ஊதியச் செலவைக் குறைக்க பேடிஎம் நிறுவனம் தனது பல்வேறு துறைகளில் பணிபுரியும் 1000 ஊழியர்களை பணிநீக்கம் செய்துள்ளது. இவர்கள் செய்து வந்த வேலையை ஏ.ஐ தொழில்நுட்பம் மூலம் மேற்கொள்ள முடிவு செய்துள்ளது.
பிரபல யுபிஐ செயலியான பேடிஎம் நிறுவனத்தின் தாய் நிறுவனம் ‘ஒன் 97 கம்யூனிகேஷன்’. இந்த நிறுவனம் தனது ஊழியர்களுக்கான சம்பளச் செலவில் 15 சதவீதத்தை மிச்சப்படுத்தும் நடவடிக்கையாக பேடிஎம்மில் பல்வேறு துறைகளில் பணிபுரியும் 1000-க்கும் மேற்பட்ட ஊழியர்களை பணிநீக்கம் செய்துள்ளது. இந்த நடவடிக்கையானது கடந்த சில மாதங்களாகவே நடைபெற்று வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதன் காரணமாக பணம் செலுத்துதல்கள், கடன், செயல்பாடுகள், விற்பனை ஆகிய துறைகளில் ஒட்டுமொத்த பணியாளர்களின் எண்ணிக்கையில் 10 சதவீத பணியாளர்களுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
புதிய பொருளாதாரச் சூழலில் பல்வேறு நிறுவனங்கள் நவீன தொழில்நுட்பத்தைப் பயன்படுத்த தொடங்கியுள்ளன. இதன் காரணமாக இந்த நிதியாண்டின் முதல் காலாண்டில் 28 ஆயிரம் பணியாளர்கள் வேலையிழப்புக்கு ஆட்பட்டுள்ளனர். பல நிறுவனங்கள் ஊழியர்களுக்கு சம்பளம் கொடுப்பதில் சிரமத்தை எதிர்கொண்டுள்ளதால் இத்தகைய முடிவை மேற்கொண்டுள்ளன. அந்த நிறுவனங்களின் வரிசையில் பேடிஎம் இணைந்துள்ளது.
இதுதொடர்பாக பேடிஎம் நிறுவனத்தை சேர்ந்தவர்கள் தரப்பில் கூறுகையில், வேலையிலிருந்து நீக்கப்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கை இவ்வளவு அளவு கிடையாது. ஆனால், வேலை நீக்க நடவடிக்கை தொடர்கிறது என்றனர்.
இதுதொடர்பாக மேலும் அவர்கள் கூறுகையில், “நடப்பு நிதி ஆண்டில் ஊழியர்களுக்கு வழங்கும் சம்பளத் தொகையில் 10-15 சதவீதம் வரை குறைக்க நிறுவனம் முடிவு செய்துள்ளது. ஊழியர்கள் நீக்கத்தால் பாதிக்கப்படும் வேலைகளைத் தொடர்ந்து மேற்கொள்ள ஏ.ஐ. தொழில்நுட்பத்தைப் பயன்படுத்த பேடிஎம் முடிவு செய்துள்ளது.
அத்துடன் தனது வணிகத்தை மேம்படுத்த, வரும் ஆண்டுகளில் 15 ஆயிரம் ஊழியர்களை நியமிக்க முடிவு செய்துள்ளது. குறிப்பாக காப்பீடு விநியோக துறையில் புதிய வேலை வாய்ப்புகளை ஏற்படுத்த பேடிஎம் முடிவு செய்துள்ளது” என்றனர்.
தற்போதைய சூழலில் பணி நீக்கம் செய்யப்பட்ட ஊழியர்களுக்கு வேலை நீக்கத்துக்கான இழப்பீடு தொகை வழங்கப்படுமா அல்லது மேலும் பல ஊழியர்கள் வேலை இழக்கும் அபாயம் ஏற்படுமா என உறுதியான தகவல் வெளியாகவில்லை
+ There are no comments
Add yours