புதுடெல்லி: குற்றம் சாட்டப்பட்டவர் என்பதற்காக அவரது வீட்டை எப்படி இடிக்கமுடியும் என மாநில அரசுகளுக்கு உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்பி உள்ளது.
உத்தரப் பிரதேசம், மத்திய பிரதேசம், ராஜஸ்தான் உள்ளிட்ட சில மாநிலங்களில் குற்றச் செயலில் தொடர்புடையவர்களின் வீடு அல்லது கடைகளை சம்பந்தப்பட்ட மாநில அரசுகள் புல்டோசர்கள் மூலம் இடித்து வருகின்றன. குற்றச் செயலில் ஈடுபடுவோருக்கு உடனடியாக வழங்கப்படும் தண்டனையாக இது கருதப்படுகிறது.
இந்நிலையில், ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த ஒருவர் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். அதில், “என்னுடைய வீட்டில் வாடகைக்கு குடியிருப்பவரின் மகன் செய்த குற்றத்துக்காக என்னுடைய வீட்டை இடித்து விட்டனர்” என கூறியுள்ளார்.
இதுபோல மத்திய பிரதேசத்தைச் சேர்ந்த ஒருவர் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், “எங்களுடைய மூதாதையர் வீட்டில் நாங்கள் கூட்டுக் குடும்பமாக வசித்து வருகிறோம். இதில் ஒருவர் செய்த குற்றத்துக்காக எங்கள் வீட்டை இடித்துவிட்டனர்” என கூறியுள்ளார். இதுபோல மேலும் சிலர் மனு தாக்கல் செய்துள்ளனர்.
இது தொடர்பான அனைத்து மனுக்களும் நீதிபதிகள் பி.ஆர்.கவாய் மற்றும் கே.வி.விஸ்வநாதன் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு நேற்று விசாரணைக்கு வந்தன. அப்போது நீதிபதிகள் கூறும்போது, “ஒரு வழக்கில் குற்றம்சாட்டப்பட்டவர் என்பதற்காக அவரது வீட்டை எப்படி இடிக்க முடியும்? குற்றவாளி என நீதிமன்றம் தீர்ப்பு வழங்கினாலும் அவருடைய வீட்டை இடிக்க முடியாது. அதேநேரம் சாலைகள் மற்றும்பொது இடங்களை ஆக்கிரமித்து சட்டவிரோதமாக கட்டியுள்ள கட்டுமானங்களை நாங்கள் ஆதரிக்கவில்லை. ஆனால், சட்டப்படி இத்தகைய நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும்” என்றனர்.
அரசுத் தரப்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா வாதிடும்போது, “குற்றவழக்குகளில் தொடர்பு இருப்பதாகக் கூறி யாருடைய வீட்டையும் இடிக்கவில்லை. நகராட்சி நிர்வாக சட்டங்களின் கீழ் வகுக்கப்பட்டுள்ள விதிமுறைகளின்படிதான் இத்தகைய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன” என்றார்.
+ There are no comments
Add yours