தெலங்கானா பிரச்சாரத்தை முடித்துக் கொண்டு பிரதமர் மோடி நாளை மாலை விமானம் மூலம் திருப்பதி செல்ல உள்ளார். அவர் நாளை மறுதினம் காலையில் சாமி தரிசனம் செய்யவுள்ளார்.
உலக பிரசித்தி பெற்ற திருமலை திருப்பதிக்கு தினமும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வந்து தரிசனம் செய்து வருகின்றனர். இந்தியா மட்டுமின்றி பல்வேறு வெளிநாடுகளில் இருந்தும் ஏழுமலையானை தரிசனம் செய்து வருகின்றனர்.
திருப்பதி மலைக்கு வாகனங்கள் மற்றும் மலைப்பாதையில் பாத யாத்திரையாகவும் சென்று பக்தர்கள் வழிபாடு செய்து வருகின்றனர். மேலும், இலவச தரிசனம், ரூ.300 கட்டணம், விஐபி என பல்வேறு முறைகளில் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.
இந்நிலையில், தெலங்கானாவில் பிரச்சாரத்தை முடித்துக் கொண்டு பிரதமர் மோடி நாளை (நவம்பர் 26) மாலை 7.00 மணிக்கு திருப்பதி வருகிறார். ரேனிகுண்டா விமான நிலையம் வரும் பிரதமர் மோடியை, ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி, ஆளுநர் அப்துல் நசீர் மற்றும் அதிகாரிகள் வரவேற்கின்றனர்.
பின்னர், விமான நிலையத்தில் இருந்து சாலை மார்க்கமாக காரில் திருமலைக்கு சென்று அங்குள்ள விருந்தினர் மாளிகையில் ஓய்வு எடுக்கிறார். பின்னர், திங்கட்கிழமை (நவம்பர் 27) காலை விஐபி பிரேக் தரிசனத்தில் ஏழுமலையானை தரிசனம் செய்கிறார். தரிசனம் முடிந்து காலை 10.25 மணிக்கு விமான நிலையம் செல்லும் பிரதமர் மோடி மீண்டும் விமானம் மூலம் டெல்லி செல்ல இருக்கிறார். பிரதமர் மோடி திருப்பதி வருகையையொட்டி, திருப்பதி முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
திருப்பதிக்கு வருகை தரும் பிரதமர் மோடிக்கு பாதுகாப்பான அறை வழங்க வேண்டும் என்று மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். தீ பாதுகாப்பு மற்றும் உணவு பாதுகாப்பு ஏற்பாடுகளை உறுதி செய்ய வேண்டும் என்றும் மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். மேலும், தடையில்லா மின்சாரம் வழங்க வேண்டும் என்றும், முறையான மின் விளக்கு வசதிகளை செய்ய வேண்டும் என்றும் உத்தரவிட்டிருக்கிறார். மேலும், அன்றையை தினம் விஜபி தரிசனம் ரத்து செய்யப்படுவதாக தேவஸ்தானம் தெரிவித்துள்ளது. அதாவது, நவம்பர் 27ம் தேதி விஐபி தரிசனம் ரத்து என்றும், நவம்பர் 26ம் தேதி பரிந்துரை கடிதங்கள் எதுவும் ஏற்கப்படாது என்றும் தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.
+ There are no comments
Add yours