இந்திய அரசால் தேடப்படும் தீவிரவாதி என அறிவிக்கப்பட்டிருந்த காலிஸ்தான் அமைப்பை சேர்ந்த ஹர்தீப் சிங் நிஜார் எனும் பிரிவினைவாதி, கடந்த ஜூன் மாதம் 18ம் தேதி கனடாவின் சுர்ரே நகரில் கொல்லப்பட்டார். இந்த விவகாரத்தில் கனடா மற்றும் இந்தியா ஆகிய இரு நாடுகளின் இடையே உள்ள உறவில் விரிசல் ஏற்பட்டுள்ளது.
இதைத்தொடர்ந்து இந்தியாவும், கனடாவும் அந்தந்த நாடுகளில் உள்ள தூதர்களை வெளியேற்ற உத்தரவிட்டன. இந்த நேரத்தில் கனடா நாட்டின் விண்ணப்பெக் பகுதியில் மற்றொரு காலிஸ்தான் தீவிரவாதி சுக்தூல் சிங் சுட்டுக்கொலை செய்யப்பட்டார். கனடாவில் இரு கும்பல்களுக்கு இடையே நடந்த துப்பாக்கி சண்டையில் சுக்தூல் சிங் கொல்லப்பட்டார் எனக் கூறப்படுகிறது.
ஏற்கனவே முதல் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், இந்த சம்பவம் இரு நாடுகளிடையே விரிசலை மேலும் பெரிதாக்கியது. இந்த நேரத்தில், கனடாவில் இருந்து இந்தியா வருவதற்கு வழங்கப்படும் விசாவை தற்காலிகமாக நிறுத்த சொல்லி கனடா நாட்டில் உள்ள இந்திய தூதரகத்திற்க்கு மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. இந்த தடை மூலம் கனடா நாட்டில் இருந்து யாரும் இந்தியா வரமுடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.
இத்தகைய சூழலில் கனடா அரசு, அமெரிக்கா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து ஆகிய நாடுகளிடையே பேச்சு வார்த்தை நடத்தி வருகிறது. அதன்படி, இந்த நாடுகளால் உருவாக்கப்பட்ட “ஃபைவ் ஐஸ்” உளவுத்துறை கூட்டணி பல தகவல்களைப் பகிர்ந்து வருகிறது. இந்நிலையில், இந்த அமைப்பின் மூலம் பகிரப்படும் தகவல்களில் ஹர்தீப் சிங் நிஜார் கொலை பற்றிய தகவல்களையும் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்று கனடா பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.
இந்த பேச்சு வார்த்தை மூலம் சில தகவல்களை கனடா பெற்றிருப்பதாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில் கனேடிய பிரதமர் ட்ரூடோ, நாங்கள் பிரச்சனைகளைத் தூண்டவோ அல்லது பிரச்சனைகளை ஏற்படுத்தவோ பார்க்கவில்லை. நாங்கள் எங்கள் மக்களை பாதுகாப்பதில் கவனம் செலுத்துகிறோம். இந்த விஷத்தை மிகவும் தீவிரமாக எடுத்துக் கொண்டு, எப்படி இந்த சம்பவங்கள் நடக்கிறது.? யார் இதையெல்லாம் செய்கிறார்கள்.? என்று கண்டுபிடித்து, உண்மையை வெளியேக் கொண்டுவர கனடாவுடன் இணைந்து பணியாற்றுமாறு இந்திய அரசாங்கத்தைக் கேட்டுக்கொண்டுள்ளார்.
+ There are no comments
Add yours