மல்யுத்த வீராங்கனைகளுக்கு பாலியல் தொந்தரவு அளித்த விவகாரத்தில் உரிய நடவடிக்கை எடுக்காத மத்திய அரசை கண்டிக்கும் வகையில், மத்திய அரசு வழங்கிய இரண்டு உயரிய விருதுகளை திருப்பி அளிப்பதாக மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத் அறிவித்துள்ளார்.
இந்திய மல்யுத்த சம்மேளனத்தின் தலைவராக பதவி வகித்து வந்த பிரிஜ் பூஷன் சிங், மல்யுத்த வீராங்கனைகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக புகார் எழுந்தது. இதையடுத்து பாதிக்கப்பட்ட மல்யுத்த வீராங்கனைகள் மற்றும் அவர்களுக்கு ஆதரவாக வீரர்கள் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டனர். இருப்பினும் பிரிஜ் பூஷன் சிங் மீது வழக்கு பதிவு செய்வது தாமதமாகி வந்ததால் அவர்களின் போராட்டம் தொடர்ந்து வந்தது.
இந்த நிலையில நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் பிரிஜ் பூஷன் சிங் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு, அவர் கைது செய்யப்பட்டார். இதையடுத்து போராட்டம் கைவிடப்பட்டது. இருப்பினும் இந்திய மல்யுத்த சமுதாயத்தின் புதிய தலைவராக பெண் ஒருவரை தேர்வு செய்ய வேண்டும் என மல்யுத்த வீராங்கனைகள் கோரிக்கை விடுத்திருந்தனர். இந்நிலையில் புதிய தலைவராக பிரிஜ் பூஷன் சிங்கின் நெருங்கிய ஆதரவாளரான சஞ்சய் சிங் என்பவர் தேர்வு செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் மல்யுத்த வீரர்கள் மீண்டும் போராட்டத்தில் குதித்துள்ளனர்.
இந்த முறை சஞ்சய் சிங்கின் தேர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து, வீராங்கனை சாக்ஷி மாலிக் மல்யுத்தத்திலிருந்து விலகுவதாக அறிவித்தார். ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற வீரரான பஜ்ரங் பூனியா, தனது பத்மஸ்ரீ விருதை மத்திய அரசிடமே திருப்பி அளித்தார். இந்நிலையில் தனக்கு வழங்கப்பட்ட அர்ஜுனா மற்றும் கேல்ரத்னா விருதுகளை திருப்பி அளிப்பதாக மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத் தற்போது அறிவித்துள்ளார்.
இது தொடர்பாக தனது எக்ஸ் தளத்தில் பதிவு வெளியிட்டுள்ள அவர், ”நான் எனது மேஜர் தியான்சந்த் கேல் ரத்னா மற்றும் அர்ஜுனா விருதுகளை திருப்பி அளிக்கிறேன். இந்த நிலையை ஏற்படுத்திய எல்லாம் வல்ல இறைவனுக்கு நன்றி.” என பதிவிட்டுள்ளார். அவரது இந்த பதிவு விளையாட்டுத் துறையினர் மத்தியில் மட்டுமின்றி, அரசியலிலும் பெரும் விவாதத்தை ஏற்படுத்தி உள்ளது. தொடர்ந்து வீரர், வீராங்கனைகள் தங்களது விருதுகளை திரும்ப வழங்கி வருவதால் மத்திய அரசுக்கு நெருக்கடி உருவாகியுள்ளது.
+ There are no comments
Add yours