தெலங்கானா மாநில இடைநிலைக் கல்வி வாரியம் (TSBIE) முதல் மற்றும் இரண்டாம் ஆண்டுக்கான இடைநிலை பொதுத் தேர்வு 2024 முடிவுகளை நேற்று புதன்கிழமை வெளியிட்டது. இந்த முடிவுகள் வெளியான 30 மணி நேரத்திற்குள் குறைந்தது 7 மாணவர்கள் தற்கொலை செய்துகொண்டதாகக் கூறப்படுகிறது.
தெலங்கானா மாநிலம் முழுவதும் இது போன்ற தற்கொலை சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக போலீஸ் அதிகாரிகள் தெரிவித்தனர். மஞ்சேரியல் மாவட்டத்தில் உள்ள தண்டூரைச் சேர்ந்த 16 வயது இளைஞன் ஒருவர் முதலில் தற்கொலை செய்துகொண்டுள்ளார். அவர் முதலாம் ஆண்டில் நான்கு பாடங்களில் தோல்வியடைந்ததாகவும், தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாகவும் உள்ளூர் போலீசார் தெரிவித்தனர்.
அவரைத் தவிர, தற்கொலை செய்துகொண்ட மற்ற அனைவரும் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட தேர்வில் தோல்வியடைந்த 16 அல்லது 17 வயதுடைய மாணவிகள் ஆவர். அவர்கள் தூக்கில் தொங்கியோ, சமுதாய கிணற்றில் குதித்தோ, அல்லது குளத்தில் மூழ்கியோ தங்கள் உயிரை மாய்த்துக் கொண்டதாக போலீசார் தெரிவித்தனர். அவர்கள் அனைவரும் ராஜேந்திரநகர், ஹைதராபாத், கம்மம், மஹபூபாபாத் மற்றும் கொல்லூர் ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என்றும் போலீசார் தெரிவித்தனர்.
இந்த ஆண்டு ஜே.இ.இ முதன்மைத் தேர்வில் அதிக மதிப்பெண் பெற்றவர்களின் எண்ணிக்கையை தெலங்கானா மாநிலம் பதிவு செய்தது. நாடு முழுவதும் 100 சதவீதம் தேர்ச்சி பெற்ற 56 பேரில் 15 பேர் தெலுங்கானாவை சேர்ந்தவர்கள். கடந்த மூன்று ஆண்டுகளாக, மாநிலம் அதிக எண்ணிக்கையிலான ஜே.இ.இ மெயின் டாப்பர்களை அம்மாநிலம் கொண்டுள்ளது. அப்படி இருந்தபோதும், இதுபோன்ற தற்கொலை சம்பவங்கள் நடந்திருப்பது அம்மாநில மாணவர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த பிப்ரவரி-மார்ச் மாதங்களில் நடத்தப்பட்ட இடைநிலைத் தேர்வில் 9.8 லட்சத்திற்கும் அதிகமான மாணவர்கள் எழுதினர். கடந்த ஆண்டை விட இரண்டு வாரங்களுக்கு முன்னதாகவே முடிவுகள் வெளியிடப்பட்டன. இதில், 61.06% மாணவர்கள் (2.87 லட்சம்) முதல் ஆண்டில் (11 ஆம் வகுப்புக்கு சமமானவர்கள்), 69.46% (3.22 லட்சம்) இரண்டாம் ஆண்டு (12 ஆம் வகுப்புக்கு சமமானவர்) தேர்வில் தேர்ச்சி பெற்றனர். தோல்வியடைந்த மாணவர்களுக்கான உயர்நிலை துணைத் தேர்வுகள் மே 24-ம் தேதி தொடங்குகிறது.
தேர்வு முடிவுகளை வெளியிடும் போது, மாணவர்கள் மோசமான முடிவுகளால் மனம் தளராமல், துணைத் தேர்வுகளைப் பயன்படுத்திக் கொள்ளுமாறு முதன்மைச் செயலாளர் (கல்வி) புர்ரா வெங்கடேசன் கேட்டுக் கொண்டுள்ளார். “இது ஒரு தேர்வு மட்டுமே என்பதை நினைவில் கொள்ளுங்கள், உங்கள் முழு வாழ்க்கையும் அல்ல. இன்று பல ஐஏஎஸ் அதிகாரிகள் இந்த தேர்வில் மூன்றாம் வகுப்பில் தேர்ச்சி பெறவில்லை, உயர் பதவிகளில் உள்ள பலர் தோல்வியடைந்துள்ளனர், எனவே தயவு செய்து இதைப் பற்றி கவலைப்பட வேண்டாம், ”என்று அவர் கூறினார்.
முந்தைய ஆண்டுகளைப் போலவே, தெலுங்கானா மாநில இடைநிலைக் கல்வி வாரியமானது அனைத்து ஜூனியர் கல்லூரிகளிலும் மாணவர்களுக்கு தேர்வு அழுத்தத்தை சமாளிக்க உதவும் ஆலோசகர்களை ஏற்பாடு செய்துள்ளது. டெலி மென்டல் ஹெல்த் அசிஸ்டன்ஸ் மற்றும் நெட்வொர்க்கிங் அகிராஸ் தி ஸ்டேட்ஸ் (Tele-MANAS) சேவை ஆண்டு முழுவதும் நடைமுறையில் உள்ளது. குறிப்பாக வருடாந்திர மற்றும் துணைத் தேர்வுகள் மற்றும் முடிவுகள் அறிவிக்கப்பட்ட காலக்கட்டத்தில் மாணவர்களுக்கு ஆலோசனை வழங்குகிறார்கள். மாணவர்கள், 14416 என்ற கட்டணமில்லா எண்ணைத் தொடர்பு கொண்டு, உளவியல் நிபுணர்கள் மற்றும் மனநல மருத்துவர்களை ஆலோசனை மற்றும் வழிகாட்டுதலுக்காகத் தொடர்பு கொள்ளலாம்.
2019 இல் இடைநிலை முடிவுகள் அறிவிக்கப்பட்ட பிறகு தெலுங்கானா முழுவதும் குறைந்தது 22 மாணவர்கள் தற்கொலை செய்துகொண்டனர். ஆண்டு தேர்வு மற்றும் மதிப்பீட்டு செயல்முறை தவறான குற்றச்சாட்டுகளால் சிதைக்கப்பட்டது.
தேசிய குற்ற ஆவணக் காப்பகத்தின் கூற்றுப்படி, 2022 ஆம் ஆண்டில் நாட்டில் 12,522 மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டதில், தெலுங்கானா 5% க்கும் குறைவானது. மகாராஷ்டிரா (13.5% அல்லது 1,764), தமிழ்நாடு (10.9% அல்லது 1,416), மற்றும் மத்தியப் பிரதேசம் (10.3% அல்லது 1,340) ஆகியவை மாணவர்களின் தற்கொலை விகிதத்தில் முதல் மூன்று மாநிலங்களாகும்.
28 மாநிலங்களில் தெலுங்கானா 11-வது இடத்தில் உள்ளது, அந்த ஆண்டில் 543 மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டனர். ஒட்டுமொத்தமாக, தெலுங்கானா 2022 ஆம் ஆண்டில் பல்வேறு பிரிவுகளில் சுமார் 10,000 தற்கொலைகள் நடந்துள்ளன.
+ There are no comments
Add yours