நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத்தொடர் கடந்த 4-ம் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் கடந்த 13-ம் தேதி அவைக்குள்ளும், வளாகத்திலும் வண்ண புகைக் குண்டுகள் வீசப்பட்டன. இந்த சம்பவத்தில் 6 பேர் கைது செய்யப்பட்டனர்.
நாடு முழுவதும் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்திய இந்த சம்பவம் தொடர்பாக உள்துறை அமைச்சர் அமித் ஷா, அவையில் விளக்கம் அளிக்க வேண்டும் என வலியுறுத்தி, எதிர்க்கட்சி எம்.பி-க்கள் மக்களவை, மாநிலங்களவையில் அமளியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதனால் அவை நடவடிக்கைக்கு இடையூறு ஏற்படுத்தியதாகக் கூறி, நேற்று வரை, இரு அவைகளிலும் எதிர்க்கட்சிகளை சேர்ந்த 141 எம்.பி-க்கள் இடைநீக்கம் செய்யப்பட்டனர்.
இந்நிலையில் இன்று வழக்கம்போல் அவை கூடியதும், கேரளாவைச் சேர்ந்த தாமஸ் சாழிக்கடன் (காங்கிரஸ்- மணி அணி), ஏ.எம்.ஆரிப் (மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்) ஆகிய இரு எம்.பி.க்கள் அவைத் தலைவர் முன்பு சென்று, பாதுகாப்பு அத்துமீறல் குறித்து உள்துறை அமைச்சர் விளக்கம் அளிக்க வேண்டும் என கோஷமிட்டனர். மேலும், அவர்கள் தங்கள் கையில் வைத்திருந்த எதிர்ப்பு வாசக அட்டைகளை உயர்த்தி காண்பித்து தங்களது எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.
இதைத் தொடர்ந்து அவை நடத்தை மீறல் காரணமாக இவர்கள் இருவரும் இந்த கூட்டத் தொடர் முழுவதும் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். இதையடுத்து சஸ்பெண்ட் செய்யப்பட்ட மொத்த எம்.பி-க்களின் எண்ணிக்கை 143 ஆக உயர்ந்துள்ளது. நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் வரும் வெள்ளிக்கிழமையுடன் (டிசம்பர் 22) நிறைவடைய உள்ளது குறிப்பிடத்தக்கது.
+ There are no comments
Add yours