19 வது ஆசிய விளையாட்டுப் போட்டியானது சீனாவின் ஹாங்சோவ் நகரில் கோலாகலமாக நடைபெற்று வருகிறது. அந்த வகையில் 7வது நாளாக நடைபெற்று வரும் ஆசிய விளையாட்டுப் போட்டியில், டென்னிஸ் கலப்பு இரட்டையர் பிரிவில் இந்தியா தங்கம் வென்றுள்ளது. இதனால் பதக்கப் பட்டியலில் இந்தியாவிற்கு மேலும் ஒரு தங்கம் சேர்ந்துள்ளது.
அதன்படி, டென்னிஸ் கலப்பு இரட்டையர் பிரிவில் இந்தியா சார்பாக ரோஹன் போபண்ணா மற்றும் ருதுஜா போசலே ஜோடி விளையாடினர். இவர்களுக்குப் போட்டியாக, தைவான் (சீன தைபே) நாட்டைச் சேர்ந்த என்-சுவோ, சுங்-ஹாவ் ஜோடி விளையாடினார்கள். இதில் 33 நிமிடங்கள் நடந்த முதல் செட்டில் தைவான் 6 புள்ளிகளும், இந்தியா 2 புள்ளிகளும் எடுத்தது.
இரண்டு மற்றும் மூன்றாவது செட்டுகள் முறையே, இந்தியா 6 மற்றும் 10 புள்ளிகளும், தைவான் 3 மற்றும் 4 புள்ளிகளும் எடுத்தது. இதனால் இந்தியா மொத்தமாக 2 செட்களில் முன்னிலையில் பெற்று தைவானை வீழ்த்தி, டென்னிஸ் கலப்பு இரட்டையர் பிரிவில் தங்கப்பதக்கத்தைத் தட்டிச் சென்றது.
தற்போது, ஆசிய விளையாட்டுப் போட்டியில் 35 பதக்கங்களை பெற்று இந்திய அணி பதக்கப்பட்டியலில் 5வது இடத்தில் உள்ளது. அதன்படி, இந்தியா இதுவரை நடந்த போட்டிகளில் 9 தங்கம், 13 வெள்ளி, 13 வெண்கலப்பதக்கங்களை வென்றுள்ளது. முன்னதாக 4 வது இடத்தில இருந்த இந்தியாவை விட, உஸ்பெகிஸ்தான் ஒரு பதக்க (36) வித்தியாசத்தில் முந்தியுள்ளது.
அந்த வகையில், சீனா 107 தங்கம், 65 வெள்ளி மற்றும் 33 வெண்கலம் என 204 பதக்கங்களுடன் பட்டியலில் முதல் இடத்தில் உள்ளது. அதேபோல, ஜப்பான் 28 தங்கம், 36 வெள்ளி மற்றும் 38 வெண்கலம் என 102 பதக்கங்களுடன் இரண்டாவது இடத்திலும், கொரியா 27 தங்கம், 28 வெள்ளி மற்றும் 53 வெண்கலம் என 108 பதக்கங்களுடன் மூன்றாவது இடத்திலும் உள்ளது.
+ There are no comments
Add yours