வெற்றியை கொண்டாட தயாராகும் பாஜக !

Spread the love

கருத்துக்கணிப்புகள் உபயத்தால் மக்களவைத் தேர்தலில் மூன்றாம் முறையாக மோடி தலைமையிலான வெற்றியை உறுதி செய்திருக்கும் பாஜக, உற்சாகத்துடன் அதனை கொண்டாடத் தயாராகி வருகிறது.

தேர்தலில் கருத்துக்கணிப்புகள் என்பவை உறுதியானவை மற்றும் இறுதியானவை அல்ல. கருத்துக்கணிப்புகள் நமுத்துப்போனதற்கும், கணிப்பையும் விஞ்சி பெருவெற்றி பெற்றதற்கும் வரலாற்றில் நிறைய உதாரணங்கள் உள்ளன. ஆனால் கருத்துக்கணிப்பு முடிவுகளுக்கு முன்பிருந்தே தனது அமோக வெற்றியை முரசறைந்து வந்திருக்கும் பாஜக, கூடுதலாக கருத்துக்கணிப்பு முடிவுகளும் சேர்ந்ததில் அவர்களின் உற்சாகம் ஓரடுக்கு உயர்ந்துள்ளது.

மோடி மூன்றாவது முறையாக ஆட்சியமைக்கப் போகிறார் என்ற கருத்துக்கணிப்புகளின் அடிப்படையிலும், தங்களது தனிப்பட்ட பெருமிதங்கள் பலிக்கும் உற்சாகத்திலும் பாஜக திளைத்துள்ளது. இதன்பொருட்டு தேசத்தின் தலைநகர் டெல்லியிலும் பிற இடங்களிலும், பாஜக தனது வெற்றிக் கொண்டாட்டங்களுக்கான ஆயத்தங்களை சத்தமின்றி திட்டமிட்டு வருகிறது. அதில் முக்கியமானதாக மோடியின் பதவியேற்பு விழாவுக்குப் பின்னர் டெல்லியின் பிரதான இடங்களில் கொண்டாட்டங்களை மேற்கொள்ளத் திட்டமிட்டு வருகிறது.

அந்த பரிசீலனையில் பாரத் மண்டபம், யஷோபூமி, கர்தவ்யா பாதை உள்ளிட்டவை முதல் சுற்றில் இடம்பெற்றுள்ளன. இங்கெல்லாம் பிரம்மாண்டமான வகையில் பாஜக வெற்றிக் கொண்டாட்டங்கள் நடக்க இருக்கின்றன. அவற்றில் ஒன்றில் மோடியின் பதவியேற்பினை ஒட்டிய பிரம்மாண்ட விழாவும் நடேந்தேற திட்டமிடப்பட்டுள்ளது.

இவற்றுடன் பிரதமரின் அதிகாரப்பூர்வ இல்லம் அமைந்துள்ள டெல்லியின் லோக் கல்யாண் மார்க்கில் இருந்து பாஜக தலைமை அலுவலகம் வரை பிரம்மாண்ட ரோடு ஷோ நிகழ்வுக்கும் திட்டமிடப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த வெற்றி நிகழ்வில் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொள்வார்கள் எனவும் சொல்லப்படுகிறது. மும்பையிலும் கொண்டாட்டங்கள் திட்டமிடப்பட்டுள்ளன. அங்கு பாஜக தலைமை 10,000 லட்டுகளுக்கு ஆர்டர் செய்திருப்பது ஏற்கெனவே பரபரப்பை கூட்டியுள்ளது.

மக்களவைத் தேர்தலில் பாஜக அமோக வெற்றி பெறும் என்று, நேற்று முன்தினம் வெளியான, வாக்குப்பதிவுக்கு பிந்தைய சுமார் ஒரு டஜன் கருத்துக் கணிப்புகள் தெரிவித்துள்ளன. தேசிய அளவிலான இந்த கருத்துக்கணிப்புகள், பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு சுமார் 360 இடங்களை வழங்கியது. ஆட்சி அமைக்க அவசியமான 272 என்ற மேஜிக் நம்பரைவிட இது அதிகம் என்பதால் பாஜக தலைவர்கள் மத்தியிலும் மகிழ்ச்சி தாண்டவமாடுகிறது.

தெற்கில் கேரளா மற்றும் தமிழ்நாட்டில் பாஜக தனது தொடக்க தடத்தை பதிவு செய்யும் என்றும், கிழக்கில் ஒடிசா மற்றும் மேற்கு வங்கத்தில் பெரும் வெற்றியைப் பெறும் என்பது போன்ற சுவாரசியங்களையும் அந்த கருத்துக்கணிப்புகள் கொண்டிருந்தன. தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகளை பாஜக வரவேற்றுள்ள நிலையில், எதிர்கட்சிகள் இந்த முன்னறிவிப்பை அடியோடு நிராகரித்துள்ளன.

வாக்கு எண்ணிக்கை நாளான நாளைய தினம் ஆச்சரியங்களை ஏற்படுத்தும் என்று நம்பிக்கையுடன் காத்துள்ளன. கருத்துக்கணிப்புகள் வெளியான நாளில் ’இந்தியா கூட்டணி’யின் தலைவர்கள் கூட்டத்தை கூட்டிய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே, மொத்தமுள்ள 543 இடங்களில் குறைந்தபட்சம் 295 இடங்களையாவது கைப்பற்றுவோம் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார். ஆனால் பாஜகவின் உற்சாகத்துக்கு முன்பாக எதிர்கட்சிகளின் இந்த நம்பிக்கை சுரத்திழந்தே காணப்படுகிறது.


Spread the love

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours