“எனக்கும், மல்யுத்த விளையாட்டுக்கும் எந்த சம்பந்தமுமில்லை. இந்த விவகாரம் தொடர்பாக உள் துறை அமைச்சர் அமித் ஷாவிடம் நான் எதுவும் பேசப் போவதில்லை” என பாஜக எம்பி-யும், இந்திய மல்யுத்த சம்மேளன முன்னாள் தலைவருமான பிரிஜ் பூஷண் சரண் சிங் தெரிவித்தார்.
இந்திய மல்யுத்த சம்மேளனத்தின் (டபிள்யூஎப்ஐ) தலைவராக சமீபத்தில் சஞ்சய் சிங் தேர்வு செய்யப்பட்டார். இவரது அணியை சேர்ந்த 13 பேர் மல்யுத்த சம்மேளனத்தின் பெரும்பான்மையான பொறுப்புகளில் வெற்றி பெற்றனர். சஞ்சய் சிங், டபிள்யூஎப்ஐ முன்னாள் தலைவரும், பாஜக எம்பி-யுமான பிரிஜ் பூஷண் சரண் சிங்கின் ஆதரவாளர் ஆவார்.
பிரிஜ்பூஷண் டபிள்யூஎப்ஐ தலைவராக இருந்தபோது பாலியல் புகாரில் சிக்கினார். அவருக்கு எதிராக மல்யுத்த வீரர்கள், வீராங்கனைகள் போர்க்கொடி தூக்கினர்.
டபிள்யூஎப்ஐ தேர்தலில் சஞ்சய் தேர்வானதால், அதிருப்தி அடைந்த வீராங்கனை சாக்ஷி மாலிக் மல்யுத்த விளையாட்டை விட்டே விலகுவதாக அறிவித்தார். வீரர்கள் பஜ்ரங் புனியா, வீரேந்தர் சிங் ஆகியோர் தங்களது பத்மஸ்ரீ விருதுகளை திரும்ப அளிப்பதாக அறிவித்தனர்.
இந்நிலையில் உத்தரப் பிரதேச மாநிலம், காண்ட் மாவட்டம், நந்தினி நகரில் 15 மற்றும் 20 வயதுக்கு உட்பட்டோருக்கான மல்யுத்த போட்டி இம்மாத இறுதிக்குள் நடத்தப்படும் என டபிள்யூஎப்ஐ புதிய தலைவர் சஞ்சய் சிங் அறிவித்தார்.
இந்த அறிவிப்பு விளையாட்டு விதிகளை மீறியும், அவசர அவசரமாக அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் கூறி, டபிள்யூஎப்ஐ புதிய நிர்வாகக் குழுவுக்கு மத்திய அரசு தடைவிதித்தது.
இந்நிலையில், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்திக்க இன்று டெல்லி வந்த பிரிஜ் பூஷண் சரண் சிங் செய்தியாளர்களைச் சந்தித்தார்.
அப்போது அவர் கூறுகையில், “மல்யுத்த விளையாட்டு நிர்வாகத்திலிருந்து நான் முற்றிலும் விலகிவிட்டேன். உள்துறை அமைச்சர் அமித் ஷா அவர்களைச் சந்திக்க உள்ளேன். அவருடனான சந்திப்பின்போது மல்யுத்த சம்மேளன விவகாரம் குறித்து நான் பேசப்போவதில்லை. சஞ்சய் சிங் அவர் வேலையை செய்கிறார். நான் என் வேலையை செய்கிறேன். மல்யுத்த சம்மேளனத்துக்கும், அரசுக்கும் இடையிலான விவகாரத்தில் எனது பங்கு எதுவுமில்லை” என்றார்.
+ There are no comments
Add yours