பெரிய வெங்காயம் விலையைத் தொடர்ந்து பூண்டு விலையும் உயர்ந்துள்ளது. மதுரையில் ஒரு கிலோ பூண்டு தரத்தைப்பொறுத்து ரூ.500 வரை விற்பனையாகிறது.
தமிழகத்தில் ரூ.20 முதல் ரூ.30 வரை விற்ற பெரிய வெங்காயத்தின் விலை தற்போது ரூ.60 வரை உயர்ந்துள்ளது. வெங்காயம் விலையைக் குறைக்க கூட்டுறவுக் கடைகளில் கிலோ ரூ.33-க்கு விற்க தமிழக அரசு நடவடிக்க எடுத்துள்ளது. அதனால், வெங்காயம் விலை சற்றே குறைய ஆரம்பித்துள்ளது.
வெங்காயத்தைத் தொடர்ந்து தற்போது பூண்டு விலையும் உயரத்தொடங்கியுள்ளது. பொதுவாக பூண்டு கிலோ 100 ரூபாயில் இருந்து 300 ரூபாய் வரை தரத்தை பொறுத்து விற்பனையாகி வந்தது. இந்நிலையில் தற்போது ஒரு கிலோ பூண்டு ரூ.150 முதல் ரூ.500 வரை தரத்தை பொறுத்து விற்கப்படுகிறது.
இதுகுறித்து மதுரை காய்கறி வியாபாரி முருகன் கூறுகையில், ‘‘உருட்டாகவும், காரம் அதிகமாக இருக்கும் பூண்டு, தரமானது. இந்த வகை பூண்டு தற்போது ஒரு கிலோ ரூ.400 முதல் ரூ.500-க்குவிற்கிறது. மற்ற பூண்டுகளில் சிறியது, உடைத்தால் 5, 6 துண்டதாக உடையும் வகை உண்டு. அவை, அதன் தரத்தைப் பொறுத்து ரூ.150 முதல் ரூ.300 வரை விற்கப்படுகிறது. வரத்து குறைவாலே பூண்டு விற்பனை அதிகரித்துள்ளது.
தற்போது மழைநேரம் என்பதால் விவசாயிகள் பூண்டு அறுவடை செய்ய முடியவில்லை. மதுரைக்கு கொடைக்கானல், ஊட்டியில் இருந்து பூண்டு விற்பனைக்கு வருகிறது. அதுபோல், ஆந்திரா, கர்நாடகா மற்றும் வெளிமாநிலங்களில் இருந்தும் வருகிறது. அங்கெல்லாம் அண்மையில் பெய்த கனமழையால் அங்கிருந்து பூண்டு வரத்து குறைந்துள்ளது. மழை, வரத்து குறைவு காரணமாகவே பூண்டு விலை அதிகரித்துள்ளது’’ என்றார்.
+ There are no comments
Add yours