மகாராஷ்டிரா மாநிலத்தில் மும்பையில் இருந்து சுமார் 350கிமீ தொலைவில் உள்ள சத்ரபதி சம்பாஜிநகர் மாவட்டத்தில் சம்ருத்தி பகுதி விரைவுச் சாலையில் இன்று (அக்டோபர் 15) அதிகாலையில் பயணிகளை ஏற்றி சென்ற டெம்போ வேன் ஒன்று கண்டெய்னர் லாரி மீது மோதி விபத்துக்குள்ளானதில் 12 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
மகாராஷ்டிரா மாநிலம் நாசிக்கில் இருந்து சத்ரபதி சம்பாஜிநகர் மாவட்டத்தில் உள்ள பாபா தீர்த்த யாத்திரை தலத்திற்கு ஆன்மீக பயணமாக 35 பேர், பயணிகளை ஏற்றிச்செல்லும் டெம்போ வேனில் சென்றுள்ளனர். அவர்கள் சம்ருத்தி பகுதி விரைவுச் சாலையில் சென்று கொண்டிருக்கும் போது, வேன் ஓட்டுநர் கட்டுப்பாட்டை இழந்து எதிரே சென்று கொண்டு இருந்த கண்டெய்னர் மீது பலமாக மோதியதாக தெரிகிறது.
இந்த பயங்கர விபத்தில் சம்பவ இடத்திலேயே 5 ஆண்கள், 6 பெண்கள் 1 பதின்ம வயது பெண் உட்பட 12 பேர் உடல் நசுங்கி உயிரிழந்தனர். மேலும் 23 பேர் படுகாயமடைந்து மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். 17 பேர் அவுரங்காபாத்தில் உள்ள மருத்துவமனையிலும், மீதமுள்ள 6 பேர் வைஜாபூரில் உள்ள மருத்துவமனையிலும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
சிகிச்சை பெற்று வருபவர்களில் ஒரு சிலர் பலத்த காயமடைந்துள்ளதால் அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. விபத்து குறித்து அறிந்த உடன் சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் , வழக்கு பதிவு செய்து விபத்து எவ்வாறு நடந்தது என தீவிர விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.
12 பேர் உயிரிழந்த இந்த கோர விபத்திற்கு மகாராஷ்டிர முதல்வர் ஏக்நாத் ஷிண்டே இரங்கல் தெரிவித்துள்ளார். மேலும், உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு தலா 5 லட்சம் ரூபாய் நிவாரண உதவி வழங்கப்படும் எனவும் அறிவித்துள்ளார்.
+ There are no comments
Add yours