தொடரும் கைது நடவடிக்கைகள்… ஒருவர் தப்பியோட்டம்.!

Spread the love

நேற்று நாடாளுமன்றத்தில் 2001ஆம் ஆண்டு பாராளுமன்றத்தில் பயங்கரவாத தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு 22ஆம் ஆண்டு நினைவஞ்சலி நிகழ்வு நடைபெற்றது. அந்த தினத்தில் நாடாளுமன்ற பார்வையாளர்கள் அரங்கில் இருந்த 2 இளைஞர்கள் திடீரென மக்களவைக்குள் குதித்து கோஷமிட்டனர். மேலும் காலில் மறைத்து வைத்து இருந்த மஞ்சள் வண்ண பூச்சிகளையும் அவர்கள் வெடிக்க செய்தனர். இதனால் நாடாளுமன்ற பாதுகாப்பே கேள்விக்குறியாகும் அளவுக்கு விவகாரம் பூதகரமானது .

அதீத பாதுகாப்பு கொண்ட பாராளுமன்றத்தில் இருவர் மக்களவைக்குள் குதித்தது எப்படி.? காலில் வண்ண பூச்சிகளை எப்படி கொண்டு வர முடிந்தது.? ஒருவேளை வேறு பயங்கர வெடிபொருள் கொண்டு வந்தால் என்னவாகி இருக்கும் என்ற கேள்விகள் தொடர்ந்து எழுந்த வண்ணம் இருக்கிறது. இதனால் நாடாளுமன்ற பாதுகாப்பை உறுதி செய்ய மத்திய உள்துறை அமைச்சகத்திற்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கடிதம் எழுதியுள்ளார். பாராளுமன்ற பாதுகாப்பு குறித்து எதிர்க்கட்சிகள் தொடர்ந்து கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

மக்களவையில் இரு இளைஞர்கள் குதித்து கோஷமிட்ட அதே நேரத்தில் வெளியில் ஒரு பெண்ணும், இளைஞரும் அதே போல வண்ண பூச்சிகளை வெளிப்படுத்தி அரசுக்கு எதிராக கோஷமிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் நாடாளுமன்ற வளாகமே பரபரப்பானது. இந்த விவகாரம் தொடர்பாக தனிப்படையினர் போராட்டத்தில் ஈடுப்பட்டவர்களை கைது செய்து விசாரணையை தீவிரப்படுத்தினர்.

அதில், மக்களவைக்குள் உள்ளே குதித்தது கர்நாடக மாநிலத்தை சேர்ந்த மனோரஞ்சன் மற்றும் உத்திர பிரதேசத்தை சேர்ந்த சாகர் சர்மா என்பது தெரியவந்தது. அதில் மனோரஞ்சன் , மைசூர் தொகுதி எம்பி பிரதாப் சிம்ஹா அலுவலகத்திற்கு தொடர்ந்து வந்து பாராளுமன்ற பார்வையாளர் அனுமதி சீட்டை வாங்கியுள்ளார். சாகரை தனது நண்பர் என கூறி 2 நுழைவு சீட்டு வாங்கியுள்ளார்.

பாராளுமன்றத்திற்கு வெளியே கோஷமிட்டவர்கள் ஹரியானா, ஜிந்தூரை சேர்ந்த நீலம் எனும் மாணவி மற்றும் மகாராஷ்டிரா மாநிலம் லத்தூரை சேர்ந்த வேலையில்லா பட்டதாரி அமோல் என்பதும் கண்டறியப்பட்டது. இவர்கள் கோஷம் போடுவதை வீடியோ எடுத்து சமூக வலைத்தளத்தில் பதிவிட்டவர் லலித் என்பதும் கண்டறியப்பட்டது.

இவர்கள் அனைவருக்கும் குருகிராமில் தங்க இடம் அளித்தது விஷால் சர்மா எனும் ஆட்டோ ஓட்டுநர். அவரையும் அவரது மனைவியையும் டெல்லி போலீசார் கைது செய்தனர். இதில் லலித் மட்டும் அங்கிருந்து தப்பித்து விட்டார். அவரை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. கைது செய்யப்பட்ட 5 பேரிடமும் தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.


Spread the love

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours