நாளை தமிழகம் வரும் பிரதமர் மோடி!

Spread the love

சென்னை: தமிழகத்துக்கு 3 நாள் பயணமாக வரும் பிரதமர் நரேந்திர மோடி, சென்னையில் கேலோ இந்தியா போட்டிகளை நாளை தொடங்கி வைக்கிறார். ரங்கம், ராமேசுவரம், தனுஷ்கோடி சென்று சுவாமி தரிசனம் செய்கிறார். பிரதமர் வருகையை முன்னிட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

கேலோ இந்தியா இளையோர் விளையாட்டு போட்டிகள் வரும் 19-ம் தேதி முதல் 31-ம் தேதி வரை சென்னை, மதுரை, திருச்சி, கோவை ஆகிய 4 மாவட்டங்களில் நடைபெறுகிறது. இதன் தொடக்க விழா, சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நாளை (ஜன.19) மாலை 6 மணிக்கு நடைபெறுகிறது. போட்டிகளை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைக்கிறார்.

இந்த நிகழ்ச்சியில், ஆளுநர்ஆர்.என்.ரவி, முதல்வர் ஸ்டாலின், மத்திய அமைச்சர் அனுராக் சிங் தாக்கூர், தமிழக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர்.

இதில் பங்கேற்பதற்காக பிரதமர் மோடி, பெங்களூருவில் இருந்து விமானத்தில் புறப்பட்டு நாளை மாலை 4.50 மணிக்கு சென்னை வருகிறார். விமான நிலையத்தில் அவரை ஆளுநர் ஆர்.என்.ரவி,முதல்வர் ஸ்டாலின் உள்ளிட்டோர் வரவேற்கின்றனர்.

பிரதமர் மோடி அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம், ஐஎன்எஸ் அடையாறு கடற்படை தளத்துக்கு 5.20 மணிக்கு வருகிறார். பின்னர், காரில் நேரு உள்விளையாட்டு அரங்கம் வருகிறார். வழிநெடுகிலும் அவருக்கு தமிழக பாஜக சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்படுகிறது.

கேலோ இந்தியா தொடக்க விழாவில் பங்கேற்ற பிறகு, பிரதமர் மோடி இரவு 7.45 மணிக்கு காரில் ஆளுநர் மாளிகை வருகிறார். அங்கு நடைபெறும் பொது நிகழ்ச்சியில் பங்கேற்பதுடன், தமிழக பாஜக நிர்வாகிகள், முக்கிய பிரமுகர்களை சந்திக்கிறார்.

ஆளுநர் மாளிகையில் இரவு தங்கும் பிரதமர், மறுநாள் (ஜன.20) காலை 9.20 மணிக்கு சென்னை விமான நிலையம் வந்து, அங்கிருந்து விமானத்தில் திருச்சி செல்கிறார். ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் 10.55 மணி அளவில் தரிசனம் செய்வதுடன், அங்கு நடைபெறும் நிகழ்ச்சியிலும் பங்கேற்கிறார்.

தொடர்ந்து, காரில் ஹெலிகாப்டர் தளத்துக்கு செல்லும் பிரதமர் மோடி, மதியம் 2.05 மணிக்கு ராமேசுவரம் செல்கிறார். 2.10 மணிக்கு ராமேசுவரம் ராமநாத சுவாமி கோயில் தரிசனம் செய்கிறார். அங்கு நடைபெறும் பல்வேறு வழிபாட்டு நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார். இரவு 7.30 மணிக்கு அங்குள்ள ஸ்ரீராமகிருஷ்ணர் மடத்துக்கு செல்லும் பிரதமர், அங்கு இரவு தங்குகிறார்.

மறுநாள் (ஜன.21) காலை, ராமேசுவரம் அக்னி தீர்த்த கடலில் புனித நீராடும் பிரதமர் மோடி, தொடர்ந்து ராமநாத சுவாமி கோயிலில் நடைபெறும் பூஜைகளில் பங்கேற்கிறார். பின்னர், காலை 10.05 மணிக்கு சாலை மார்க்கமாக தனுஷ்கோடி அரிச்சல்முனைக்கு செல்கிறார். அங்குள்ள கோதண்டராமர் கோயிலில் 10.25 முதல் 11 மணி வரை நடைபெறும் வழிபாடுகளில் பங்கேற்கிறார்.

பாதுகாப்பு, தீவிர சோதனை: பிரதமர் வருகையை முன்னிட்டு, சென்னை, திருச்சி, ராமேசுவரம், தனுஷ்கோடி உள்ளிட்ட அனைத்து பகுதிகளிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. போலீஸார் அதிக அளவில் குவிக்கப்பட்டுள்ளனர். பிரதமர் தங்கும் இடங்கள் மற்றும் செல்லும் வழிகளில் அவரது பாதுகாப்பு அதிகாரிகள் தீவிர சோதனை மேற்கொண்டுள்ளனர்.


Spread the love

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours