கடந்த செப்டம்பர் 5-ஆம் தேதி நடைபெற்ற 6 மாநில இடைத்தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று காலை முதல் நடைபெற்று தற்போது இறுதி கட்டத்தில் உள்ளது. திரிபுராவில் இரண்டு தொகுதிகள், மேற்கு வங்கம், கேரளா, உத்தரப்பிரதேசம், ஜார்கண்ட், உத்தரகாண்ட் ஆகிய மாநிலங்களில் தலா ஒரு தொகுதி என 6 மாநிலங்களில் ஏழு சட்டமன்ற தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடைபெற்ற நிலையில், இன்று வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது.
இந்த நிலையில், வாக்கு எண்ணிக்கை கிட்டத்தட்ட முடிந்த நிலையில், இந்திய தலைமை தேர்தல் ஆணையம் தனது அதிகாரப்பூர்வ இணையதளத்தில் முடிவுகளை வெளியிட்டுள்ளது. இதில், 6 மாநிலங்களில் ஏழு சட்டமன்ற தொகுதிகளில், பாஜக 3, காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ், சமாஜ்வாதி மற்றும் இந்திய கூட்டணி ஆதரவுடன் ஜார்க்கண்ட் முத்தி மோர்ச்சா கட்சி என ஆகிய கட்சிகள் தலா ஒரு தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளனர்.
இடைத்தேர்தல் முடிவுகள்- மேற்கு வங்கம்:
மேற்கு வங்க மாநிலம் துப்குரி சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் திரிணாமுல் காங்கிரஸ் வேட்பாளர் வெற்றி பெற்றுள்ளார். துப்குரி சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் திரிணாமுல் காங்கிரஸ் வேட்பாளர் 4,313 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார். திரிணாமுல் காங்கிரஸ் வேட்பாளர் நிர்மல் சந்திர ராய் 96,961 வாக்குகள், பாஜக வேட்பாளர் தப்சி ராய் 92,648 வாக்குகள், மார்க்சிஸ்ட் வேட்பாளர் 13,666 வாக்குகள் பெற்றனர்.
துப்குரி சட்டமன்ற தொகுதியில் பாஜக எம்எல்ஏ மறைவை அடுத்து இடைத்தேர்தல் நடைபெற்றது. இந்த நிலையில், துப்குரி சட்டமன்ற தொகுதியை பாஜகவிடம் இருந்து கைப்பற்றியுள்ளது மேற்குவங்கத்தை ஆளும் திரிணாமுல் காங்கிரஸ். 2021ல் ஜம்மு காஷ்மீரில் தீவிரவாத தாக்குதலில் பலியான சிஆர்பிஎப் வீரர் மனைவியை வேட்பாளராக துப்குரி சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் பாஜக களமிறங்க்கியது.
காங்கிரஸ் ஆதரவுடன் தேர்தல் களம் கண்ட சிபிஎம் வேட்பாளர் ஈஸ்வர் சந்திர ராய் 3வது இடத்துக்கு தள்ளப்பட்டார். எனவே, மதவாத, வெறுப்பு அரசியலை வளர்ச்சி அரசியல் வென்றதாக திரிணாமுல் காங்கிரஸ் பொதுச்செயலாளர் அபிஷேக் பானர்ஜி தெரிவித்தார். மேலும், இந்த வெற்றியை தொடர்ந்து அக்கட்சி தலைவரும், முதலமைச்சருமான மம்தா பானர்ஜி தனது எக்ஸ் தள பக்கத்தில் பதிவிட்டார். அதில், மேற்குவங்க மக்களின் விருப்பத்தை போன்று விரைவில் இந்தியாவும் தனது விருப்பத்தை வெளிப்படுத்தும். திரிணாமுல் காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவளித்து வாக்களித்த மக்களுக்கு நன்றி தெரிவித்தார்.
ஜார்க்கண்ட்:
இதுபோன்று, தேர்தல் அரசியலில் இந்தியா கூட்டணிக்கு முதல் வெற்றி கிடைத்துள்ளது. ஜார்க்கண்டில் தும்ரி சட்டமன்ற தொகுதியில் நடைபெற்ற இடைத்தேர்தலில் ஜார்க்கண்ட் முத்தி மோர்ச்சா கட்சி வேட்பாளர் வெற்றி பெற்றுள்ளார். ஜார்க்கண்ட் முத்தி மோர்ச்சா கட்சி வேட்பாளர் பெபி தேவி 17,100 வாக்குகள் வித்தியாசத்தில் பாஜக கூட்டணி வேட்பாளரை தோற்கடித்தார். வெற்றி பெற்ற ஜேஎம்எம் வேட்பாளருக்கு காங்கிரஸ், ராஷ்டிய ஜனதா தளம் உள்ளிட்ட இந்தியா கூட்டணி ஆதரவு தெரிவித்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
திரிபுரா:
திரிபுரா மாநிலத்தின் தன்பூர், போக்சா நகர் ஆகிய 2 சட்டமன்ற தொகுதிகளில் நடந்த இடைத் தேர்தலில் பாஜக வேட்பாளர்கள் வெற்றி பெற்றனர். போக்சா நகர் தொகுதியில் பாஜக வேட்பாளர் டஃபஜல் ஹெசைன் 34,146 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். மார்க்சிஸ்ட் வேட்பாளர் மிசான் ஹெசைன் 3,909 வாக்குகள் மட்டுமே பெற்று தோல்வி அடைந்தார். தன்பூர் தொகுதியில் பாஜக வேட்பாளர் பிந்து தேவ்நாத் 30,017 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளார். மார்க்சிஸ்ட் வேட்பாளர் கவுஷிக் 11,146 வாக்குகள் பெற்று தோல்வி அடைந்தார்.
கேரளா:
கேரள மாநிலம் புதுப்பள்ளி இடைத்தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர் உம்மன் சாண்டி மகன் சாண்டி உம்மன் அபார வெற்றி பெற்றுள்ளார். 36,454 வாக்குகள் வித்தியாசத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் ஜெய்க்சி தாமஸை தோற்கடித்தார் சாண்டி உம்மன். இடைத்தேர்தலில் சாண்டி உம்மன் 78.098 வாக்குகள், மார்க்சிஸ்ட் வேட்பாளர் ஜெய்க்சி தாமஸ் 41,644 வாக்குகள், பாஜக வேட்பாளர் லிஜின் லால் 6,447 வாக்குகள் பெற்றனர்.
உத்தரகாண்ட்:
உத்தரகாண்ட் மாநிலம் பாகேஸ்வர் தொகுதியில் பாஜக எம்.எல்.ஏ சந்தன் ராம் தாஸ் மறைவால் அங்கும் இடைத்தேர்தல் நடந்தது. இதில் தற்போது, பாஜக சார்பில் தாஸின் மனைவி பார்வதி தாஸ் வெற்றி பெற்றார். பார்வதி தாஸ் 33,247 வாக்குகள், காங்கிரஸ் வேட்பாளர் பசந்த் குமார் 30842 வாக்குகள் பெற்று இரண்டாம் இடம் பிடித்தார்.
உத்தரபிரதேசம்:
மேலும், உத்தரபிரதேசம் மாநிலம் கோஷி சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் சமாஜ்வாதி கட்சி வேட்பாளர் சுதாகர் சிங் வெற்றி பெற்றுள்ளார். கோஷி சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் சமாஜ்வாதி கட்சி வேட்பாளர் சுதாகர் சிங் மொத்தம் 101012 வாக்குகள் ( முன்னிலை 35033) பெற்று வெற்றி பெற்றுள்ளார். பாஜக வேட்பாளர் தாராசிங் சவுகான் 65979 வாக்குகள் (பின்னடைவு 35033) பெற்று தோல்வியை சந்தித்தார். மேலும், உத்தரபிரதேச மாநிலத்தில் யோகி ஆதித்யநாத் தலைமையிலான பாஜக ஆட்சி நடக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. இருப்பினும், வெற்றி உறுதி, இந்த தொகுதிக்கு மட்டும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகவில்லை.
+ There are no comments
Add yours