மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத் சனிக்கிழமை தனது கேல் ரத்னா மற்றும் அர்ஜூனா விருதுகளை திருப்பித் தர பிரதமர் அலுவலகத்துக்கு சென்ற போது டெல்லி போலீஸாரால் தடுத்து நிறுத்தப்பட்ட நிலையில், விருதுகளை கடமைப் பாதையின் நடுவில் வைத்து விட்டுச் சென்றார். முன்னதாக செவ்வாய்க்கிழமை பிரதமர் மோடிக்கு போகத் எழுதிய கடிதத்தில், பெண் மல்யுத்த வீராங்கனைகளுக்கு நீதி கிடைக்காததை வெளிப்படுத்தும் விதமாக தனது கேல் ரத்னா, அர்ஜூனா விருதுகளை அரசுக்கு திருப்பி தரப்போவதாக தெரிவித்திருந்தார். இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் முன்னாள் தலைவர் பிரிஜ் பூஷண் மீது, மல்யுத்த வீராங்கனைகள் பாலியல் குற்றச்சாட்டு தெரிவித்து பல மாதங்களாக போராட்டம் நடத்தி வந்தனர். தங்களின் கோரிக்கைகளை வலியுறுத்தும் விதமாக வினேஷ் போகத் இந்த நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளார்.
இதுகுறித்து காங்கிரஸ் முக்கியத் தலைவர் ராகுல் காந்தி பிரதமர் மோடியை விமர்சித்துள்ளார். தனது எக்ஸ் தள பக்கத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், “நாட்டின் ஒவ்வொரு மகளுக்கும் சுயமரியாதை முதன்மையானது. விருதுகள் மற்றும் மரியாதைகள் எல்லாம் அதற்கு பின்னர்தான். இன்று பாகுபலியாக சொல்லப்பட்ட ஒருவரிடம் பெற்ற அரசியல் ஆதாயம், இந்த தைரியமான மகளின் கண்ணீரை விட பெரியதா? பிரதமர் இந்த தேசத்தின் காவலர். அவர் இதுபோன்ற கொடுமைகளில் அமைதி காப்பது வேதனை அளிக்கிறது” என்று தெரிவித்துள்ளார்.
முன்னதாக இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் முன்னாள் தலைவர் பிரிஜ் பூஷண் சிங் மீது வீராங்கனைகள் பாலியல் துன்புறுத்தல் புகார் தெரிவித்து அவர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி போராட்டம் நடத்தி வந்தனர். இந்தநிலையில் இந்திய மல்யுத்த கூட்டமைப்பு தேர்தல் சில தினங்களுக்கு முன் நடந்தது. இதில் முன்னாள் தலைவரான பிரிஜ் பூஷன் சரண் சிங்கின் நெருங்கிய ஆதரவாளரான சஞ்சய் சிங் 40 வாக்குகள் பெற்று வெற்றி பெற்று புதிய தலைவரானார்.
புதிய தலைவராக தேர்வான சஞ்சய் சிங்குக்கு மல்யுத்த வீரர், வீராங்கனைகளிடம் எதிர்ப்பு கிளம்பியது. இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் தலைவராக இருந்த பிரிஜ் பூஷன் சரண் சிங்கின் நெருங்கிய ஆதரவாளரான சஞ்ஜய் சிங் தோ்வானதையடுத்து சாக்ஷி மாலிக் மற்றும் பஜ்ரங் புனியா ஆகியோர் விளையாட்டிலிருந்து விலகினர். அவர்களைத் தொடர்ந்து மல்யுத்த வீரர் வீரேந்தர் சிங்கும் மல்யுத்த விளையாட்டில் இனி ஈடுபட போவதில்லை என அறிவித்தார். மேலும் அவர் தனது பத்மஸ்ரீ விருதையும் திரும்ப ஒப்படைக்கப் போவதாக கூறினார். அதேபோல் பஜ்ரங் புனியா தனது விருதுகளை திருப்பி ஒப்படைத்தார். இந்தப் பின்னனியில் வினேஷ் போகத்தும் தனது விருதுகளை திரும்ப ஒப்படைத்துள்ளது கவனிக்கத்தக்கது.
+ There are no comments
Add yours