பெங்களூரு: காவிரி ஆற்றின் குறுக்கே மேகேதாட்டுவில் புதிய அணை கட்டுவதில் கர்நாடக அரசு உறுதியாக இருக்கிறது. அணை கட்டுவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் தயாராக உள்ளன என்று கர்நாடக பட்ஜெட் உரையில் முதல்வர் சித்தராமையா அறிவித்துள்ளார்.
கடந்த பிப்ரவரி 1-ம் தேதி நடந்த காவிரி மேலாண்மை ஆணைய கூட்டத்தில், தமிழகத்தின் எதிர்ப்புக்கு மத்தியில் மேகேதாட்டு அணை திட்டம் குறித்து விவாதிக்கப்பட்டது. அப்போது ஆணையத்தின் தலைவர் எஸ்.கே. ஹல்தர், மேகேதாட்டு அணை கட்டுவதற்கான விரிவான திட்ட அறிக்கையை மத்திய நீர் ஆணையத்தின் பரிசீலனைக்கு அனுப்ப உத்தரவிட்டார். இந்நிலையில், கர்நாடக சட்டப்பேரவையில் 2024-25-ம் ஆண்டுக்கான பட்ஜெட்டை முதல்வர் சித்தராமையா நேற்று தாக்கல் செய்து உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது:
உறுதி:
காவிரி ஆற்றின் குறுக்கே மேகேதாட்டுவில் புதிய அணை கட்டுவதில் கர்நாடக அரசு உறுதியாக உள்ளது. அணை கட்டுவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் தயாராக உள்ளன.
சிறப்பு குழுக்கள்:
அணை கட்டுவதற்கு 3 சிறப்பு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. அணை கட்டப்பட உள்ள இடம், நீர் செல்லும் இடங்கள், வெட்டப்பட வேண்டிய மரங்கள் தொடர்பான ஆய்வு பணியை இக்குழுவினர் முடித்துள்ளனர். அணை கட்டும் பகுதியில் உள்ள விவசாய நிலங்களை கையகப்படுத்தும் பணிகளையும் தொடங்கியுள்ளனர். மத்திய அரசு அனுமதி அளித்ததும் மேகேதாட்டு அணை கட்டப்படும். இந்த திட்டத்தை தொடங்க கர்நாடக அரசு முழு முன்னுரிமை அளித்துள்ளது. பெங்களூரு குடிநீர் வழங்கல் வாரியம் சார்பாக ‘காவிரி குடிநீர் திட்டம் 5 நிறைவேற்றப்பட உள்ளது. இந்த திட்டத்தின் கீழ் தினசரி 775 மில்லியன் லிட்டர் காவிரி நீர் பெங்களூருவுக்கு கூடுதலாக விநியோகம் செய்யப்படும். இதன்மூலம் 12 லட்சம் பேர், தினமும் தலா 110 லிட்டர் குடிநீர் பெறுவார்கள். இத்திட்டத்தின்கீழ் 228 கி.மீ. தூரத்துக்கு வடிகால் குழாய்கள் அமைக்கப்படும். இந்த ஆண்டின் இறுதிக்குள் இத்திட்டம் நிறைவடையும்.
இவ்வாறு அவர் அறிவித்தார். முதல்வர் சித்தராமையாவின் இந்த அறிவிப்புக்கு கர்நாடக விவசாய சங்கத்தினரும், கன்னட அமைப்பினரும் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.
+ There are no comments
Add yours