத்துக்கும் அதை அறிவிக்கவில்லை. ஆனால் மாநில அரசு ஒரு நிகழ்வை பேரிடர் என அறிவிக்க விரும்பினால் அதற்கென சில வழிகாட்டு நெறிமுறைகள் உள்ளன. பூகம்பம், பூச்சி தாக்குதல் என சில குறிப்பிட்ட நிகழ்வுகளுக்கு மாநிலங்கள் அறிவிக்கலாம். அப்படி அறிவித்துவிட்டு மாநில பேரிடர் நிவாரண நிதியில் இருந்து 10 சதவீதம் எடுத்து செலவழிக்கலாம். எனவே, தேசிய பேரிடர் என மத்திய அரசு அறிவிக்காது.

வார்த்தையை அளந்து பேச வேண்டும்:

உங்க அப்பன் வீட்டு பணமா? என கேட்கிறார்கள் என்றால் அவர்களது பாஷையே அப்படிதான். சனாதன தர்மம் பற்றி பேசும்போதுகூட அதை அழிக்க வரவில்லை.ஒழிக்க வந்திருக்கிறோம் என்று சொன்னார் அல்லவா? அவருடைய பாஷை எப்போதும் அப்படித்தான் இருக்கும். அவர் அவரது அப்பன் வீட்டு சொத்தை வைத்துத்தான் பதவியை அனுபவித்துக் கொண்டிருக்கிறார் என்று சொல்ல முடியுமா? கேட்க முடியுமா? மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு வந்திருக்கிறார். அதற்கு கொடுக்க வேண்டிய மரியாதையை நாம் கொடுக்கத்தான் செய்கிறோம். “உன் அப்பன் வீடு, உன் ஆத்தா” இந்த மாதிரியான பேச்செல்லாம் அரசியலில் நல்லது இல்லீங்க. அரசியலில் முன்னுக்கு வரவேண்டும் என்று அவர் ஆசைப்படுகிறார் அல்லவா, அந்த குடும்பமும் ஆசைப்படுகிறது அல்லவா? பேசுகிற பாஷை, மொழி, நாக்கில் பதவிக்கு ஏற்ற அளவுக்கு வார்த்தைகள் அளந்து வரவேண்டும். இதை பொதுப்படையாக நான் சொல்கிறேன். அவர் மீது காழ்ப்புணர்வோடு சொல்லவில்லை.

நிவாரண உதவியாக ஏற்கனவே ரூ.900 கோடி வழங்கப்பட்டு விட்டது. இனி மத்தியக்குழு ஆய்வு செய்து மாநில அரசுடன் கலந்து பேசி அறிக்கை அளித்த பிறகு பிரதமர், உள்துறை அமைச்சர் கலந்து பேசி கூடுதல் நிதி வழங்கப்படும். மத்தியக்குழு இன்னும் அறிக்கை அளிக்கவில்லை.

வங்கிக்கணக்கில் ஏன் செலுத்தவில்லை :

தமிழ்நாடு அரசு ரூ.6 ஆயிரம் நிவாரணம் பற்றி விமர்சிக்க விரும்பவில்லை. அப்பன் சொத்தா? என்று கேட்கிற அந்த அரசில் கொடுக்கும் பணம் நேரடியாக வங்கிக்கணக்குக்கு கொடுக்கப்பட வேண்டும். அப்போதுதானே பயனாளிகளுக்கு செல்கிறதா? என்பதை பார்க்க முடியும். ஏன் நேரடியாக கொடுக்கிறீர்கள். அது அரசு பணம்தானே. என் அப்பன் சொத்து இல்லை. உங்கள் அப்பன் சொத்தும் இல்லை. வங்கிக்கணக்கில் போடுங்கள்.

ரூ.4 ஆயிரம் கோடி பணத்தின் பயன்பாடு பற்றி பயன்பாட்டுச் சான்றிதழ் வந்ததும் தணிக்கைக்குழு அதனை ஆய்வு செய்யும்.  இவ்வாறு அமைச்சர் நிர்மலா சீதாராமன் பதிலளித்தார்.


Spread the love

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours