ஜனவரி 27-ம் தேதிக்குள் வெள்ள நிவாரண நிதி வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என உள்துறை அமைச்சர் உறுதியளித்துள்ளதாக திமுக நாடாளுமன்ற குழுத் தலைவர் டி.ஆர். பாலு தெரிவித்தார்.
சென்னை மற்றும் தமிழகத்தின் தென் மாவட்டங்களான நெல்லை, தூத்துக்குடியில் கடந்த டிசம்பர் மாதம் பெய்த கனமழை காரணமாக கடுமையான வெள்ள பாதிப்பு ஏற்பட்டது. அதனைத் தொடர்ந்து தமிழக அரசு சார்பில் மீட்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு நிவாரணப் பணிகள் நடைபெற்றது. அதேபோல் மத்தியக் குழுவும் ஆய்வு செய்து, தமிழக அரசின் மீட்பு நடவடிக்கைக்கு பாராட்டு தெரிவித்தது. இந்நிலையில், மத்திய அரசிடம் தமிழக அரசு நிவாரணத் தொகை வழங்க கோரிக்கை வைத்தது.
இதுதொடர்பாக, தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின், அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் பிரதமர் மோடியை நேரில் சந்தித்து தமிழகத்திற்கான நிவாரணத் தொகையை வழங்க வேண்டும் எனக் கோரிக்கை வைத்திருந்தனர். இந்நிலையில், இன்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை, திமுக எம்.பி டி.ஆர்.பாலு தலைமையிலான தமிழக எம்.பி.க்கள் குழு நேரில் சந்தித்தது. அப்போது, தமிழ்நாடு வெள்ள பாதிப்பு தொடர்பாக விரிவான அறிக்கை வழங்கப்பட்டது.
தமிழ்நாடு அரசு கோரிய நிதியை உடனே விடுவிக்க வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டது. மத்திய குழுவின் அறிக்கை கிடைத்தவுடன் பேரிடர் பாதிப்புக்கு ஏற்ப சம்மந்தப்பட்ட துறைகளுடன் ஆலோசித்து ஜனவரி 27ம் தேதிக்குள், நிவாரண நிதியை விடுவிப்பதாக அமித்ஷா உறுதி அளித்துள்ளார். இந்த சந்திப்பு நிறைவாக இருந்ததாக டி.ஆர்.பாலு தெரிவித்துள்ளார்
+ There are no comments
Add yours