பெங்களூரு குண்டு வெடிப்பு சம்பவத்தில் இரு தரப்பினருக்கிடையே மோதலைத் தூண்டும் வகையில் பேசியதாக மத்திய இணை அமைச்சர் ஷோபா மீது மதுரை சைபர் கிரைம் காவல்துறையினர் 4 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
கடந்த மார்ச் 1ஆம் தேதி பெங்களூரு ராமேஸ்வரம் கபேயில் குண்டு வெடிப்பு நிகழ்ந்தது. அதுகுறித்த விசாரணை நடைபெற்று வரும் நிலையில், கடந்த மார்ச் 19-ஆம் தேதி மத்திய இணை அமைச்சர் ஷோபா கரந்தலாஜே பெங்களூருவில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பின்போது, ராமேஸ்வரம் கபே குண்டு வெடிப்பில் தமிழகத்திலிருந்து பயிற்சி பெற்று இங்க வெடிகுண்டுகளை வைக்கிறார்கள் என குற்றம் சாட்டியிருந்தார். இதற்கு தமிழக முதல்வர் ஸ்டாலின், எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் கண்டித்திருந்தனர். இதையடுத்து தனது பேச்சுக்கு மன்னிப்பு கேட்பதாக அமைச்சர் ஷோபா தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், தமிழக மக்களை இழிவுப்படுத்தி பேசிய அமைச்சர் ஷோபா மீது நடவடிக்கை எடுக்ககோரி திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, தேர்தல் ஆணையத்தில் புகார் அளித்துள்ளார். இதைத் தொடர்ந்து, மதுரை மாவட்டம் கடச்சனேந்தலைச் சேர்ந்த தியாகராஜன் என்பவர் சைபர் கிரைம் காவல்துறையில் புகார் அளித்துள்ளார். அதில், மத்திய இணை அமைச்சர் ஷோபாவின் பேச்சு, கர்நாடக மற்றும் தமிழக மக்களிடையே வெறுப்புணர்வுகளை வளர்க்க முயற்சிக்கிறது. தமிழ்நாட்டு மக்களை தீவிரவாதிகள் என பொதுமைப்படுத்தி தமிழர்கள் மற்றும் கன்னடம் பேசும் மக்களிடையே பகைமையை உருவாக்க முயல்கிறது.
வெறுப்புணர்வை தமிழ் சமூகத்திற்கு எதிராக வன்முறையை தூண்டும் சாத்தியமும் உள்ளது. மத்திய இணையமைச்சர் ஷோபாவின் கருத்து இருபிரிவினருக்கிடையே உள்ள நல்ல உறவைக் கெடுத்துள்ளது. இது சட்ட ஒழுங்கு நிலைமையை சீர்குலைத்துள்ளது. அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இதனையடுத்து மதுரை சைபர் கிரைம் போலீசார் அமைச்சர் ஷோபா கரந்தாலாஜே மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
+ There are no comments
Add yours