பிரதமர் அறிவித்த ‘பிரதான் மந்திரி சூரியோதயா யோஜானா’ திட்டத்தின்படி , 1 கோடி வீடுகளுக்கு சூரிய மின் கூரை அமைப்பு வழங்குவது உள்பட பல்வேறு முக்கிய அம்சங்கள் இடம்பெற்றுள்ளன.
அயோத்தி ராமர் கோயில் விழாவில் பிரதமர் மோடி நேற்று பங்கேற்ற பின்னர், மாலையில் எக்ஸ் தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டார். அதில் ‘பிரதான் மந்திரி சூரியோதயா யோஜனா’ திட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி புதிதாக அறிவித்தார்.
இத்திட்டத்தின் கீழ் நாடு முழுவதும் ஒரு கோடி வீடுகளுக்கு மேற்கூரை மூலம் சூரிய மின்சக்தி கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து பிரதமர் நரேந்திர மோடி வெளியிட்டுள்ள பதிவில், “உலகின் அனைத்து பக்தர்களும் எப்போதும் ஸ்ரீராமரின் ஒளியிலிருந்து ஆற்றலைப் பெறுகிறார்கள். அயோத்தியில் பிரான பிரதிஷ்டையின் புனிதமான சந்தர்ப்பத்தில், இந்தியர்கள் தங்கள் வீட்டின் கூரையில் தங்கள் சொந்த சூரிய மின் கூரை அமைப்பை வைத்திருக்க வேண்டும் என்பது எனது தீர்மானமாக மாறியுள்ளது.
அயோத்தியில் இருந்து திரும்பிய பிறகு, 1 கோடி வீடுகளுக்கு சூரிய மின் கூரை அமைப்பை நிறுவும் இலக்கைக் கொண்டு “பிரதான் மந்திரி சூரியோதயா யோஜனா” திட்டத்தை நமது அரசு தொடங்கும் என்ற முதல் முடிவை எடுத்துள்ளேன். இது ஏழை மற்றும் நடுத்தர வர்க்கத்தின் மின்சாரக் கட்டணத்தை குறைப்பது மட்டுமல்லாமல், எரிசக்தித் துறையில் இந்தியாவை தன்னிறைவு பெறச் செய்யும்” எனக் குறிப்பிட்டுள்ளார்.
+ There are no comments
Add yours