மியான்மருக்கு வருகை தரும் சீன மற்றும் இந்திய சுற்றுலாப் பயணிகள், வருகையின் போது விசா வழங்கப்பட உள்ளதாக செய்தி வெளியாகி உள்ளது. வெளிநாட்டு பயணிகளின் வருகையை அதிகரித்து, அவர்கள் மூலம் வருவாய் ஈட்டுவதற்கு ஆட்சியாளர்கள் முடிவு செய்துள்ளனர்.
இந்தியா மற்றும் சீனாவில் இருந்து வரும் பயணிகளுக்கு ‘வருகை விசா’ வழங்கப்படுகிறது. ஓராண்டுக்கு சோதனை அடிப்படையில் இந்த திட்டம் செயல்படுத்தப்பட உள்ளதாகவும், விரைவில் இதுகுறித்த அறிவிப்பு வெளியாகும் எனவும், குடிவரவு அமைச்சக செய்தியை மேற்கோள் காட்டி அரசின் குளோபல் நியூ லைட் நாளிதழ் செய்தி வெளியிட்டிருக்கிறது. ‘வருகை விசா’ பெற்றவர்கள், பாதுகாப்பு காரணங்களுக்காக தடைசெய்யப்பட்ட பகுதிகளை தவிர மற்ற அனைத்து சுற்றுலா தலங்களையும் பார்வையிட அனுமதிக்கப்படுவார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்போது இந்தியா மற்றும் சீன மக்கள் மியான்மரின் சுற்றுலா விசாவிற்கு ஆன்லைன் மூலமாகவோ அல்லது மியான்மர் தூதரகத்திலோ விண்ணப்பிக்க வேண்டும். வருகை விசா நடைமுறைக்கு வந்த பிறகு, இரு நாட்டு சுற்றுலா பயணிகளும் மியான்மர் வந்தபின்னர், தேவையான ஆவணங்களுடன் விமான நிலையத்திலேயே விண்ணப்பித்து விசா பெற முடியும்.
மியான்மரில் கடந்த 2021ம் ஆண்டு ராணுவம், ஆட்சியை கவிழ்த்து அதிகாரத்தை கைப்பற்றியது. இதற்கு எதிராக தொடர் போராட்டங்கள் நடைபெறுகின்றன. இந்த எதிர்ப்பை சமாளிக்க ராணுவம் போராடி வருகிறது. இவ்வாறு அமைதியற்ற சூழல் நிலவுவதால் அமெரிக்கா, ஆஸ்திரேலியா உள்ளிட்ட சில நாடுகள் மியான்மருக்கு பயணம் செய்வதை தவிர்க்கும்படி தங்கள் நாட்டு மக்களுக்கு அறிவுறுத்தி உள்ளன. அதேசமயம் அண்டை நாடுகளான சீனாவும், இந்தியாவும் தொடர்ந்து மியான்மருடன் நட்புறவை பராமரிக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
+ There are no comments
Add yours