கிறிஸ்துமஸ் அன்று தனது இல்லத்துக்கு வந்த பள்ளி மாணவர்கள், தங்கள் மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொள்ளும் வீடியோவைப் பிரதமர் நரேந்திர மோடி எக்ஸ் வலைதள பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
கிறிஸ்துமஸ் தினமான கடந்த 25ம் தேதி அன்று, சிறப்பு நிகழ்ச்சியாக பள்ளி மாணவ, மாணவிகள் பிரதமர் நரேந்திர மோடியின் அதிகாரபூர்வ இல்லத்துக்கு சுற்றுப் பயணமாக அழைத்துச் செல்லப்பட்டனர். கிறிஸ்துமஸ் தினம் என்பதால் அனைவரும் சிவப்பு நிற உடை அணிந்திருந்தனர். மாணவ, மாணவிகள், பிரதமர் இல்லத்தில் உள்ள பல்வேறு அறைகள், ஆலோசனை கூட்டம் நடைபெறும் இடம், அங்குள்ள கலை பொருள்கள் உள்ளிட்ட பல்வேறு இடங்கள், பொருட்களை ஆர்வமுடன் சுற்றிப் பார்த்தனர். பின்னர், அவர்கள் பிரதமருடன் மேஜையில் அமர்ந்து மகிழ்ச்சியாக உரையாடினர்.
பிரதமர் இல்லத்தை சுற்றிப் பார்த்த அனுபவம் குறித்து மாணவி ஒருவர் கூறுகையில், “இது ஒரு சிறந்த வாய்ப்பாக அமைந்தது. பிரதமர் இல்லத்தை பார்வையிட்டது மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. இது போன்ற பல வாய்ப்புகள் எதிர்காலத்தில் கிடைக்கும் என்று நம்புகிறேன்” என்றார்.
இந்த காட்சிகள் அடங்கிய வீடியோவை எக்ஸ் தளத்தில் பகிர்ந்துள்ள பிரதமர் மோடி, “7, எல்.கே.எம் (பிரதமர் இல்ல முகவரி) இல்லத்துக்கு வந்த ஆர்வமுள்ள இளம் மாணவர்கள் சிறந்த அனுபவத்தை வழங்கினர். எனது அலுவலகம் இறுதி தேர்வில் தேர்ச்சி பெற்றதாகத் தெரிகிறது. அதன் அடையாளமாக அவர்கள் கட்டை விரலை உயர்த்தி காண்பித்தனர்” என பதிவிட்டுள்ளார்.
+ There are no comments
Add yours