புதுச்சேரி பொதுப்பணித் துறையின் பணிகளை கண்காணிக்க புதிய முறை!

Spread the love

புதுச்சேரி பொதுப்பணித் துறையின் பணிகளை கண்காணிக்க கைனடிக்ஸ் இ-டிராகிங் போர்டல் ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது. பொதுப்பணித் துறை மூலமாக செயல்படுத்தப்படும் திட்டங்களின் தற்போதைய நிலைகள் குறித்தும், அவற்றை கண்காணிக்கவும் இந்த புதிய முறை பயன்படுத்தப்படுகிறது. புதுச்சேரி, காரைக்கால், மாஹே மற்றும் ஏனாம் ஆகிய பகுதிகளின் பொதுப்பணித்துறை செயலாளர் மற்றும் மூத்த அதிகாரிகளுக்கு இதற்கான லாக்இன் ஐடிகள் பகிர்ந்தளிக்கப்பட்டு நடைபெற்று வரும் பணிகளின் நிலை கண்காணிக்கப்படுகிறது.

இதுகுறித்து புதுச்சேரி பொதுப்பணித் துறை செயலர் மணிகண்டன் கூறுகையில், ‘‘முதலில் இந்த கைனடிக்ஸ் இ-டிராகிங் போர்டல், பணிகளை கண்காணிக்க உருவாக்கப்பட்டது. தற்போது நிர்வாக ரீதியாகவும் இதனை பயன் படுத்துகிறோம். இந்த போர்டல் மூலமாக பொதுப்பணித்துறை சார்பில் நடைபெற்று வரும் பணிகள் எந்த நிலையில் இருக்கிறது; மேற்கொள்ள வேண்டிய பணிகள் என்ன; என்பதை வழங்குவதோடு மட்டுமின்றி தண்ணீர், சாலை, வாய்க்கால் உள்ளிட்ட பொதுப்பணித்துறை சமபந்தப்பட்ட பிரச்சினைகள்தொடர்பாக நாளிதழ்களில் வெளியாகும் செய்திகளை செய்தி மற்றும் விளம்பரத்துறை மூலம் அவை புகைப்படம் எடுத்து இந்த போர்டெலில் பதிவேற்றம் செய்யப்படும்.

இந்த பதிவேற்றப்பட்ட தகவல்கள் தினமும் காலையில் பொதுப்பணித்துறை தலைமை அலுவலகத்தில் இருந்து எடுக்கப்பட்டு சம்பந்தப்பட்ட பொதுப்பணித்துறை பிரிவுகளுக்கு அனுப்பப்படும். அவற்றை ஒவ்வொரு பிரிவு செயற்பொறியாளரும் கண்காணித்து உடனடியாக அந்த பிரச்சினைக்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு தீர்வு காண முடியும். எடுக்கப்பட்ட நடவடிக்கை அறிக்கைகளை போர்டலில் பதிவேற்றவும் உதவும். பொதுப்பணித்துறை அமைச்சரின் அலுவலகத்தில் இருந்து ஒருங்கிணைந்த செய்திக்குறிப்பு இயக்கவியல் மூலம் தானாகவே இது அனுப்பப்படும்.

மேலும், புதுச்சேரியின் இந்த போர்டல் முதன்முறையாக மத்திய அரசின் கிராமப்புற உள்கட்டமைப்பு மேம்பாட்டு நிதி (RIDF) போர்டலுடன் இணைக்கப்பட்டுள்ளது. இதோடு மட்டுமின்றி நாபார்டும், பொதுப்பணித்துறை பணிகள் குறித்து கண்காணிக்க முடியும். மற்ற மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் இந்த போர்டலை தொடங்க முடிவு செய்துள்ளனர்” என்றார். பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் சுந்தரமூர்த்தி கூறும்போது, “பொதுப்பணித் துறையின் பல்வேறு பிரிவுகளால் எடுக்கப்பட்ட 524 பணிகள் இந்த போர்டலில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன.

செயலர்கள் மற்றும் பொதுப்பணித்துறை அதிகாரிகள் எவ்வளவு பணிகள் செய்துள்ளனர்; துறை சார்ந்த சொத்துகள்; பிரிவு வாரியான நிலை; நிதிப் பயன்பாடு; தொகுதி வாரியான பணிகளின் விவரங்கள்; திட்ட வாரியான அறிக்கைகள் மற்றும் நடுவர் மன்றத்தை கண்காணிப்பதற்கான வழிமுறைகள் பற்றிய அனைத்து விவரங்களையும் கண்காணிக்க முடியும். மேலும் புகார்களை கண்காணிப்பதற்கான எச்சரிக்கை அமைப்பும் போர்டலில் உள்ளது. திட்டப் பணிகள் ஒவ்வொன்றுக்கும் குறிப்பிட்ட காலக்கெடு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. சம்பந்தப்பட்ட இடங்களுக்கு நேரடியாக சென்று பார்வையிட்டு ஆய்வு செய்யும்போது சம்பந்தப்பட்ட இளைநிலை பொறியாளர், தற்போதைய பணியின் நிலையை விவரிக்கும் புகைப்படத்தை செல்போன் ஆப் மூலம் பதிவேற்றும் வதிகளும் செய்யப்பட்டுள்ளன” இவ்வாறு அவர் கூறினார்.


Spread the love

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours